சனி, 23 மே, 2020

கொரோனா வைரஸ்: 152 ஆண்டுகளாக உணவு வழங்கும் வடலூரின் அணையா அடுப்பு

சாதியு மதமுஞ் சமயமும் பொய்யெனஆதியில்  உணர்த்திய அருட் பெருஞ்ஜோதி
;பிரமிளா கிருஷ்ணன் - பிபிசி தமிழ் கொரோனா ஊரடங்கு காரணமாக
வீடற்றவர்கள் பசியில் வாடும் நேரத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் வடலூர் சத்திய தரும சாலையில் ஆன்மீகவாதி வள்ளலார் தொடங்கிய அணையா அடுப்பு திட்டத்தின் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் உணவருந்துகின்றனர். பசி என்னும் பிணியை நீக்குவதுதான் உயர்ந்த தர்மம் எனக் கருதிய வள்ளலார் தொடங்கிய இலவச உணவு வழங்கும் திட்டம் இன்றளவும் தொடர்ந்து செயல்படுகிறது.
வடலூரில் உள்ள தரும சாலைக்கு வரும் நபர்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கும் எனக்கூறி 1867ல் மார்ச் 23ம் தேதி வள்ளலார் ஏற்றிய அடுப்பு, தற்போதும் செயல்படுகிறது.

e>சராசரியாக தினமும் 600 நபர்கள் உணவருந்தி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டதால், பலரும் சத்திய தரும சாலையில் தங்கியுள்ளனர் என தருமசாலை நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய தருமசாலை நிர்வாக அதிகாரி கோ.சரவணன், ''அன்னதானம் பல கோயில்களில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வள்ளலார் தொடங்கிய இந்த தரும சாலையில், தினமும் உணவு வழங்கப்படுகிறது. பசியோடு வருபவர்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்பது வள்ளலாரின் முக்கிய நோக்கம் என்பதால் தொடர்ந்து செயல்படுகிறோம். சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறோம். இங்குள்ளவர்களை முகக்கவசம் அணியச்சொல்கிறோம். இங்கு தங்கி சாப்பிடும் நபர்களுக்கு புதிதாக தட்டு வழங்கியுள்ளோம்,''என்கிறார்.
<>''வடலூர் சத்திய தரும சாலை மட்டுமல்லாது, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் மற்றும் தண்ணீரில் விளக்கு ஏற்றிய கருங்குழி கிராமத்திலும் உணவு வழங்குகிறோம். மாத பூசை நாளில் சுமார் 20,000 நபர்கள் வருவார்கள். தற்போது வழிபாட்டிற்கு யாருக்கும் அனுமதி கிடையாது என்பதால் அவ்வளவு கூட்டம் இல்லை. ஆனால் உணவு வேண்டி வருபவர்களுக்கு தொடர்ந்து உணவு கொடுக்கிறோம்,''என்றார் அவர்.
எந்த நேரத்திலும் சுமார் ஆறு மாதங்களுக்கு தேவையான அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை சேமிப்பில் வைத்திருப்பதால், தொடர்ந்து உணவு வழங்கமுடிகிறது என்கிறார் அவர். ''அரிசி, பருப்பு உண்டியல் உள்ளது. பலரும் இங்கு அரிசி மூட்டைகளை அனுப்புவார்கள். விவசாயிகள் விளைச்சல் எடுத்ததும், தங்களால் முடிந்த பங்கை இங்கு செலுத்துவார்கள். தற்போது இங்குள்ளவர்களுக்கு டோக்கன் தருகிறோம். இடைவெளி விட்டு உணவை வாங்கி செல்கிறார்கள்,'' என்றார் அவர்.
>தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வள்ளலார் சபை மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது என்கிறார் மேட்டுக்குப்பம் பகுதியில் அன்னதானம் வழங்கும் நந்திசரவணன்.
''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்னும் வள்ளலாரின் வரிகள் பலருக்கும் பரிச்சயமான ஒன்று. பயிர்கள் வாடுவதை போல, மனிதன் பசி ஏற்படும்போது, வாடுகிறான். பசிக் கொடுமையை போக்கிக்கொள்ள அவன் எத்தகைய தீய காரியத்தையும் செய்ய துணிகிறான் என்பதால், பசியைத் தீர்க்கவேண்டும் என்பதில் வள்ளலார் உறுதியாக இருந்தார். சாதி, மதம், இனம், பாலினம் என எந்த வேறுபாடும் இல்லாமல், பசியோடு வருபவர்களுக்கு உணவு கொடுப்பதுதான் உண்மையான கடவுள் வழிபாடு. மற்றவை எல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு என்றார். அவரது சத்தியமான வார்த்தைகள் இன்றளவும் செயல்பாட்டில் உள்ளன,'' என்றார் நந்திசரவணன்.
ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நடைபயணம் செல்பவர்கள் என பலருக்கும் உணவு வழங்கப்படுகிறது.
''பிற உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது, பசியாற்றவேண்டும் என்பதுதான் உண்மையான பக்தி என்பது வள்ளலாரின் கொள்கை. சாதி, மத வேறுபாடின்றி பலரும் உணவு பொருட்களை தானம் செய்கிறார்கள். அதனால்தான், பேரிடர் காலத்திலும் இங்கு உணவு வழங்கமுடிகிறது.
சுனாமி, தானே புயல், கஜா புயல் போன்றவற்றை அடுத்து கொரோனா காலத்திலும் தொடர்ந்து செயல்படுகிறோம். பொது மக்களின் ஒத்துழைப்புதான் இதற்குக் காரணம்,'' என்கிறார் நந்திசரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக