சனி, 30 மே, 2020

வெட்டுக்கிளியை வேட்டை ஆடும் கரிஞ்சான் குருவி .. Black drongo அல்லது King crow

Fazil Freeman Ali : வெட்டுக்கிளி பற்றி பேசும் போது இவனைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது... ஆமாம் இவனின் பிரதான உணவே வெட்டுக்கிளி தான்...
இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 150 பூச்சிகளை வேட்டையாடி உண்பவர்கள்.
ஒரு நாளைக்கு எவ்வளவு பூச்சிகளை உண்ணுகிறார்கள் என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
வயிறு நிறம்பியபிறகு சாப்பிடும் பூச்சிகளை ஒன்றிரண்டாக அரைத்து வெளியில் கக்கிவிடுகிறார்கள். அப்படி கக்கிய பூச்சிகள் மண்ணிற்கு சிறந்த உரமாக செயல்படுகிறது.
இவனை போன்றவர்களின் எண்ணிக்கை குறைய குறைய வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும்... அவன் தான் கரிச்சான் குருவி...
இவனுக்கு மாட்டுக்காரன், இரெட்டைவால் குருவி, வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு.
ஆங்கிலத்தில் இவனை Black drongo அல்லது King crow என்றழைப்பார்கள்.
விஞ்ஞான ரீதியாக இவனுக்களிக்கப் பட்ட பெயர் ‘Decrurus macrocercus என்பதாகும்.
இவனின் நிறம் பளபளவென மின்னும் கருப்பு நிறம். புறாவை விட சற்று சிறிதான உடல். நீளமான வால் சிறகுகள். அலகுகள் ஆரம்பிக்கும் இடத்தில் மீசை போன்ற ரோமங்கள். இந்த ரோமங்கள் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கும் போதே அவற்றைப் பிடிக்க உதவுகின்றன.

கரிச்சான் குருவிகள் கிராமப்புறங்களில் ஆடு மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் கிளப்பிவிட அவை பறக்கும்போது, கரிச்சான் குருவி இறக்கைகளை விரித்தபடி வைத்துக் கொண்டு ‘கிளைடர்’ விமானம் போல பறந்து சென்று பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு அதே மூச்சில் தான் இருந்த இடத்திற்கே வந்து சேரும் ‘பூமரேங்’ என்னும் ஆயுதம் போல.
இவர்களை மின் கம்பிகள், விளக்குக் கம்பங்கள் இவற்றின் மீதும் பார்க்கலாம். அவ்வப்போது சிறிது தூரம் பறந்து சென்று இருந்த இடத்திற்கே திரும்புவதைக் காண முடியும். இதுவும் அவை தன் உணவை அடையும் பொருட்டே.
இவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க கடிகார முள் போன்று இடமிருந்து வலமாக பறக்கிறான்
இவர்களுக்கு பயம் என்பதே துளியும் கிடையாது. இவர்கள் தன்னைவிட உருவத்திலும், பலத்திலும் பெரிதான காகம், கழுகு, பருந்து போன்ற பறவைகளைத் துரத்தித் துரத்தி விரட்டுகிறார்கள். அந்தப் பறவைகளும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று திரும்பிப் பாராமல் அதி வேகமாகப் பறந்து செல்லும். இந்தக் காட்சி பார்க்க வேடிக்கையான ஒன்று. King crow என்ற பெயர் வரக் காரணமும் இதுவே.
உருவத்தில் சிறியவனாக இருந்தாலும் உள்ளத்தில் உரம் இருந்தால் உன்னைவிட பலசாலியான எதிரியையும் ஓட ஓட உன்னால் விரட்ட முடியும் என்பதை நமக்கு இப்பறவைகள் சொல்கிறார்கள்.
இவர்களின் அருமை இன்று புரிகிறதா...
உணவு சங்கிலியில் ஒரு சங்கிலி அழிக்கப்படுவதின் விளைவுகளை இன்று உணர்கின்றது இந்த மனித இனம்...
பாருங்கள் இன்னும் எத்தனை பிரச்சினைகளை சந்திக்க காத்திருக்கிறது இந்த மதிக்கெட்ட மனித சமுதாயம்...
கரிச்சான் மட்டுமல்ல... அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்போம் இல்லையேல் இப்படியே மனித இனத்தின் அழிவை பார்த்து ரசிப்போமாக...!!
#சூழலியல்_காப்போம்..!!!பகிர்வு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக