வெள்ளி, 29 மே, 2020

பிரதமர், முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்: புதிய மின்சார திருத்த சட்டத்தை கைவிடுங்கள்

பிரதமர், முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!மின்ன்னம்பல்ம் : புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் 2020 க்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைக் கைவிடுமாறு பிரதமருக்கும், பாஜக கூட்டணி ஆளாத மாநில முதல்வர்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
“நமது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு மட்டுமல்ல; இன்றைக்கு நமது நாடு சிறந்து விளங்குவதற்கு அவர்கள் இன்றியமையாத பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள். ஆனால், அவர்கள் கடந்து வந்த பாதை இலகுவானதாக இல்லை - பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகே அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. அத்தகைய போராட்டங்களில், மிக முக்கியமானது,

தமிழ்நாட்டில் மின் கட்டணக் குறைப்பு மற்றும் இலவச மின்சாரம் ஆகியவற்றை வலியுறுத்தி அப்போதைய விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த திரு. நாராயணசாமி அவர்களின் தலைமையில் கோயமுத்தூரில் நடைபெற்ற மாபெரும் போராட்டமாகும். கடன் மற்றும் மோசமான விளைச்சல் ஆகிய சுமைகளால், எந்தவிதமான நிவாரணமும் கிடைக்காத விவசாயிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.
விவசாயிகளின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து- 1989ல் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ‘விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்’ என்று வாக்குறுதியை கலைஞர் அளித்தார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்து – மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற கலைஞர் இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து- செயல்படுத்தினார். அத்திட்டம் 1990-லிருந்து இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம்தான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கி, உணவுப் பற்றாக்குறையை போக்கியதுடன் இலட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாத்தது” என்று இலவச மின்சாரத்தின் வரலாற்றை நினைவுபடுத்தியுள்ள ஸ்டாலின்,
“இத்தகைய திட்டத்தை முடக்கும்விதமாக, இலட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் விதமாகவும் மின்சார திருத்தச் சட்டம் 2020 உள்ளது. மேலும், கொரோனா தொற்று மற்றும் அதனால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது மத்திய அரசின் பொறுப்பற்ற முடிவு மட்டுமில்லாமல் – திறம்பட கையாள வேண்டிய கொரோனா பேரிடரிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதுமாகும்.
மேலும், நமது அரசியல் சட்டப்படி மின்சாரம் பொதுப்பட்டியலில் (Entry 38) இருக்கிறது. மின் நுகர்வு மீதான வரி, மின் விற்பனை மீதான வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் (Entry 54) உள்ளது. இந்நிலையில் புதிதாக 2020-ம் ஆண்டு புதிய மின்சார திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய மின்சாரச் சட்டத் திருத்தம் 2020-ன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் கீழ் 246வது பிரிவு வழங்கியுள்ள மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தையும் - மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் (Concurrent List) பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரத்தையும் மீறுவதாக உள்ளது.
புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தில் உள்ள மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்குத் தலைவர், உறுப்பினர்களைக் கூட மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தேர்வுக் குழுவே தேர்வு செய்வது, 5 பேர் கொண்ட அந்த தேர்வுக் குழுவில் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களில் இருவர் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பது. அது கூட ஒரு வருடப் பதவிக்காலம் கொடுக்கப்பட்டு - மாநிலங்களின் பெயர் அகரவரிசைப்படி (Alphabetical) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால் - மாநில ஆணையத்தின் பணியை வேறொரு மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கவனிக்க உத்தரவிடும் மத்திய அரசுக்கான அதிகாரம், மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல் மத்திய அரசின்கீழ் அமைக்கப்படும், மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் (Electricity Contract Enforcement Authority) ஒன்றே தீர்வு காணும் என்பதும் – மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் இப்படியொரு ஆணையத்தை உருவாக்குவது, மின் ஒப்பந்த அமலாக்க ஆணையத்தில் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை ஆகிய அம்சங்கள் மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும், அரசியல் சாசனம் வகுத்துள்ள கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது” என்று பட்டியலிட்டுள்ளார் ஸ்டாலின்.
மேலும் அவர், “மீண்டும் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய பா.ஜ.க.,விற்கு மக்கள் அளித்த வாக்குகளை- மாநிலங்களின் அதிகாரங்களை பறிப்பதற்கோ, அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கோ பயன்படுத்துவது- ஆரோக்கியமான மத்திய- மாநில உறவுகளுக்கு உகந்ததல்ல. மின்சாரத்தை தனியார்மயமாக்க மாநில அரசின் நிறுவனங்களை மத்திய அரசு மயமாக்குவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
எனவே, மாநிலங்கள் சட்டமியற்றும் அதிகாரத்தை பறிக்கும் புதிய மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐ திரும்பப் பெற்றிட வேண்டும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவினை கைவிட்டிட வேண்டும்” என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார்,.
இதே கடித விவரங்களை பாஜக ஆளாத மாநில முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள ஸ்டாலின், “இத்தகைய நிலையில், அரசியல் சட்டம் வழங்கியுள்ள மாநில உரிமைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாத்திடும் முயற்சிக்கு தாங்கள் துணை நின்றிட வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக