ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

கம்யுனிசமும் ஜாதியும் . உலக கம்யுனிஸ்ட் சித்தாந்தம் .. கார்த்திகேயர்ன் பஸ்தூரா

Karthikeyan Fastura : s · கேள்வி : You are an entrepreneur..but why are you ordinantly advocating marxism
என் பதில் : எனக்கு கம்யூனிஸ்ட் சித்தாந்தம் முழுமையாக ஏற்புடையது
அல்ல, நான் தீவிரமான இடதுசாரியும் அல்ல. மற்ற உலக நாடுகளில் கம்யூனிச சித்தாந்தம் பொருந்தும் அளவிற்கு இந்தியாவிற்கு பொருந்தாது. இந்தியா வர்க்க பேதங்கள் மட்டும் கொண்டிருக்கவில்லை. அதற்கும் மேலாக நுணுக்கமான சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. அதனைப் பேசாமல் தொழிலாளர் பிரச்சனையை, விவசாயிகள் பிரச்சினையை பேசினால் முழுமையான சமதர்ம சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்க முடியாது.
அவர்களிடம் சாதியத்தை அணுகுவதில் குழப்பங்கள் இருக்கிறது, நிறைய தயக்கங்கள் இருக்கிறது. ஒருவரை ஆதரிப்பதால் மற்றவரை இழக்க நேரிடுமோ என்ற குழப்பம். சாதியம் தவறு என்று ஒத்துக் கொள்பவர்கள், அதை தவிர்க்க முடியாது என்பதையும் சேர்த்தே சொல்வார்கள். அதனால்தான் கேரளாவிலும் மேற்குவங்காளத்திலும் வட கிழக்கு மாகாணங்களிலும் பரவலாக மக்களை ஈர்த்தாலும் நிலை நிறுத்திக் கொள்வதில் இன்று போராடுகிறார்கள். அவர்களின் பெயருக்கு முன்னே காம்ரேட், சகாவு, தோழர் என்று பெயர் இருந்த போதும் பெயருக்குப் பின்னே நாயர், ராய், முகர்ஜி இன்று சாதிய ஒட்டுக்கள் இன்றும் இருக்கும்.

ஆனால் நான் கம்யூனிசத்தை வெளியிலிருந்து ஆதரிக்கும் என்றும் தயாராகவே இருக்கிறேன். காரணம் உழைக்கும் மக்களுக்கு போராடும்போது அதில் இயல்பாகவே ஒடுக்கப்பட்ட மக்கள் வந்துவிடுகிறார்கள். அவர்களின் மீது இந்த அரசாங்கமும், பெரு நிறுவனங்களும் செய்யும் பொருளாதார சுரண்டலுக்கு எதிராக கலகம் செய்கிறார்கள். இவர்கள் கலகத்திற்கு பயந்தே அரசுகள் பலசமயம் அரசுகள், நிறுவனங்கள் ஓரளவிற்கு சரியாக இயங்குகின்றது. கம்யூனிசம் இந்தியாவில் இன்னும் தீவிரமாக பரவி இருக்கவேண்டும். இவர்களின் குழப்பமான மனநிலையும், மக்களிடம் அணுகுமுறையில் இவர்கள் பேசும் மொழியும், கருத்தும் மிக அன்னியமாக இருப்பதால் இவர்களால் செல்வாக்கு பெற முடியவில்லை.
இன்னொரு நுணுக்கமான பிரச்சனை இவர்கள் தொழிலாளிகளுக்கு ஆதரவாக இருந்தாலும் தொழில் முனைவோர்களுக்கு ஆதரவாக இல்லை. அடித்தட்டு மக்கள் தொழிலாளியாக இருக்கும் போது விழிப்புணர்வு கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களை தொழில்முனைவோராக மாற்ற எந்த முயற்சியும் எடுக்க மாட்டார்கள். அதை கற்பிக்கவும் மாட்டார்கள். கடைசிவரை தொழிலாளி வேலை செய்தே மறைந்து போக வேண்டும்.
நான் முதல் தலைமுறை பட்டதாரி. என் தந்தை என்பீல்டு நிறுவனத்தில் 20 வருடம் வேலை பார்த்த தொழிலாளி. தொழில் சங்கத்தில் இருந்தவர். கம்யூனிசம், திராவிட சித்தாந்தங்கள் பழகியது அப்படித்தான். என் சிறுவயதில் அந்த பிரச்சனைகளை கேட்டபோது நாம் ஏன் போராட வேண்டும்? ஒரு முதலாளியாக இருந்தால் என்னால் இது அத்தனையும் சரி செய்ய முடியும் அல்லவா..? என்ற குருட்டு கற்பனை தோன்றியது.
நானும் ஒருநாள் படித்து பல ஐடி நிறுவனங்களில் வேலை பார்த்தேன். அங்கு தொழிற்சங்கங்கள் எதுவும் இல்லை. ஆனால் ஒரு தொழிலாளியாக எனக்கு எந்த சிரமமும் இல்லை. எல்லா வசதிகளும் எனக்கு நான் கேட்காமலே கிடைத்தது. போராடாமலேயே சம்பள உயர்வு கிடைத்தது. பணி நிரந்தரம் என்பது மட்டும் நமது அறிவை அப்டேட் செய்துகொள்வதில் இருந்தது.
ஒயிட் காலர் வேலை என்றாலும், ப்ளூ காலர் வேலை என்றாலும் தொழிலாளி தொழிலாளி தான். வசதிகள் மட்டுமே வித்தியாசப்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல என்னால் செய்யக் கூடியது எதுவுமில்லை என்ற வரையறை இருந்தது. இன்று சுந்தர்பிச்சை ஒரு பெரும் நிறுவனத்தில் உச்ச பதவியில் இருந்தாலும் அவரும் ஒரு தொழிலாளி தான்.
அதிகாரம், சுதந்திரம், அடையாளம் தேவைப்பட்டது. கூடவே என் கற்பனைக்கு வடிவம் கொடுக்க ஆசைப்பட்டேன். இது எனக்கு இயல்பாக தொழில்முனைவில் கொண்டு வந்து சேர்த்தது. தொழில்முனைவோர் ஆனேன். என் பயணம் நம்பிக்கையுடன் சென்றுகொண்டிருக்கிறது. என் பணியாளர்களிடம் நான் ஒருபோதும் முதலாளியாக நடந்துகொண்டதில்லை. பொறுப்புமிக்க ஒரு தலைமை நிர்வாகியாக மட்டுமே நான் இருந்திருக்கிறேன். அதைத்தாண்டி நண்பர்களாக, ஒரு ஆசிரியனாக தான் இருக்கிறேன். அவர்கள் அனைவரையும் தொழில்முனைய ஊக்கப்படுத்த செய்கிறேன். தொழில்முனைவு கூட்டங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறேன். அதற்காக தனியாக செலவு செய்கிறேன். நாளை நான் இன்னும் பல உயரங்களை அடைந்த போதும் முதலாளியாக ஒருபோதும் நடக்க மாட்டேன். மாறாக பொறுப்பாளியாக தான் இருப்பேன். நான் வளர வேண்டும் என்னுடன் சேர்ந்து பல ஆயிரம் பேர் சேர்ந்து வளர வேண்டும் என்பதுதான் என் சித்தாந்தம்.
இருபத்தோராம் நூற்றாண்டின் புதுயுக Startup நிறுவனங்களை தோற்றுவிக்கும் அனைத்து தொழில்முனைவோர்களும் இந்த சித்தாந்தத்தில் தான் நம்பிக்கை கொண்டு இயங்குகிறார்கள். அதனால் தான் பெரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளிகளுக்கு என்று தனியாக ESOP பங்குகளை கொடுக்கிறார்கள். Startup Founders பல பில்லியன் டாலர்கள் நெட்வொர்த் கொண்டிருந்தாலும் அதற்கேற்ற டாம்பீக வாழ்வை வாழாமல் சாதாரண இயல்பான வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் செல்வாக்கு அதிகாரம் பெருமுயற்சிகள் அனைத்தும் பெரும்பான்மையான மக்களுக்கு ஆதரவாக நிற்பதை காணலாம். அதுதான் என் கனவும் கூட. நான் வெற்றி பெறும்போது நான் மட்டுமே வெற்றி பெறுவதில்லை பல்லாயிரம் மக்கள் வெற்றி பெறுவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக