ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

Farm to Table. வீட்டுத் தோட்டம் - 3

Farm to Table : வீட்டுத் தோட்டம் - 3
உங்கள் தோட்டங்களுக்கு ஏற்ற சிறந்த பயிர்கள் எவை?
மறு கேள்வியில்லாமல் முதலில் நீங்கள் தெரிவு செய்வது கொடி வகைகளாகத்தான் இருக்க வேண்டும். காரணம், சிலநேரங்களில் பூசணி, பீர்க்கங்காய் மற்றும் பாகற்காய் போன்றன தாமாகவே முளைத்து நன்றாக வளர்ந்து காய்ப்பதை அவதானித்து இருப்போம். சிலநேரங்களில் வீட்டின் கூரையின் மீதும் வேலிகளிலும் படருவதுண்டு. ஆமாம், உண்மையிலேயே கொடிவகை மரக்கறிகளை உற்பத்தி செய்வது என்பது சிரமம் குறைந்தது என்பதுடன் அதிக பலன் பெறக்கூடிய சிறந்த ஒரு தெரிவுமாகும்.
இந்த பதிவுக்கு பொருந்தும் வகையில் வீட்டுத் தோட்டங்களுக்கான சிறந்த தெரிவுகளாக கருதக்கூடிய தாவரங்கள் சிலவற்றை பட்டியலிடலாம். வரட்சி,
பராமரிப்பு சிரமம், வேலைப்பழு போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு வகைப் படுத்தப்பட்டுள்ளது.
1) படர்ந்து வளரும் கொடிவகை தாவரங்கள்
2) நிழல் குறைந்த பல்லாண்டு தாவரங்கள்
3) நிழல் குறைந்த பல்நோக்கு தாவரங்கள்
கொடிவகை தாவரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் காய்கறிகளை குறிப்பாக ரெண்டு பிரிவுகளுக்குள் அநேகமானவற்றை அடக்கிவிடல் முடியும்.
அதில் முதாலாவதாக வருவது வெள்ளரிக்காயின் இனமாகும். வெள்ளரி, பூசணி, முலாம் (melons), சுரக்காய், பீர்க்கங்காய், பாகற்காய், புடலங்காய், கோவைக்காய், மற்றும் சாம்பல் பூசணி ஆகிய அனைத்துமே ஒரே தாவரக் குடும்பத்தை சேர்ந்தவையாகும். இரண்டாவதாக வரக்கூடிய பிரிவு மண்ணின் வளத்தை மேம்படுத்தக் கூடிய அவரை இனமாகும். இதில் பயற்றங்காய், சிறகு அவரை, மொச்சை அவரை ( lablab), தம்பட்டை அவரை, பட்டாணி மற்றும் எத்தனையோ வகையான படரும் Greens beans இனங்கள் உண்டு.
இங்கே மேற்குறிப்பிட்ட பிரிவுகள் எதிலும் அடங்காத இன்னொரு பயிரையும் குறிப்பிட்டேயாக வேண்டும். அதுதான் பசன் பழம் (passion fruit). இதுவும் வறட்சியை தாங்கி நீண்டகாலத்துக்கு பயன் கொடுக்கும் ஒரு பயிராகும்.
"நிழல் குறைந்த பல்லாண்டு தாவரங்கள்" என்று வரும் பொழுது பப்பாளி, முருங்கை, சுண்டைக்காய், தேசிக்காய், டிராகன் கக்டஸ் (dragon fruit), பிரண்டை, தூதுவளை, மரவள்ளி போன்றவற்றை எடுத்துக்களாம். இவை குறிப்பாக பராமரிப்புத் தேவை குறைந்தவை. கோடை காலங்களிலும் குறைந்தளவு நீருடன் பிழைக்கக் கூடியவை.
இங்கே "நிழல் குறைந்த பல்நோக்கு தாவரங்கள்" என்பது உணவுத் தேவை என்பதற்கும் அப்பால் பயன் தரக்கூடியவை ஆகும். இதில் அகத்தி, துவரை, சீமைக் கிளுவை, ஆவாரை, மயிற்கொன்றை, இப்பிலிப்பில் போன்றவற்றை அடக்கலாம். இவை அனைத்துமே மண்ணின் வளத்தை மேம்படுத்தக் கூடிய அவரை குடும்பத்தை சார்ந்தவை. இந்த தாவரங்கள் ரைசோபியம் பக்றீரியா மூலம் காற்றில் உள்ள நைதரசனை பயன்படுத்தி வளருவது மாத்திரம் அல்ல நைதரசனை வேர்களிலும் சேமித்து வைக்கும் தன்மை கொண்டவை. இவற்றின் இலைகள் அதிக புரதச் சத்துக்களையும் பசுந்தாள் உரம்(green manure) என்று வரும்பொழுது அதிக தழைச்சத்துக்களையும் (நைதரசன்) கொண்டவை.
ஆவாரை மற்றும் மயிற்கொன்றை (Caesalpinia pulcherrima) போன்றவற்றின் பயன்களாவன அவற்றில் இருந்து விழும் தழைச்சத்து நிறைந்த இலைகள், காய்கள் மற்றும் பூக்கள் போன்ற உயிரினத்தொகுதி (biomass), வேட்டையாடும் பூச்சிகளுக்கான தங்குமிடம் மற்றும் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், வண்டுகள், தேன் சிட்டுகள் போன்ற மகரந்த காவிகளை கவர்ந்து விருந்து அளித்தல் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
அகத்தி, சீமைக் கிளுவை (gliricidia), இப்பிலிப்பில் ஆகியனவற்றின் புரதச் சத்து நிறைந்த இலைகளை ஆடு, மாடு, முயல், கோழி மற்றும் வாத்துக்களுக்கு பசுந்தீவனத்தின் (green fodder) ஒருபகுதியாக கொடுக்கக் கூடியவை. இந்த மரங்களில் இருந்து வெட்டப்படும் தடிகள் தோட்டங்கக்கு மிகவும் பயனுள்ளவை. இந்த மரங்களை ஒன்றோடு ஒன்றை தடிகள் அல்லது கயிறுகள் கொண்டு இணைத்துக்கட்டி செங்குத்தான பந்தல் அமைத்து, அவரை இன கொடிகளையும், பாகல் மற்றும் வெள்ளரி போன்ற கொடிகளையும் அதில் படரவவிட்டுப் பயனடையலாம்.
உங்க நிலத்தின் அளவுக்கு ஏற்ப பொருத்தமானவற்றை நீங்கள் கவனத்திற்கொள்ள முடியும்.
இங்கே உயர் மதிப்பு பயிர்கள் (high value crops) சிலவும் உள்ளடக்கப் பட்டுள்ளன. தேசிக்காய், முருங்கைக்காய், Dragon fruit, பாகற்காய் மற்றும் ஒப்பீட்டு அளவில் சுண்டைக்காய் ஆகின அவற்றில் அடங்கும்.
நிறைய தகவல்களுடன் மேலும் தொடரும்...
நண்பர்களே வீட்டுத் தோட்டம் பற்றிய எனது பதிவுகள் தொடர்ச்சியாக வரவுள்ளது. பிடித்திருந்தால் தயவு செய்து Like பண்ணுங்கள். கருத்துக்களை போடுங்கள். மறந்திடாமல் தேவைப் படுவோருக்கு share பண்ணுங்கள்.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக