சனி, 16 மே, 2020

கொரொனா தடுப்பு : அடிப்படை கோளாறு.. சவுக்கு

savukkuonline.com/ : பொது முடக்கத்தை விலக்க மத்திய அரசு அடிப்படை தரவாக எடுத்துக் கொண்ட புள்ளி விபரம், சரிபார்க்கப்படாத விபரங்கள்,  தவறான பெயர்கள், என பல குளறுபடிகளை கொண்டிருந்தது.   சில மாநிலங்கள், இந்த புள்ளிவிபரத்தை நிராகரித்து,  சொந்த புள்ளி விபரங்களை பயன்படுத்தின.  ஐந்து மாநிலங்களில் மட்டும்தான், மத்திய மற்றும் மாநில அரசுகளின் புள்ளி விபரங்கள் பொருந்தின.
பொது முடக்கத்தை தளர்த்தவும், கொரொனா பரவலை கண்காணிக்கவும், மத்திய அரசு, இந்திய மருத்துவ ஆராயச்சிக் கழகத்தின் புள்ளி விபரங்களை (டேட்டா பேஸ்) பயன்படுத்தியது.  அந்த டேட்டாபேஸ் பல்வேறு பிழைகளை கொண்டிருந்தது என்பது நமக்கு கிடைத்திருக்கும் பிரத்யேகமான ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.

இந்தியாவில் முதல் கொரொனா தொற்று கண்டறியப்பட்டு 107 நாட்களுக்கு பிறகு, 14 மே அன்று, மத்திய அரசு, இந்தியாவில் 78,000 தொற்றுகள் இருப்பதாக அறிவித்துள்ளது.  ஆனால், இந்த விபரங்களை அறிவிக்க  அரசு நம்பியுள்ள ஐ.சி.எம்.ஆரின் புள்ளிவிபர சேகரிப்பு முறை  பல்வேறு பிழைகள் அடங்கியது என்பது நமது புலனாய்வில் தெரிய வருகிறது.
29 ஏப்ரல் அன்று, ஐ.சி.எம்.ஆரின் புள்ளிவிபரம் தேசிய நோய் தடுப்பு மையத்தின் (National Center for Disease Control NCDC) புள்ளி விபரங்களை விட 5024 நோய் தொற்றுகளை கூடுதலாக காண்பித்தது.  இந்த இரு புள்ளி விபரங்களையும் ஒப்பிடுகையில், ஐந்து மாநிலங்கள் மற்றும், மூன்று யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இவை ஒத்துப்போனது என்பது தெரிய வந்தது.  இதர மாநிலங்களின் எண்ணிக்கையை இந்த இரு புள்ளிவிபரங்களோடு ஒப்பிட்டால் எண்ணிக்கையில் பெரும் வேறுபாடு இருந்தது.
பல்வேறு மாநிலங்கள், இந்த புள்ளிவிபரங்களில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டியவுடன், ஐ.சி.எம்.ஆர், புள்ளிவிபரங்கள் சேகரிக்கும் முறைகளை பல முறை மாற்றியது. ஒரு கட்டத்தில், புள்ளிவிபரம் சேகரிக்கும் படிவத்தை 60 நாட்களுக்குள், 10 முறை மாற்றியது.  இது அரசு எந்த அளவுக்கு, கொரொனா பரவலை கையாள்வதில் தெளிவில்லாமல் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.  ஆனால் அரசுபொது முடக்கம் குறித்து அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ஐ.சி.எம்.ஆரின் புள்ளி விபரங்களே இறுதியானது என்று கூறியது.
29 ஏப்ரல் அன்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், மாநில அரசுகளுக்கு, ஒரு அவசர சுற்றறிக்கையை அனுப்பியது. அதன்படி, ஐ.சி.எம்.ஆர் புள்ளி விபரங்களில் உள்ள பிழைகளை சரி செய்ய மூன்றே நாட்களில் பல்வேறு விபரங்களை அனுப்புமாறு கோரப்பட்டது. 739 மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட 33,014 நோய் தொற்று விபரங்களை அவசரமாக சரிபார்க்கும்படி மாநிலங்கள் கோரப்பட்டன.
“2 மே மாலை 6 மணிக்குள் இந்த விபரங்கள் அனுப்பப்பட வேண்டும்.  கொரோனா நோயாளிகளின் முகவரி, மொபைல் எண், ஆகியவற்றை,  மத்திய அரசின் கோவிட் இந்தியா இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும். புள்ளிவிபரங்களில் விடுபட்டு போனவை, இரு முறை பதிவு செய்யப்பட்டவை ஆகியவை குறித்த விபரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்” என்று கூறியது அந்த சுற்றறிக்கை.
இந்தியாவில் மொத்த கொரொனா தொற்று என்ன என்பதை வெளிப்படையாக ஏற்கனவே அறிவித்து விட்டு, அவ்வாறு அறிவித்த 33,104 தொற்றுகளின் விபரங்களை  29 ஏப்ரல் அன்று  சரிபார்க்கச் சொன்னது ஐ.சி.எம்.ஆர்.    1 மே அன்று பொது முடக்கம் இரண்டாவது முறை நீட்டிக்கப்பட்ட அன்று கூட ஐ.சி.எம்.ஆரின் புள்ளி விபரங்கள் சரியானதாக இல்லை.
மீண்டும் மீண்டும் மாற்றப்பட்ட நடைமுறைகள்.
மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே, நடைபெற்ற கடிதப் போக்குவரத்துகளை பரிசீலித்ததில், நாடு முழுக்க கொரொனா குறித்த விபரங்களை சேகரிக்க முழுமையான நடைமுறைகள் எதையும் ஐ.சி.எம்.ஆர் வரையறுக்கவில்லை என்பது தெரிய வருகிறது. பல முறை, ஐ.சி.எம்.ஆர், அது வகுத்த வழிமுறைகளையே மாற்றியும், திருத்தியும், வாபஸ் பெற்றும் பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது.  இதன் காரணமாக, இந்த விபரங்களை, அனுப்ப வேண்டிய மருத்துவ மற்றும் நிர்வாக பணியாளர்களுக்கு, நெருக்கடியான நேரத்தில் கடும் பணிச்சுமை ஏற்பட்டது.
“ஐ.சி.எம்.ஆரின் வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் நாளுக்கு நாள் மாறி வந்தன.  புதிய புதிய விளக்கங்களும் அளிக்கப்பட்டன.  இந்த மாற்றங்களுக்கு முடிவே இல்லை” என்கிறார் தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற குழந்தைசாமி.
“ஐ.சி.எம்.ஆரின் டேட்டா பேஸ், பொய்யான பெயர்களையும், போலி மொபைல் எண்களையும், இரட்டிப்பு பெயர்களையும் கொண்டிருந்தது” என்கிறார்,  கிழக்குப் பகுதி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுகாதாரத் துறை அதிகாரி.
“ஒரு சில நேர்வுகளில், ஒரு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளி வேறு மாவட்டத்தில் குடியிருப்பார். அவர் சொந்த மாவட்டம் வேறானதாகவும், சோதனை செய்யப்பட்ட மாவட்டம் வேறானதாகவும் இருக்கும்.  இது போன்ற குழப்பங்களை மாநில அரசுகளால் மட்டுமே சரி செய்ய முடியும்.  ஆனால்,  சமீபகாலம் வரை, ஐ.சி.எம்.ஆர், மாநில அமைப்புகளையோ, மாவட்ட அமைப்புகளையோ எந்த திருத்தங்களையும் செய்ய அனுமதிக்கவில்லை” என்றார் மற்றொரு சுகாதாரத் துறை அதிகாரி.
இக்கட்டுரைக்காக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், சுகாதரத் துறை செயலாளர் ப்ரீத்தி சுதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் பல்ராம் பார்கவா, தலைமை  தொற்று நோய் பிரிவின் தலைவர் ராமன் கங்கேத்கர் ஆகியோரிடம் கொரோனா புள்ளி விபரங்களில் உள்ள வேறுபாடுகள்  குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.   இந்த மின்னஞ்சலை சுகாதாரத்துறை செயலர், அவருக்கு அனுப்பப்பட்ட கேள்விகளை சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அனுப்பினார். சுகாதாரத் துறை செயலர், ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பார்க்கவா, நமது கேள்விகள் சுகாதாரத் துறை சம்பந்தமானது என்று மட்டும் பதில் அனுப்பினார். மற்றவர்களிடமிருந்து பதில் வரவில்லை.

33 ஆயிரத்துக்கும் மேலான கொரொனா தொற்று விபரங்களை மூன்றே நாட்களில் சரிபார்த்து அனுப்பக் கோரும் ஐ.சி.எம்.ஆர் அறிக்கையின் ஒரு பகுதி.
இரு புள்ளிவிபரங்களின் கதை.
ஜனவரியில், இந்தியாவில் முதல் கொரொனா தொற்று வந்த பிறகுதான் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்காணிப்பு நடவடிக்கைகளையே மேற்கொள்ளத் தொடங்கியது.   அது வரை, ஒருங்கிணைந்த நொய் பரவல் கண்காணிப்பு திட்டத்தின் (Integrated Disease Surveillance Programme) கீழ், தேசிய நோய் கட்டுப்பாடு மையம் (National Center for Disease Control) மட்டுமே இது போன்ற நோய் பரவல்கள் குறித்த புள்ளி விபரங்களை சேகரித்து வைக்கும்.
ஒருங்கிணைந்த நொய் பரவல் கண்காணிப்பு திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே, நோய் பரவல் குறித்த விபரங்களை சேகரிக்கத்தான். இத்திட்டத்தின் கீழ், கிராமம், நகரம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும், அடிப்படை சுகாதார பணியாளர்களின் மூலமாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் தொகுத்து வைக்கப்படும். நோய் பரவும் சமயங்களில்,   மாநிலங்கள், புள்ளி விபரங்களுக்கு இந்த அமைப்பைத்தான் நம்பி இருக்கும்.
கொரொனா தொற்று பரவத் தொடங்கியவுடன்,  மத்திய அரசு, இது வரை இருந்த முறைக்கு மாறாக, ஐ.சி.எம்.ஆரை புள்ளி விபரங்களை சேகரிக்க உத்தரவிட்டது. தேசிய நோய் தடுப்பு மையம் ஒரு புறம், வழக்கமாக செய்வது போல புள்ளி விபரங்களை சேகரித்துக் கொண்டிருக்க, ஐ.சி.எம்.ஆர் நேரடியாக கொரொனா சோதனை செய்யும் பரிசோதனைக் கூடங்களில் இருந்து புள்ளி விபரங்களை சேகரிக்க தொடங்கியது.  இந்த கூடங்கள், மாநில அரசுகளுக்கும் புள்ளி விபரங்களை அளிக்க வேண்டும்.
மறுபுறம்,தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், மாநில அரசு ஊழியர்களின் மூலமாக கொரொனா குறித்த புள்ளி விபரங்களை சேகரித்து வந்தது.  மாநில அரசுகள், இந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில்தான், கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங்கிணைந்த நொய் பரவல் கண்காணிப்பு திட்டத்தை செயல்படுத்த முழுமையான நெட்வொர்க் இருக்கிறது.  இதில் தீவிர நோய் பரவல் நிபுணர்கள், நுண்கிருமி நிபுணர்கள் ஆகியோர் உள்ளனர்.  இந்த முறையைத்தான் நாங்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்தோம்” என்கிறார், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி.
ஒருங்கிணைந்த நொய் பரவல் கண்காணிப்பு திட்டத்தில் ஆள் பற்றாக்குறை இருந்தது.  இருப்பினும், நேரடியாக விபரங்களை சேகரிக்கும் களப் பணியாளர்கள் இருந்ததால், இந்த திட்டத்தின் கீழ் துல்லியமான புள்ளி விபரங்களை சேகரிக்க முடிந்தது.
மாறாக, ஐ.சி.எம்.ஆரோ,  கொரொனா பரிசோதனைக் கூடங்கள் அளிக்கும் விபரங்களை நம்பி இருந்தது.   இதன் காரணமாகத்தான் ஐ.சி.எம்.ஆர் சேகரித்த புள்ளி விபரங்களுக்கும், ஒருங்கிணைந்த நோய் பரவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் சேகரித்த புள்ளி விபரங்களுக்கும் வேறுபாடு இருந்தது.
உதாரணத்துக்கு, 29 ஏப்ரல் அன்று, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் திரிபுராவில் சேகரித்த விபரங்களை விட, ஐ.சி.எம்.ஆர் 88 சதவிகிதம் அதிக நோய் தொற்று எண்ணிக்கையை காட்டியது.   மகாராஷ்டிரா மாநிலத்தில், ஐ.சி.எம்.ஆர் எண்ணிக்கையை விட தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் 1,678 எண்ணிக்கை குறைவாக காட்டியது.  டெல்லியில் ஐ.சி.எம்.ஆர் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தை விட, 484 தொற்றுக்களை குறைவாக காட்டியது.  ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில், வெறும் 5 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இரு அமைப்புகளின் புள்ளி விபரங்கள் பொருந்தின.


ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் கொரொனா தொற்று எண்ணிக்கைகளில் உள்ள வேறுபாடு
அடிப்படையிலேயே கோளாறு.
ஏப்ரல் இரண்டாவது வாரத்தில், ஊடகங்கள் இந்த புள்ளி விபரங்களில் உள்ள முரண்களை சுட்டிக்காட்டத் தொடங்கின.  இணைப்பு 1.  இணைப்பு 2.  சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள்,  இது எப்போதாவது ஒரு முறை ஏற்படும் பிழை என்று சமாதானம் கூறினார்கள். ஆனால், இக்கட்டுரைக்காக ஆய்வு செய்த பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால், பிழை மிக மிக அடிப்படையானது என்பது தெரிய வருகிறது.
29 ஏப்ரலுக்கு முன்பாகவே இரு முறை ஐ.சி.எம்.ஆர், மாநில அரசுகளிடம் புள்ளி விபரங்களை சரி செய்யுமாறு கோரிக்கை விடுத்தது.   முன்பே நம்மிடம் பேசிய அந்த வட மாநிலத்தை சேர்ந்த அதிகாரி, “ டெல்லி மற்றும் பஞ்சாபில் இருக்கும் சில நோய் தொற்றாளர்களை எங்கள் மாநிலத்தில் சேர்த்திருந்தனர். ஏனென்றால், அவர்கள் தற்போது இருக்கும் முகவரியை கொடுக்காமல், நிரந்தர முகவரியை அளித்திருந்தனர்.  இது போன்ற முரண்பாடுகளை சுட்டிக்காட்டி ஐ.சி.எம்.ஆருக்கு பல மெயில்களை அனுப்பியுள்ளேன்.” என்றார்.    
ஐ.சி.எம்.ஆர் பரிசோதனை கூடங்களில் இருந்து விபரங்களை சேகரித்தால் ஏன் பிழைகள் வருகிறது ?
இது பற்றி பேசிய,  மேற்கு மாநிலத்தை சேர்ந்த மற்றொரு அதிகாரி, “புள்ளி விபரங்கள் சேகரிப்பதில், பல்வேறு தவறுகள் நிகழும்.   பரிசோதனை கூடங்களில் அச்சம் காரணமாகவோ, அல்லது வேறு காரணங்களினாலோ சோதனைக்கு வருபவர்கள்  / முழுமையான முகவரியை கொடுக்க மாட்டார்கள்.  களத்தில் விபரங்களை சேகரிக்கும் பணியாளர்களும் சில நேர்வுகளில் முழு விபரங்களை பதிவு செய்ய தவறுவார்கள். 
ஒரு மாநில அரசு, சரியான / துல்லியமான விபரங்களை பெற வேண்டும் என்று நினைத்தால் பெற முடியும்.  ஆனால், ஐ.சி.எம்.ஆர் புள்ளி விபரங்களோ, எவ்வித சரிபார்ப்பும் இல்லாமல், அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டவை.  ஐ.சி.எம்.ஆர் புள்ளி விபரங்களில் சில முகவரிகள் பரிசோதனைக் கூடங்களின் முகவரிகளாக இருந்தன.  சில நேர்வுகளில் பெயர்களின் எழுத்துக்களை மாற்றி எழுதியிருந்ததால், ஒருவரின் பெயரே, பல முறை வந்தது.
29 ஏப்ரல் அன்று, ஐ.சி.எம்.ஆர்  வெளியிட்ட சுற்றறிக்கை வரை, மாநில அரசுகளுக்கு புள்ளி விபரங்களில் திருத்தம் மேற்கொள்ளவோ, அவற்றை சரிசெய்யவோ எவ்வித அதிகாரமும் இல்லை” என்றார் அந்த அதிகாரி.
புள்ளி விபரங்களை சேகரிப்பதற்காக ஐ.சி.எம்.ஆர் உருவாக்கிய படிவங்கள் பலவற்றை ஆய்வு செய்தோம்.  “கோவிட் 19 விபரங்களை சேகரிப்பதற்கான மாதிரி படிவம்” எனும் அந்த படிவங்களை ஐ.சி.எம்.ஆர் 10 முறை மாற்றியுள்ளது.

கொரொனா தொற்று விபரங்களை சேகரிக்க 10வது முறையாக மாற்றப்பட்ட ஐ.சிஎம்.ஆர் படிவம்
தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தை போல அல்லாமல், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஒரு ஆராய்ச்சி நிறுவனம்.  இந்த நிறுவனம் புள்ளிவிபரங்களை சேகரிப்பதற்கு, போதுமான உட்கட்டமைப்போ அனுபவமோ கொண்டிராதது என்பதே பல்வேறு வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.  இது வரை, ஐ.சி.எம்.ஆர் தனது ஆராய்ச்சிகளுக்கும், தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய்யத்தின் புள்ளிவிபரங்களையே பயன்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரொனா பரவலை தடுப்பதன் முக்கிய அம்சமே சோதனைகள்தான்.  அதனால்தான், ஐ.சி.எம்.ஆர் புள்ளிவிபரங்களை சேகரிக்க பணிக்கப்பட்டது.  ஆனால், ஐ.சி.எம்.ஆர், நோய்களை பரிசோதனைக் கூடங்களில் கையாள்கிறது.  தேசிய நோய் தடுப்பு மையமோ, நோய்களை களத்தில் கையாள்கிறது.  இதுதான் அடிப்படையான வேறுபாடு” என்றார் அந்த வட மாநில அதிகாரி.
பிழையான புள்ளிவிபரங்களை நம்பியதன் விளைவு
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தனது புள்ளி விபரங்களை சேகரிக்கும் முறைகளை திருத்தங்களுக்கு மேல் திருத்தங்கள் செய்து தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில், மாநில அரசுகள் மத்திய அரசிடம் புகார் தெரிவித்தன.  மத்திய அரசு, வரும் நாட்களில் இந்த சிக்கல்கள் சரி செய்யப்படும் என்று தெரிவித்தது.
29 ஏப்ரல் அன்று, மாநில அரசுகளை, கொரொனா தொடர்பான புள்ளி விபரங்களை சரி பார்த்து, சரி செய்யும்படி கேட்டுக் கொண்ட ஐ.சி.எம்.ஆர், அந்த நாள் முதல், அதன் புள்ளி விபரங்கள் மட்டுமே கொரோனா தொடர்பான அனைத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என்றும், கொரொனா சோதனைகளின் எண்ணிக்கையும் இந்த விபரங்களின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்றும் கூறியது.
இதற்கு முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டபடி, 15 ஏப்ரல் அன்று, மத்திய அரசு, இந்தியாவின் 739 மாவட்டங்களை சிகப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களாக, ஐ.சி.எம்.ஆர் வழங்கிய புள்ளி விபரங்களின் படி வகைப்படுத்தியது.
1 மே அன்று, இதே புள்ளி விபரங்களின் அடிப்படையில்தான், மத்திய அரசு, சிகப்பு மண்டலங்களில் பொது முடக்கத்தை நீட்டித்தது. நோய்தொற்றின் தீவிரத்தை கண்டறிந்து சிகப்பு மண்டலங்களை அடையாளப்படுத்த,  மத்திய அரசு, இரு முக்கிய கூறுகளை பயன்படுத்தியது. நோய் தொற்றுகளின் எண்ணிக்கை மற்றும், நோய் தொற்றுகள் இரட்டிப்பாகும் அளவு. இது, ஐ.சி.எம்.ஆரின் முழு நம்பிக்கை அளிக்காத புள்ளி விபரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.

கொரொனா தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் புள்ளி விபரங்களே இறுதியானது என்ற முடிவை மாநிலங்களுக்கு தெரிவிக்கும் அறிக்கை.
மேலும், ஐ.சி.எம்.ஆர், ஏப்ரல் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிதாக உருவாக்கப்பட்ட ஆர்.டி.பிசிஆர் என்ற செயலியை பயன்படுத்தி, புள்ளி விபரங்களை சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.   இது வரை, கணிணியில் டேட்டா எண்ட்ரி மூலமாக செய்து வரப்பட்ட புள்ளி விபர சேகரிப்பு, திடீரென செயலி மூலமாக மாறியதால், மாநிலங்களின் மீது கடும் பணிச் சுமை அதிகரித்தது என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புள்ளி விபரங்களை சேகரிக்க ஆர்.டி.பிசிஆர் செயலியை கட்டாயமாக்கியபின், அதை பயன்படுத்தும் கையேட்டின் ஒரு பகுதி
மாநில அரசு அதிகாரிகள், சோதனைக் கூடங்கள்,  மருத்துவர்கள் இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகளை பரிசீலித்ததில், அச்சமும் குழப்பமும் நிலவியதை பார்க்க முடிகிறது.    இரு மாநிலங்களில் மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும், கொரொனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள உடல் முழுக்க பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருக்கையில், மொபைல் போனில் செயலியை  பயன்படுத்தி எப்படி விபரங்களை உள்ளீடு செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

ஆர்டி. பிசிஆர் செயலியை கட்டாயமாக்கும் உத்தரவு
இந்த கட்டத்திலாவது, புள்ளிவிபரங்களை சேகரித்து, சரிபார்த்து,  பராமரிப்பதில் மாநில அரசுக்கும் ஐ.சி.எம்.ஆர் அதிகாரம் அளித்தது மகிழ்ச்சியே.  இதை முதல் நாளே செயல்படுத்தியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், இன்று நம்மிடம், முழுமையான நம்பகத்தன்மை உள்ள புள்ளிவிபரங்கள் இருந்திருக்கும்” என்கிறார் ஒரு மாநிலத்தின் சுகாதாரத் துறை அதிகாரி.
10 மே அன்று உள்ளபடி குறைந்தது மூன்று மாநிலங்களால், இந்த புள்ளி விபரங்களை உரிய நேரத்துக்குள் சரிசெய்ய முடியவில்லை. மற்ற அனைத்து மாநிலங்களும் செய்து விட்டனவா என்று தெரியவில்லை.
புள்ளி விபரங்களின் உண்மைத்தன்மை மிக முக்கியமானதுதான்.  ஆனால், இத்தனை குறுகிய காலத்தில் இந்த புள்ளி விபரங்களை உள்ளீடு செய்ய மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல” என்றார் அந்த அதிகாரி.
12 மே அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி,  அடுத்த பொது முடக்கம் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.  இந்த பொதுமுடக்க நீட்டிப்பும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் புள்ளி விபரங்களின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படும்.
முற்றும்.
ஆக்கம்
மிருதுளா சாரி
ட்விட்டரில் தொடர @mridulachari
நித்தின் சேத்தி
ட்விட்டரில் தொடர @nit_set
முதல் பாகத்தின் இணைப்பு
https://www.savukkuonline.com/18800/
இக்கட்டுரையின் ஆங்கில இணைப்பு
https://www.article-14.com/post/flawed-covid-19-database-source-of-decisions-to-ease-lockdown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக