சனி, 9 மே, 2020

தாராவி . ஒரு சதுர கிலோமீட்டருக்கு மூன்று லட்சத்து அறுபதாயிரம் பேர்


Karl Max Ganapathy : மும்பை தாராவி பற்றி இன்றைய ஹிந்துவில் ஒரு விலாவாரியான கட்டுரை வந்திருக்கிறது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு மூன்று லட்சத்து அறுபதாயிரம் பேர் வாழ்கிற, உலகின் மிகப்பெரிய சேரி அது. மாநகரச் சேரிகள் என்றால் எல்லோராலும் கைவிடப்பட்ட மனிதர்கள் வாழும் பகுதி என்றே அதற்குப் பொருள். தாராவியும் இதற்கு சற்றும் குறைந்தது அல்ல. அங்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருக்கிறது.
கொரோனாவுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் அனைத்துமே மக்கள் திரளில் பத்து சதவிகிதம் பேருக்கு மட்டுமே கைகொள்ள முடிந்த வழிமுறைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மீதி பேரால் அதை செய்ய முடியாது என்பதைத்தான் நாம் தினமும் பார்த்து வருகிறோம். இந்தப் பத்து சதவிகிதம் பேர் கூட முன் வரிசையில் நிற்பவர்கள் மட்டும். பெரும்பான்மை இந்தியா ஒன்று சேரியில் நிற்கிறது அல்லது சேரியை ஒட்டிய குடியிருப்புகளில் இருக்கிறது. கிராமங்கள் தனி.
தாராவியின் ஒரு சதுர கிலோமீட்டரில் உள்ள ஆட்களில் பத்து சதவிகிதம் பேருக்கு தொற்று பரவினாலே அந்த எண்ணிக்கை மூன்றாயிரத்து அறுநூறு வருகிறது. இதை சற்றே கூட்டினால், ஒரு வாரத்துக்கு கணக்கு எடுத்தால், மொத்த தாராவியையும் கணக்கில் கொண்டு வந்தால் எவ்வளவு வரும்? தலை சுற்றுகிறது இல்லையா. உடனே வந்து, அப்படியானால் அவர்களை அப்படியே அலைய விட்டுவிடலாமா என்று கேட்பீர்கள். புறப்பார்வைக்கு இது பொறுப்பான கேள்வி என்று தோன்றும். யதார்த்தத்தில் இந்தக் கேள்வி குரூரமானது. இதன் குரூரத்தை யாரும் விளக்கிச் சொல்லமுடியாது. நீங்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.

நாஞ்சில் நாடனின் நாவலொன்றில், இத்தகைய பகுதியில் இருந்து வேலைக்கு செல்லும் ஒருத்தியைப் பற்றிய சித்திரம் வரும். ஒரு அறை கொண்ட வீடு. கழிவறை இருக்காது. தினமும் ரயிலில் அலுவலகம் செல்பவள். கழிவைப் பொட்டலம் கட்டி எடுத்துக்கொண்டு போய், ரயிலின் ஜன்னல் வழியாக வீசி எறிவாள். இப்போது அவள் என்ன செய்துகொண்டிருப்பாள்? இதைப் போன்ற எழுத்துகளின் மீது பரிச்சயம் இருப்பவர்களுக்கு, அதை விரித்தெடுத்து வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயல்பவர்களுக்கு, இந்த லாக்டவுனின் சிக்கல்கள் துலங்கும்.
நான்கு பக்கமும் தகரத்தால் அடைக்கப்பட்ட பொந்துக்குள் இருப்பவர்களுக்கு, வீடு என்பது வெறும் சொல் மட்டுமே. அவர்கள் சாலையிலும், மர நிழலிலும், வேலை செய்யும் இடங்களிலும் வாழ விதிக்கப்பட்டவர்கள். நம் சென்னையின் ஒண்டுக் குடித்தனங்கள் பலவும் இந்த தரத்திலானவையே. அவர்களை நாம் வீட்டிலேயே இருக்கச் சொல்லி முடக்கியிருக்கிறோம். இதில் நான் அரசைக் குறை சொல்லவில்லை. ஆனால் நம்முடைய அரசு ஒரு ஐரோப்பிய அரசைப் போல தனது வழிமுறையை வகுத்துக்கொள்ளமுடியாது என்று மட்டும் சுட்ட விரும்புகிறேன். பிச்சைக்காரன் முதலில் தன்னைப் பிச்சைக்காரன் என்று உணராதவரை இதற்கு விடிவில்லை.
ஏன் அரசுகள் இந்த யதார்த்தத்துக்கு வருவதில்லை. மோடி ஏன் தன்னை பிச்சைக்காரர்களின் தலைவனாக உணர்வதில்லை?
ஏனென்றால் அவர் மேலே சொன்ன அந்த பத்து சதவிகிதத்தின் உள்ளே இருக்கும் பத்து சதவிகித மக்களுக்காக ஆட்சி புரிகிறார். அவர்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர்களின் அச்சத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ஏனென்றால் அவர்கள்தான் நீதிமன்றங்களில் இருக்கிறார்கள், அதிகாரமிக்க பதவிகளில் இருக்கிறார்கள், பத்திரிகை நடத்துகிறார்கள், சினிமா எடுக்கிறார்கள் இப்படி பலவாறாக இந்திய வாழ்க்கை என்று சொல்லப்படும் சிறும்பான்மை ஜிகினாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அவர்களது பாதுகாவலனாக மோடி பாத்திரம் ஏற்கிறார்.
இங்கு சிக்கல் என்னவென்றால், பேரிடர்கள் அதுவும் குறிப்பாக கொரொனோ போன்ற தொற்றுநோய்கள் இந்த நாகரிகத்தைக் கடைபிடிப்பதில்லை. ஏற்பதில்லை. அதன் போக்கில் போகின்றன. கோமாளிகளின் அரிதாரத்தை எளிதாகக் கலைத்துப் போட்டுவிடுகின்றன. இந்தத் தொற்று ஒரு மாதத்திற்குள் கட்டுக்குள் வந்திருந்தால், மோடி இந்நேரம் தைரியமாக முடிவெடுத்த தலைவராக மகுடம் சூடியிருப்பார். சூப்பர் மேனின் உடலோடு மோடியின் தலை ஒட்டப்பட்டு மீம்சுகள் வெளியாகியிருக்கும். ஆனால் துயரார்ந்த வகையில், குஜராத்தில், அதாவது மோடி மூன்று முறை ஆண்ட அதே சொர்க்க பூமியில், வீடு திரும்ப வேண்டும் என்று பூசலிடும் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்படும் நிலை ஏற்படுகிறது. அவசரம் அவசரமாக நாடக மேடையின் திரைகள் இறக்கப்படுகின்றன. பிரதான நடிகர் ஒப்பனை அறையின் மூலையில் முடங்குகிறார். உதிரி நடிகர்கள் புதிய வசனங்களுடன் மேடைக்கு வருகிறார்கள்.
கொரோனா நோய்க்கு சிகிச்சை முடிந்தவர்களை மீண்டும் சோதித்து உறுதி செய்யவேண்டியதில்லை, காய்ச்சல் குறைந்தாலே போதும், அவர்களை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பலாம் என்கிறார் ஒரு துணைநடிகர். நல்லது. வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை மீட்கப்போன விமானம் காத்துக்கிடக்கிறது ஏனென்றால், அங்கு புறப்படும் பயணிகளை இன்னும் சோதித்து முடியவில்லை. ஏன் அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? இல்லை. பிறகு? ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். ஓஹோ...
எத்தனை பேர் வருவதற்கு விண்ணப்பித்தார்கள்? இதுவரை ஐந்து லட்சம் பேர் இருக்கும். நீங்கள் எத்தனை பேரை அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? அறுபதாயிரம் பேரை. மீதி? தெரியாது. ஒரு விமானத்துக்கு இருநூறு பேர் வீதம், இந்த அறுபதாயிரம் பேரை அழைத்து வர எத்தனை நாள் ஆகும், எத்தனை விமானம் வேண்டும். இதுவரை முழு தகவலும் கிடைக்கவில்லை என்கிறது சம்பந்தப்பட்ட இணையதளம்.
அரசின் திட்டம்தான் என்ன? முடிந்த அளவு ஒரு இடத்தில் இருப்பவர்களை அங்கேயே அந்த இடத்திலேயே இருக்கவைப்பதுதான். அதுதான் பாதுகாப்பானது. பிறகு ஏன் சீனாவுக்கு விமானம் அனுப்பினார்கள், ஈரானுக்கு விமானம் அனுப்பினார்கள், பாகிஸ்தான் விரும்பினால் அவர்கள் நாட்டினரையும் நாங்களே அழைத்து வருகிறோம் என்று மார்தட்டினார்கள்? அது நாடகம் தொடங்கியபோது வந்த முதல் காட்சி. இப்போது அப்படி அல்ல. நிலைமை மாறிவிட்டது. அதனால்தான் தகவல்களை மாற்றி மாற்றிச் சொல்கிறோம். இப்போது நடப்பது ஒரு பின்நவீனத்துவ நாடகம். காட்சிகள் மாறி மாறிதான் வரும்.
ஒரிசாவில் இருக்கும் தொழிலாளி பெங்களூரில் வேலை செய்கிறான். பீகாரின் தொழிலாளி தாராவியில் இருக்கிறான். உத்திர பிரதேச தொழிலாளி திருப்பூரில் இருக்கிறான். லாக் டவுனை அறிவிப்பதற்கு முந்தைய மணி வரை, எத்தனைத் தொழிலாளி எங்கெங்கு இருக்கிறான் என்பது அரசருக்குத் தெரியாது. அவன் என்ன செய்வான் என்றோ, எப்படி சமாளிப்பான் என்றோ அரசரால் கற்பனை செய்யமுடியாது. வெளிநாட்டுக்கு வேலைக்கு போனவனை அழைத்து வருவதில் எப்படி தாமதப்படுத்தும் யுக்தி மூலம் அவகாசத்தை நீட்டிக்க முயல்கிறாரோ, அதேதான் வெளி மாநிலத்துக்கு பிழைக்கப்போனவன் விஷயத்திலும். சோத்துக்கு வழியில்லாமல்தானே ஒரு வட இந்தியன் தென் இந்தியா வந்திருக்கிறான், இப்போது அவனுக்கு ரயில் அனுப்பி அவனை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பினால் மட்டும் என்ன செய்வான்? உள்ளூர் அரசுக்கு அவன் சுமைதானே? அதனால் முடிந்த வரை தாமதப்படுத்துவோம் என்பதே அரச நீதி.
ஒரே நேரத்தில் பிச்சைக்காரக் கூட்டத்துக்கு தலைவனாக இருந்துகொண்டு ராஜதர்பாரையும் நடத்துவதும் விநோதமாக இருக்கிறது. என்ன விநோதம்?
பாதிக்கப்பட்டவர்கள் நடந்தே கிளம்புகிறார்கள். அவனுக்கு இழப்பதற்குப் பெரிதாக எழுவும் இல்லை. உனது தேசப் பெருமிதம், நீ விடும் ராக்கெட், உனது சர்ஜிகல் ஸ்ட்ரைக், சட்ட விரோதக் குடியேறிகள் பற்றிய உன் கோட்பாடு இதெல்லாம் அவனுக்குத் தெரியாது. ஏனெனில் நீ எப்படி அவனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லையோ அதேபோல அவனும் உன்னை மற்றவனாக நடத்துகிறான். இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு இதெல்லாம் புரியவே புரியாது. ஒரு மூட்டை அரிசி, சில கிலோக்கள் உருளைக் கிழங்கு, தக்காளி, பருப்பு இவைதான் அவனுக்குத் தரப்பட்டு, அதே தகரைக் கொட்டகைக்குள்தான் இருத்தப்படுகிறான். அவனுக்கு எல்லாம் ஒன்றுதான். ஆனாலும் கூட, இது அவனது நிரந்தரமான இடம் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறபோது அவனுக்கு அதிலிருந்து தப்பித்துப் போக, தற்காலிகமாவது ஒரு இடம் தேவைப்படுகிறது. அவன் நடக்கிறான். வழியில் சோர்ந்து படுக்கிறான். ரயில் வருவது காதில் ஒலிக்கிறது. எழுவதற்குள் வந்து விடுகிறது. என்ன செய்யமுடியும். உங்களுக்கு ரயில் இல்லை என்றுதான் சொன்னார்கள். இப்போது வேகமாக வருகிறது, என்ன செய்ய? ஓ, என் பேரரசரே...!
இங்கு நான் சரக்கை விற்பேன் என்கிறது அரசு. விற்காதே என்கிறார்கள் நலம் விரும்பிகள். ஆமாம் உன்னை அனுமதிக்க முடியாது என்கிறது நீதி மன்றம். செலவுக்குக் காசு இல்லாமல் கையைப் பிசைகிறார் சிற்றரசர். ஒரே நேரத்தில் எல்லாருக்கும் தம்மீது அக்கறை வந்துவிடுவதை நினைத்து வரிசையில் நிற்பவனுக்குக் குழம்புகிறது. அவன் தினமும் குடித்துக்கொண்டிருந்தான். அது மோசமான சரக்கென்று தெரியும். தெரிந்துதானே அதை அரசர் விற்றார், இப்போது மட்டும் என்ன என்று தனக்கு முன்னால் நிற்பவனிடம் கிசுகிசுக்கிறான். நலம் விரும்பிகள் அப்போதும் மூடிக்கொண்டுதான் இருந்தார்கள். இப்போது பீறிடும் அற ஆவேசத்தில் மூன்று புள்ளி இரண்டு சதவிகிதம் நல்ல சரக்கு கொடு என்று வந்திருந்தால் நிலைமை மாறியிருக்கலாம் அல்லவா? கள்ளச்சந்தையில் சரக்கு ஓடுகிறதே எப்படி என்று கேட்டிருந்தால் நேர்மையாக இருந்திருக்கும். ஆனால் வரிசையில் நிற்பவனின் கண் முன்னால்தான் சரக்கு விற்றது, அவனுக்குக் கட்டுப்படியாகாத விலை. அவன் அரசு கடையைத் திறக்கட்டும் என்று காத்திருந்தான். சடாரென்று கடையை மூடிவிட்டதால் அவனது காதுக்குள் புதிய புதிய ஒலிகள் கேட்டன, பற்களை கூசின, கைகள் நடுங்கின, தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தெருவைச் சுற்றி சுற்றி வந்தான். தலைக்கு மேலே ட்ரோன்கள் பறந்தன.
உள்ளே போ உள்ளே போய்விடு என்று விரட்டினார்கள். உள்ளே போய்? உள்ளே போ அதுதான் உயிருக்குப் பாதுகாப்பு என்றார்கள். யார் உயிருக்கு என்று அவன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே சூத்தாமட்டையில் லத்தியால் அடித்தார்கள். புகை மூட்டமாக அரசர்கள் கனவில் வந்தார்கள். நிறைய நடிகர்கள் வந்தார்கள். எவ்வளவு உற்றுப் பார்த்தாலும் ஏன் அவர்களில் ஒருவர் நிற்க ஒருவர் முட்டி போட்டிருக்கிறார்கள் என்பது புரியவே இல்லை. மயங்கிவிட்டான். தினமும் நல்ல சரக்கு குடிக்கும் மேன்மை தாங்கிய நான்கு பேர் ஒரு உயரமான மேசை மீது அமர்ந்து, இவனைக் குடிக்க அனுமதிக்கலாமா என்று விவாதிப்பது அவனது கனவில் வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக