செவ்வாய், 28 ஏப்ரல், 2020

கன்டெயினர் லாரியில் பிடிபட்ட ராஜஸ்தான் இளைஞர்கள் வீடியோ

   ஸ்பெல்கோ :  முன்னறிவிப்பில்லாத தொடர் ஊரடங்கால், கேரளாவில் இருந்து தங்கள் சொந்த ஊரான ராஜஸ்தான் செல்ல கன்டெயினர் லாரிக்குள் பதுங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் சுமார் 26 பேர் காவல்துறையால் கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊடரங்கு உத்தரவால், அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறி தேவை இல்லாமல் வெளியில் செல்பவர்கள் மீது போலீசர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எனினும், பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி, போதிய உணவின்றி, தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். சிலர் தங்களது சொந்த ஊரை நோக்கி நடைபயணமாக சென்று உயிரிழந்த அதிர்ச்சி சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா, சித்தேடுகர் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கடந்த மாதம் வேலைக்காக அழைத்துவரப்பட்டுள்ளனர். திடீரென ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அவர்களுக்கு வேலை இல்லாமல், தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.


அதன்படி, தேனி வழியாக சுமார் 200 கி.மீ. நடந்து கரூரை அடைந்துள்ளனர். கரூரில் இருந்து பரமத்திவேலூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ராஜஸ்தான் பதிவெண் கொண்ட இருசக்கர இருசக்கர வாகனங்களை ஏற்றிச்செல்லும் கன்டெய்னர் லாரியிடம் உதவி கேட்டுள்ளனர். கன்டெயினர் லாரியின் ஓட்டுநரும் இரக்கப்பட்டு அவர்களுக்கு உதவ முன்வந்து லாரியினுள் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.
கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலம் பகுதியில் செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கன்டெயினர் லாரியை சோதனை செய்ததில் வடமாநில இளைஞர்கள் சுமார் 26 பேர் கூட்டமாக உட்கார்ந்து இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொரோனா தடுப்பு மண்டலக்குழு சிறப்பு அதிகாரிகள் கன்டெய்னர் லாரி ஓட்டுநர் மற்றும் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அங்கேயே அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக