வெள்ளி, 24 ஏப்ரல், 2020

மே மாத மத்தியில் கொரோனா உச்சத்தைத் தொடுமா?

மே மாத மத்தியில் கொரோனா உச்சத்தைத் தொடுமா?மின்னம்பலம் : மே மாத மத்தியில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொடும் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்றுக்கு உலகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று புதிதாக 1,409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆக, கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21,700 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 686 ஆக உள்ளது.

எனினும் நாட்டில் உள்ள 78 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது மட்டுமே சற்று ஆறுதலான செய்தியாக இருக்கிறது. ஊரடங்கு காரணமாக கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிந்தது எனவும், சமூகப் பரிமாற்றத்தை தடுக்க முடிந்ததாகவும் சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்தார்.
இதனிடையே இந்தியாவில் மே மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சத்தைத் தொடும் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பற்றி சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து டைம்ஸ் பத்திரிகை குழுமம் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
நேற்று (ஏப்ரல் 23) மின்னம்பலத்தில் ஊரடங்கு: மே 3ஐத் தாண்டி நீடிக்கும் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், “ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள் என உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் தங்களுக்குள் பகுத்துக் கொண்டு அந்தந்த நாடுகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவதற்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று உலகசுகாதார நிறுவனம் சில பரிந்துரைகளை முதற்கட்டமாக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. இதன்படி ஊரடங்கு உத்தரவை மே முதல் வாரத்தில் தளர்த்தினாலோ அல்லது பகுதியாக ரத்து செய்தாலோ ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் மே 3ஆவது வாரம் பாதிப்புகள் மிகக் கடுமையாக இருக்கலாம் என்று கணித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்div


இதைத் தடுக்க வேண்டுமென்றால் மே மாதம் முழுதும் ஊரடங்கு உத்தரவைத் தொடர வேண்டும் என்று முதற்கட்டமாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவலாக தெரியப்படுத்தியிருக்கிறார்கள் உலக சுகாதார நிறுவனத்தினர். இந்த முன்னெச்சரிக்கைத் தகவலை தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமான மாநிலங்களின் தலைமைக்கு மத்திய சுகாதாரத்துறை தெரியப்படுத்தியிருக்கிறது” என்று தெரிவித்திருந்தோம். இந்த செய்தியையே ஆய்வுகளும் உறுதிப்படுத்துவதாக அமைகின்றன.
அந்த ஆய்வில், “மே மாதம் 22ஆம் தேதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டலாம். மே 3ஆம் தேதி 38,534 ஆகவும், 8ஆம் தேதி 46,819 என்ற எண்ணிக்கையிலும் இருக்கும் கொரோனா பாதிப்பு, மே 14ஆம் தேதி 65,601 பேரைத் தாக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மே 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தால் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கொரோனாவை முழுவதும் கட்டுப்படுத்திவிடலாம் என்றும், மே 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தால் ஜூன் மாதம் மத்தியில் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தியாவில் இறப்பு சதவிகிதம் குறைவாகவே இருக்கும் என்றும், அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும்போதும் அரசும், மருத்துவக் குழுவினரும் அந்தச் சூழலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்துள்ளது. ஐசிஎம்ஆரின் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்க்கவா டெல்லியில் நேற்று (ஏப்ரல் 23) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை எப்போது அடையும் என்பதைக் கூற முடியாது. மே 3ஆம் தேதி அடையுமா அல்லது எப்போது என்பதைச் சரியாகக் கணிக்க முடியாது. ஆனால், தற்போது வரை கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் 4.5 ஆக உள்ளது. பாதிப்பை இதற்குமேல் குறைத்து விடலாம் என்று இதைக் கொண்டு சொல்லலாம். ஆனால் பாதிப்பின் உச்சத்தைக் கணிப்பது மிகவும் கடினம்” என்று தெரிவித்துள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக