செவ்வாய், 19 மே, 2020

திருத்தணிகாசலம் மீது மேலும் இரு வழக்கு! பிணையில் வெளியில் வரமுடியாது .

ஜாமீன் மறுப்பு: திருத்தணிகாசலம் மீது மேலும் இரு வழக்கு!மின்னம்பலம் : கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரசுக்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம், தான் மருந்து கண்டுபிடித்து விட்டதாகத் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார்.

பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருவதாக திருத்தணிகாசலம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை 6 நாட்கள், அதாவது மே 18ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை உத்தரவிட்டார். அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று (மே 19) மீண்டும் விசாரணைக்கு வந்ததுஅப்போது காவல்துறை தரப்பில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை, லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக திருத்தணிகாசலம் பயன்படுத்தியதாகவும், அவர் மருத்துவத் துறையில் எந்த பட்டமும் பெறவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கு திருத்தணிகாசலம் தரப்பில், “ மருத்துவத் துறையில் பட்டம் பெற்றதாகக் கூறவில்லை, பாரம்பரிய முறையில் பயிற்சி பெற்றதன் அடிப்படையில் சிகிச்சை அளித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதோடு ஜாமீன் கேட்டு வலியுறுத்தப்பட்டது,
ஆனால் திருத்தணிகாசலம் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவர் மருத்துவத் துறையில் எந்த தகுதியும் பெறாமல் சிகிச்சை அளித்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவரை போன்றவர்களை ஊக்குவிப்பது போல் இருக்கும் என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மக்களை ஏமாற்றி பணம் பறித்ததாக திருத்தணிகாசலம் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக