புதன், 27 மே, 2020

சத்தமின்றி 30 பசுமை காடுகள் தனியாருக்கு தாரைவார்ப்பு.. கொரோனா பொது முடக்கத்தின்போது


தினகரன் : புதுடெல்லி: கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உயிரியல் முக்கியத்துவம்வாய்ந்த 30 காடுகளை தனியார் திட்டங்களுக்காக தாரை வார்த்துள்ளது. கொரோனா
வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி தொடங்கி தேசிய அளவில் பொது முடக்கம் அமலில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக அரசு பணிகள் பெரிதும் முடங்கியுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு காலத்திலும் மத்திய சுற்றுச்சூழல் வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த காடுகளை தனியார் திட்டங்களுக்காக அளிப்பது தொடர்பான 30 திட்டங்கள் குறித்து ஆலோசித்து அனுமதி அளித்துள்ளது. சுரங்கம் மற்றும் நெருஞ்சாலை துறை குறித்த திட்டங்களும் இதில் அடங்கும்.


தனியார் மயமாக்குவது குறித்து வீடியோ கான்பரன்சிங் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கில் உள்ள இடு மிஷ்மி சமூகத்தின் கலாச்சார நடைமுறைகள் ஆச்சரியம் மிகுந்தவை. மனிதர்களுக்கும் புலிகளுக்கும் இடையே வலுவான கலாச்சார தொடர்புள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் திபாங் பள்ளத்தாக்கில் அதிக அளவில் புலிகள் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வுகள் கூறுகின்றன.
சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் அடிப்படையிலும் வளமான இந்த பள்ளத்தாக்கானது நாட்டின் மிகப்பெரிய எட்டலின் நீர்மின் திட்டத்துக்காக அணை அமைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ளது. பொது முடக்கத்தின்போது கடந்த மாதம் 23ம் தேதி நடந்த வீடியோ கான்பரன்சிங மாநாட்டின்போது இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக இரண்டு அணைகள், வேறுவழியில் திருப்பும் இரண்டு சுரங்கங்கள், பென்ஸ்டாக் குழாய், சுரங்க மின்நிலையம், 50கி.மீ. தொலைவுக்கு மேல் சாலை உள்ளிட்டவை அமைக்கப்படும். இதற்காக சுமார் 8 மீட்டர் சுற்றளவு மற்றும் 1,178 ஹெக்டேர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்படும் மேலும் 2.8 லட்சம் மரங்கள் அகற்றப்படும் சூழல் உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலின்போது திட்டத்துக்கு அனுமதி தருவதற்காக காட்டிய இந்த அவசரமானது 2017ம் ஆண்டு வன ஆலோசனை குழு கூறியுள்ள வனகொள்கையில் இருந்து விலகி செல்வதாக உள்ளது. சத்தமின்றி திபாங் நீர்மின் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்த செய்தியானது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எட்டலின் நீர்மின் திட்டத்தை நிறுத்துங்கள், திபாங்குக்கு பாதுகாப்பு தாருங்கள், அருணாச்சலப் பிரதேச பசுமை காடுகளை பாதுகாப்பு கொடுங்கள் என்றஹேஷ்டேக்குகள் அனுமதிக்கு எதிரான பிரசாரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதுமட்டுமின்றி திபாங்கில் உள்ள இடு மிஷ்மி சமூகத்தின் குறும்படங்கள், பாடல்கள், உள்ளிட்டவையும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதனிடையே அறிவியலாளர்கள் பலர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எட்டலின் நீர்மின் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வன ஆலோசனை குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மக்கள் கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக மின்துறை அமைச்சகம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வனவிலங்கு பிரிவு ஆகியவற்றிடமிருந்து வனஆலோசனை குழுவானது திட்டம் குறித்த கருத்துக்களை கேட்டுள்ளது. அசாமில் உள்ள டெஹிங் பட்காய் யானை ரிசர்வ் பகுதியில் நிலக்கரி சுரங்க திட்டம், கோவாவின் பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாக நெடுஞ்சாலை, கிர் தேசிய பூங்காவின் வழியாக சுண்ணாம்புகல் சுரங்கம், கர்நாடகாவில் ஷராவதி சரணாலயத்தில் புவிதொழில்நுட்ப விசாரணை மையம் அமைத்தல் உள்ளிட்ட 30 திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் மூலமாக 15 புலிகள் ரிசர்வ் பகுதி, சரணாலயங்கள், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் மற்றும் ஏராளமான வனபகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கடந்த 12ம் தேதி திபாங் கூட்டம் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், ஒரு வாரத்திற்கு பின் 291 அறிவியலாளர்கள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் அடங்கிய குழுவானது பொது முடக்கத்தின்போது,தனியார் திட்டங்களுக்கு அவசர அவசரமாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து சுற்றுசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில் வீடியோ கான்பரன்சிங்கின்போது டிஜிட்டல் ஆவணங்களை மட்டுமே நம்பி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கள ஆய்வுகள் என்பது திட்டம் குறித்த மதிப்பீட்டின் முக்கிய அங்கமாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக