திங்கள், 6 ஏப்ரல், 2020

உத்தர "பிரேதம்" தந்தையின் உடலை தூக்க உதவி இல்லை .. மகள்களே மறைந்த தந்தையின் ..

Dmk Mullai : உத்தரபிரதேசத்தில் நடந்த கொடுமை .
 சிகிச்சை பெற முடியாமல் இறந்த தந்தை தூக்கி சுமக்க முடியாமல் மகள்கள் தூக்கி சுமந்த வேதனை.. உத்தரபிரதேசத்தில் அலிகாரில் தேநீர் விற்பனை செய்யும் சஞ்சய் என்ற சகோதரருக்கு திடிரென உடல் நிலை சரியில்லாமல் போகி உள்ளது அவர் தனியாக பல்வேறு மருத்துவ மனை சென்று உள்ளார் அங்கே டாக்டர் என்பதை இல்லை இறுதியாக தனது இரு மகள்களை அழைத்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார்..
ஊரடங்கு ஊத்தரவை காரணம் காட்டி சரியாக மாத்திரை கூட கொடுக்காமல் மருத்துவ மனை வளாகத்தில் அவர் உயிர் பிரிந்தது
மரணமடைந்த தந்தையை பார்த்து கதறி அழுத மகள்கள் உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல ஆள் இல்லாததால் ரிக்ஸா ஓட்டுநர் உடன் இரு மகள்களும் தோலில் தூக்கி கொண்டு கதறி அழும் காட்சி வேதனை அளிக்கிறது..
உபியில் தொடர்ந்து மனித உயிர்கள் அநியாயமாக போவது வாடிக்கையாகிவிட்டது..


hindutamil.in : உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சிக்காலமானது, அச்சில் கொண்டுவர முடியாதவற்றையே சாதனைகளாகக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினை காஷ்மீர் அல்ல, மத்திய பாரதத்தை ஆட்டிப்படைக்கும் மாவோயிஸ்ட்டுகளும் அல்ல, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆயுதம்தாங்கிய பிரிவினைவாதிகளும் அல்ல, பாகிஸ்தானும் அல்ல, சீனமும் அல்ல; மனிதர்களின் அன்றாட அழிவுக்குக் காரணமாக இருக்கும் உத்தர பிரதேசம்தான்.
உத்தர பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளும், 404 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. இருந்தும், இந்திய ஜனநாயகம் கடுமையாகச் சேதப்படும் மாநிலமாக அது திகழ்கிறது. வகுப்புவாதம், சாதிவெறி, சமூக அநீதி, ஊட்டச்சத்துக் குறைவு என்று அனைத்துமே இங்கு நிறுவனமயமாக்கப்பட்டு நிரந்தரமாகிவிட்டது. இந்திய நாட்டுக்குள் உத்தர பிரதேசம் வளர்ச்சி பெற என்ன திட்டத்தை வைத்திருக்கிறோம்?
கள யதார்த்தங்கள்
2000-க்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டது, ஏற்றத்தாழ்வுகள் சிறிதளவுக்குக் குறைந்தன என்ற எண்ணம் ஏற்பட்டது. 2017-க்கான மனிதவள வளர்ச்சி அட்டவணையில் இந்தியாவிலேயே உத்தர பிரதேசமும் பிஹாரும் மிக மோசமான செயல்பாட்டுக்காக இறுதியில் இடம்பெற்றன. கடந்த 27 ஆண்டுகளாக உத்தர பிரதேசம் தனது மனிதவளக் குறியீட்டு அட்டவணையை மேம்படுத்தவே இல்லை என்பதை ‘ஸ்டேட் வங்கி’யின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
புள்ளியியல் - திட்ட அட்டவணைத் துறை, கல்வி பற்றிய அறிக்கைத் தயாரிப்பில் ‘குடும்பங்களின் சமூக நுகர்வு’ என்ற தலைப்பிலும், நிதி ஆயோக் அமைப்பு ‘பள்ளிக் கல்வித்தர அட்டவணை’ என்ற தலைப்பிலும், பெண் கல்வியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலம் கேரளம் என்றும், மிக மோசமாகச் செயல்பட்ட மாநிலம் உத்தர பிரதேசம் என்றும் ஆய்வுசெய்து தெரிவித்துள்ளன. ஒருகாலத்தில் உத்தர பிரதேசத்துடன் சேர்ந்திருந்த உத்தராகண்ட் இப்போது தரத்தில் உயர்ந்துவருகிறது.
வகுப்புவாதம் உருவான வரலாறு
சட்டம் ஒழுங்கின்மை, கொள்ளை, வகுப்புவாதம், சாதிக் கொலைகள், பாலியல் சார்ந்த கொடூரச் சம்பவங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத நிலை, கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களைப் பண்ணையார்கள் அடிமைப்படுத்திச் சுரண்டுவது என்று அனைத்துமே இந்த மாநிலத்தில் தொடர்கின்றன. அதன் ஏழைகளில் ஒரு பகுதியினர் இடம்பெயரும் தொழிலாளர்களாக மாநிலத்தின் நகர்ப் பகுதிகளுக்கோ, பிற மாநிலங்களுக்கோ வேலை தேடிச் செல்கின்றனர். உத்தர பிரதேசமானாலும் வெளி மாநிலமானாலும் - நல்ல உணவு, குடிநீர், உடை, மருத்துவ வசதி, சுகாதாரமான சுற்றுப்புறம், கல்வி, வேலைக்கேற்ற நியாயமான ஊதியம், அரசு அல்லது தன்னார்வ நிறுவனங்களின் அரவணைப்பு என்று எதுவுமே இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்களாகவும் சபிக்கப் பட்டவர்களாகவும் - போகும் இடங்களிலும் உத்தர பிரதேச ஏழைகள் வாழ்கின்றனர்.
மும்பை நகரில் வேலைக்குச் செல்வோர் மகாராஷ்டிரத்தவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மேற்கு ஆசியாவில் முறையான குடியிருப்பு, வேலை அனுமதி இல்லாமல், பணத்தாசை பிடித்த ஒப்பந்ததாரர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, கசக்கிப் பிழியப்படுகின்றனர். எழுத்தறிவின்மையும் வறுமையும் அவர்களின் நிரந்தர அடையாளங்களாகிவிட்டன. உத்தர பிரதேசத்தில் நடக்காத சமூகக் கொடுமையோ தாக்குதல்களோ கிடையாது. காரணம், மாநிலம் மிகவும் பெரியது. ஆப்பிரிக்க, ஐரோப்பிய, தென்அமெரிக்கக் கண்டங்களில்கூட உத்தர பிரதேசம் அளவுக்கு மக்கள்தொகை கிடையாது.
மாநில நிர்வாகத்தில் லஞ்சமும் ஊழலும் நிலவுகின்றன. அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மக்களைப் பற்றி கவலையில்லை. மக்களைக் கொடூரமாக நடத்த எவருக்கும் தயக்கம் இல்லை என்பதால், மதம்தான் மக்களை வழிநடத்துகிறது. இங்கு இந்து, இஸ்லாம் இரண்டிலுமே மிகவும் கட்டுப்பெட்டியான, தீவிரமான மதவாதிகளே மக்களை வழிநடத்துகின்றனர். நவீனத்துவமும் அரசு நிர்வாகமும் பெருமளவில் மக்களை ஊடுருவவில்லை. அரசாங்கத்தை மக்கள் விரோதியாகப் பார்க்கும் மக்களுக்குச் சாமியார்களும் குண்டர்களும் மீட்பர்கள்போல் தெரிகின்றனர்.
சாதி, மதம் அடிப்படையிலான தீயைக் கடந்துதான் அரசியல் அதிகாரத்தைக் கட்சிகள் கைப்பற்றுகின்றன. எனவே, சாதியமும் மதவாதமும் ஆழ வேரூன்றிவிட்டன. அன்றாட வகுப்புவாதம், கலவரங்கள் இப்போதைய உத்தர பிரதேசத்தின் அங்கமாகிவிட்டன என்பதை அறிஞர்கள் சுதா பை, சஜ்ஜன் குமார் தெரிவிக்கின்றனர். உள்ளூர் அளவில், குறிப்பிட்ட கால இடைவெளியில், சின்னஞ்சிறு வகுப்பு மோதல் சூழல்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால், மாநிலம் எப்போதுமே கொதிநிலையில் இருக்கிறது. மாநிலத்தின் கங்கை-யமுனை கலாச்சாரத்தின் இன்றைய நிலை இது.
குற்றச்செயல் தரவுகள்
குற்றங்கள் அவசியமானவை, நியாய மானவைதான் என்ற சூழலிலேயே ஒவ்வொரு உத்தர பிரதேசக் குடிநபரும் இன்று வளர்கிறார். தேசிய குற்றச் செயல் பதிவேட்டு முகமை கடந்த ஆண்டு தரவுகளை வெளியிட்டது. இந்தியாவில் பதிவான மொத்த குற்றச் செயல்களில் 10% - சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் - உத்தர பிரதேசத்தில்தான் பதிவாகின்றன. மகளிருக்கு எதிரான குற்றங்களில் மாநிலத்தில் நடந்தவை மட்டும் 56,011. எல்லா மாநிலங்களிலும் சேர்த்து 3,59,849. துப்பாக்கி உரிமங்களிலும் துப்பாக்கிகளை வைத்திருப்பதிலும் உத்தர பிரதேசம்தான் முதலிடம் வகிக்கிறது. உள்துறை அமைச்சகத்தின் பதிவின்படி 2016-ல் உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி உரிமம் வைத்திருந்தவர்கள் 12.77 லட்சம் பேர். ஜம்மு-காஷ்மீரில் 3.69 லட்சம். இவையெல்லாம் அதிகாரபூர்வமாகத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை மட்டுமே. 2015-ல் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாக நாடு முழுவதும் பதிவான வழக்குகள் 3 லட்சம்; உத்தர பிரதேசத்தில் மட்டும் 1.5 லட்சம். உத்தர பிரதேசத்திலும் நவீனத்துவத்தைப் புகுத்தும் எந்த முயற்சியும் சாதிரீதியாக மக்களைத் திரள வைக்கிறது அல்லது இந்து - முஸ்லிம் மோதலுக்குக் காரணமாகிறது.
உத்தர பிரதேசத்தை ஏன் பிரிக்க வேண்டும்?
உத்தர பிரதேச மாநிலத்தை இப்போதிருக்கும் நிலையிலிருந்து ஏன் பிரிக்க வேண்டும் என்றால், அரசு நிர்வாகத்தின் புறக்கணிப்புதான் முக்கிய காரணம். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூர்வாஞ்சல் (கிழக்கு உ.பி.), புந்தேல்கண்ட், அவத் (மத்திய உ.பி.), பச்சிம் பிரதேஷ் (மேற்குப் பகுதி) ஆகியவை தங்களுடைய பகுதியின் வளர்ச்சிக்கு அதிக நிதியாதாரம் வேண்டும், இல்லாவிட்டால் உத்தர பிரதேசத்திலிருந்து தனியாகப் போகத் தயார் என்று கூறுகின்றன. தண்ணீர் பெறக்கூட இவை மாநில அரசிடம் போராடுகின்றன. உத்தர பிரதேசத்திலிருந்து பிரிந்த பிறகு உத்தராகண்ட் வளர்ச்சி அடைந்துவருகிறது.
மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை 1955-ல் வெளி யானது. அதற்கான குழுவில் வரலாற்றாசிரியர் கே.எம்.பணிக்கரும் இடம்பெற்றிருந்தார். உத்தர பிரதேசம் நிர்வாகரீதியில் கட்டுக்கடங்காத பெரிய நிலப்பரப்பாக இருப்பது குறித்து, பணிக்கர் 10 பக்கத் தனிக் குறிப்பைத் தயாரித்துத் தந்தார். இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு உத்தர பிரதேசம் பெரிய சவாலாக விளங்கும் என்று அப்போதே அவர் கணித்தார்.
உத்தர பிரதேச மக்களின் நன்மைக்காகவும், இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவும் ஜனநாயக முறைப்படி உத்தர பிரதேசத்தை மேலும் பிரிப்பது குறித்த விவாதத்தை மத்திய, உத்தர பிரதேச அரசுகள் தொடங்குவது நல்லது. நீண்ட காலமாகச் சேதப்பட்ட அது உளவியல்ரீதியாகக் குணப்படுத்தப்பட வேண்டும்.
- ராகுல் ஜெயராம், ஜிண்டால் பல்கலைக்கழகப் பேராசிரியர்.
© ‘தி இந்து’, தமிழில்: சாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக