வெள்ளி, 22 மே, 2020

பாகிஸ்தானில் 107 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கியது

pakistan-passenger-plane-with-98-on-board-crashes-near-karachi-officials
hindutamil.in :பாகிஸ்தானில் லூகூரிலிருந்து 98 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் இன்று புறப்பட்டுச் சென்ற பிஐஏ விமானம் கராச்சி நகர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்தில் 98 பயணிகள் உள்பட 107 பேர் பயணித்ததாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் காக்கர் தெரிவித்துள்ளார். விமானத்தில் பயணித்தவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. லாகூர் நகரிலிருந்து 107 பேருடன் பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தின் ஏ320 என்ற விமானம் கராச்சி நகருக்குப் புறப்பட்டது விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தரையிறங்க ஒரு நிமிடம் இருந்தபோது, மலிர் பகுதியுள்ள மாடல் காலனி குடியுருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 முதல் 8 வீடுகள் வரை சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை. விபத்து தொடர்பாக மீட்புபுப் படையினர், தீயணைப்புப் படையினர், போலீஸார் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த விமானத்தில் பயணித்த பயணிகள், குடியுருப்புவாசிகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்த விபத்தையடுத்து, கராச்சியில் உள்ள அனைத்து முக்கிய மருத்துவமனைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக பாகிஸ்தானில் விமானப் போக்குவரத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் விபத்து நடந்துள்ளது.
விபத்து நடந்த இடத்திலிருந்து கரும்புகையும், நெருப்பும் தொடர்ந்து எரிந்து வருகிறது. அப்பகுதி குடியிருப்புப் பகுதி என்பதால் ஆம்புலன்ஸ்கள் செல்வதிலும் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக