ஞாயிறு, 17 மே, 2020

எந்த ஒழுக்கமும் இல்லாமல் ஒழுக்கவாதிகளைப் போல் நடிப்பதில் ....

Karl Max Ganapathy : எந்த ஒழுக்கமும் இல்லாமல் ஒழுக்கவாதிகளைப் போல்
நடிப்பதில் இந்தியர்களை மிஞ்ச ஆள் இல்லை என்பது என் அவதானங்களில் ஒன்று. எல்லாவற்றிலும் போலித்தனம். இதை நமது ஆட்சியாளர்கள் மிகவும் தந்திரமாக பயன்படுத்திக்கொள்வார்கள். மது அருந்துவதை இன்னும் ஒரு விஷயமாக பேசிக்கொண்டிருக்கும் சமூகம் உலகத்தில் உண்டா என்று தெரியவில்லை. முழுக்கவும் தடுத்து வைத்திருக்கும் சில இஸ்லாமிய நாடுகளை விடுங்கள். அது வேறு ஏரியா.
இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர்கள் பல விஷயங்களில் பத்தாம்பசலிகள். காஷ்மீரிகள் உட்பட பல பிராந்திய நண்பர்களிடம் பழகிவிட்டே இதைச் சொல்கிறேன். ஒன்றும் அறியாததைப் போல நடித்துக்கொண்டு அதையே மனதிற்குள் எப்போதும் ஜபித்துக்கொண்டிருப்பதில் கெட்டிக்காரர்கள். நீங்கள் கோவா போனாலும் சரி அல்லது பட்டாயா போனாலும் சரி சக தமிழனை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.
தாம் என்ன செய்கிறோம் என்பதை விட அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் கருத்தாக இருப்பவன் தமிழன் என்று அறிக. ஏதாவது ஒரு டான்ஸ் பாரில் நீங்கள் அவனது கண்களை அகஸ்த்மாத்தாக நோக்கிவிடுகையில் ஈஈ என்று ஒரு இளிப்பு இளிப்பான் பாருங்கள், அப்படியே எடப்பாடியைக் கண்ட சீமான் போலவே இருக்கும். ஒரு சிறிய கணக்கு சொல்கிறேன், இணையத்தில் நீங்களே தேடிப்பாருங்கள்.


"இந்தியாவில் விபச்சாரம்" என்று google பண்ணிப்பாருங்கள். இந்தியாவின் முக்கியமான பத்து பிராத்தல் கேந்திரங்கள் என்று தேடுங்கள். அந்த வின்டோவை அப்படியே வைத்துவிட்டு இன்னொரு வின்டோவில் வுஹானின் கசாப்பு மார்க்கெட் என்று தேடுங்கள். இரண்டு வின்டோவில் இருக்கும் படங்களை மட்டும் ஒப்பிட்டு பாருங்கள். வித்தியாசமே இருக்காது. சோனாகஞ்ச் பகுதியை யூ டியூபில் பார்த்தாலே மிகப்பெரும் குப்பை சேகரிப்பு மையம் போல இருக்கும். ஒரு சராசரி இந்தியனைப் பொறுத்தவரையில் அது பாவப்பட்ட பகுதி. இந்தியாவின் பிராத்தல்கள் கசாப்புக் கடையின் extensions. நிழலுலக கேந்திரம். போலீசுக்குப் படியளக்கும் தங்கச் சுரங்கம்.
இந்த லாக் டவுன் காலத்தில் நடந்தே வெளியேறும் புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி கண்ணீர் கசியும் கதைகளை நாம் படிக்கிறோம், பார்க்கிறோம். ஏதாவது ஒரு மெயின் ஸ்ட்ரீம் மீடியா இந்த பிராத்தல் கேந்திரங்கள் எங்ஙனம் சமாளிக்கின்றன என்ற செய்திகளை கரிசனத்துடன் வெளியிட்டிருக்கிறதா யோசித்துப் பாருங்கள். செய்யமாட்டார்கள். இத்தனைக்கும் எந்த அடையாளமும் அற்ற ஒடுக்கப்பட்ட பிரிவு அவர்கள். என்ன பிரச்சினை என்றால், ஆன்மீகமான இந்திய மனநிலைக்கும் அது முக்காடு போட்டுக்கொண்டு எட்டிப்பார்க்கும் ஆபாசத்துக்கும் பெருத்த வேறுபாடு உண்டு.
இந்த புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம் ஏன் இப்படி பெரிதாக உருவெடுக்கிறது என்று சாய்நாத்திடம் கேட்கிறார்கள். நீங்கள் கிராமங்களை சிதைத்தீர்கள் அதுதான் காரணம் என்கிறார் அவர். மும்பை காமாத்திபுராவைப் பற்றிய கட்டுரை ஒன்றில் அந்தப் பெண்களும் விவசாயம் பொய்த்ததை ஒரு காரணமாக சொல்கிறார்கள். உடனே எல்லோரும் காந்தியாக மாறி, அந்த பாவப்பட்ட ஆத்மாக்கள் இருக்கிறார்களே என்று கண்ணீர் உகுப்பதற்குத் தயாரானால், சாரி அப்படியே நிறுத்துங்கள். உங்கள் கண்ணீர் மிகவும் போலியானது. உங்கள் ஒழுக்கவாததின் போலிக் கண்ணீர்தான் அந்தப் பெண்களை பிச்சைக்காரர்களாக்குகிறது. ரவுடிகள், போலீசுகளின் சுரண்டலுக்கு அப்பெண்களை உள்ளாக்குகிறது. பிராத்தலுக்கு வறுமை என்பது அதில் இருக்கும் பல காரணங்களில் ஒன்று மட்டுமே. சந்தேகம் இருந்தால் நளினி ஜமீலாவைப் படித்துப் பாருங்கள்.

சென்னையில் ஒரு வட மாநில வேசியின் அடிப்படைக் கட்டணம் பத்தாயிரம் ரூபாய். துபாயில் ஒரு கட்டிடத் தொழிலாளியின் மாத சம்பளம் ஆயிரத்து ஐநூறு திர்ஹாம். அங்கு ஒரு ஃபிலிப்பினோ வேசியின் ஒரு இரவுக் கட்டணம் ஐநூறு திர்ஹாம்கள். வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுங்கள். அவனது ஒரு மாத உழைப்பு ஒரு வேசியின் மூன்று இரவுகளுக்கான பணம் மட்டுமே. ஐரோப்பாவில் கார்ட் ஸ்வைப்பிங் மெஷினை கைப்பையில் வைத்து எடுத்து வரும் வேசிகள் சகஜம். இப்படி ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? தெரியும். பேசவே மாட்டார்கள். சென்னை பேச்சிலர்களின் ஒரு வார சுயமைதுன எண்ணிக்கை நிதியமைச்சரின் நிவாரண பட்ஜெட் அளவை விடக் கூடுதலாக இருக்கும். பெண்களின் நிலவரம் பற்றி தெரியவில்லை. டிக்டாக் வீடியோக்கள், வாட்சப் ஸ்டேடஸ்களை எண்ணினால் உத்தேச எண்ணிக்கை கிட்டக்கூடும்.
இந்தியாவில் பிராத்தல் மிகப்பெரிய நெட்வொர்க். அதை நெறிப்படுத்துவதற்கு எத்தனையோ முறை அந்த ஏரியாவில் உழைக்கும் தன்னார்வலர் அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கின்றன. அரசு அதை ஒரு விஷயமாகக் கூட கருதுவதில்லை. இங்கும் கூட சமூகத்தின் கூட்டு உளவியல் அரசுக்குத்தான் துணை போகிறது. விபச்சாரம் இல்லாத சமூகம் என்பது ஒரு Ideal Stage.அதுவே கனவு. ஆனால் அப்படி ஒன்றை நோக்கி நகரவேண்டும் என்பது எண்ணமாக இருக்கலாம். அதற்காக அப்படி ஒரு ஏரியா நம்மிடம் இல்லவே இல்லை என்று நினைப்பது தவறு. எந்த ஒன்றையும் அங்கீகரிப்பதே அதிலிருந்து வெளியேறுவதன் முதல் படி.
சமீப வருடங்களில் தாய்லாந்து கம்போடியா போன்ற நாடுகளுக்கு பாலியல் சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. சீனத்து வேசிகள் இல்லாத உலக நாட்டு பிராத்தல்களே இல்லை. இங்கு அப்படி ஒரு இனம் இருப்பதான எண்ணமே அரசுக்கு இல்லை. என்னதான் செய்யவேண்டும்? அவர்களின் தேவையை முதலில் சிவில் சமூகமாக நாம் அங்கீகரிக்கவேண்டும். அரசை நோக்கிப் பேசுவது அடுத்தது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக