செவ்வாய், 5 மே, 2020

கொரோனா பாதிப்பால் இரண்டு ரூபாய் டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் உயிரிழப்பு


பாண்டியன் சுந்தரம் : கொரோனா தீநுண்கிருமி பாதிப்பால் இரண்டு ரூபாய் டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் மரணம்!
ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்த இரண்டு ரூபாய் டாக்டர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட 76 வயதான டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார்.
டாக்டர் இஸ்மாயில் ஹுசைன் கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். முதல் நாள் நள்ளிரவு வரை நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்துவிட்டு படுத்த இஸ்மாயில் அதிகாலையில் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் இரு தினங்களிலேயே அவர் உயிரிழந்தார். அவர் மரணித்த பின்பே அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகியது. அதுவே அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்தது.கொரானா நோயாளிகள் யாருக்கும் அவர் வைத்தியம் பார்க்கவில்லை. ஆனால் சிவப்பு மண்டலம் உள்ள பகுதியில் அவர் வசித்து வந்தார். அவரிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் யாருக்காவது தங்களுக்குத் தெரியாமலேயே கொரானா தொற்று இருந்திருக்க வாய்ப்புண்டு.

அவருக்குத் தனியாக மருத்துவமனை என்று எதுவும் கிடையாது தன்னுடைய வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்தார்.கொரானா பாதிப்பு ஏற்பட்ட ஆரம்பத்தில் வைத்தியம் பார்க்க வேண்டாம் என்று பலரும் கேட்டுக் கொள்ள சில நாட்கள் தனித்திருந்தார். ஆனாலும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. தொடர்ந்து நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் வந்துகொண்டே இருக்க தன்னுடைய உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் வைத்தியம் பார்க்க ஆரம்பித்து தொடர்ந்து வைத்தியம் பார்த்து வந்தார்.
ஏழைகளின் காவலன் என்று பெயர் பெற்ற டாக்டர் கே.எம்.இஸ்மாயில் ஹுசைன், பணத்தைப் பற்றி கவலைப் பட மாட்டார். 1980 மற்றும் 1990களில் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக வாங்கி வந்தார். பணம் இல்லாதவர்களிம் பணம் வாங்காமலேயே இலவச சிகிச்சை அளித்து வந்தார். இதனால் அவரது வீட்டின் வெளியே அதிக அளவில் கூட்டம் வரிசையில் நிற்கும். மேலும் நடு இரவில் உடல் முடியாதவர்கள் சென்றாலும் இந்த வயதிலும் மறுக்காமல் சிகிச்சை அளிக்கக் கூடியவர் இஸ்மாயில் ஹுசைன்.இரவு 2 மணி வரை தொடர்ந்து நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வருவார் இவர்.
சமீப காலமாக அவர் 10 அல்லது 20 ரூபாய் கட்டணமாகப் பெற்று வந்தார். எனினும் அதனை கை நீட்டி வாங்க மாட்டார். அங்கிருக்கும் ஒரு பெட்டியில் போட்டுவிட்டுப் போகச் சொல்வார். அதில் எவ்வளவு இருந்தாலும் அதைப் பற்றி அவர் சிந்தித்ததோ, கேட்டதோ கிடையாது. ஏனெனில் பல ஏழைகள் பணம் இல்லாமல் சிகிச்சைக்கு வருவார்கள் என்று அவருக்குத் தெரியும். அதனாலேயே அவர் பணம் வாங்குவதை தவிர்த்து வந்தார்.
அவரது இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அவரது வீடு மற்றும் மருத்துவமனை இப்போது சீல் வைக்கப்பட்டிருக்கிறது. ஊர் மொத்தமும் கலந்து கொள்ள வேண்டிய அவரது இறுதிச் சடங்கு ஊரடங்கு சட்டத்தாலும், கொரோனா பரவலாலும் ஐந்து பேர் மட்டுமே கலந்து கொண்டதாக
அமைந்தது பெரும் வேதனை அளிக்கிறது என்று அவரது நண்பர் ஷஃபாத் அஹமது தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக