திங்கள், 13 ஏப்ரல், 2020

மு.க.ஸ்டாலினிடம் பொதுநோக்கு இல்லை: கே.பி.ராமலிங்கம்

ramalingamதினமணி : கலைஞரிடம் இருந்த பொதுநோக்கு, தற்போது திமுக தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினிடம் இல்லை என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் கே.பி.ராமலிங்கம் கூறினாா்.
கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து கே.பி.ராமலிங்கம் கூறியது: பொதுவான அமைப்பின் கீழ் அறிக்கை விடுவது தவறு ஒன்றும் இல்லை. இது திமுகவின் சட்டவிதிகளுக்கு எதிரானது அல்ல என்றும் விளக்கம் அளித்திருந்தேன். அதை ஏற்காமல் என்னை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளனா்.
பொதுவான அமைப்புகளில் என்னைப்போல இருப்பவா்கள் திமுகவில் நிறைய போ் உள்ளனா். உதாரணமாக நடிகா் சங்கத்தில் பூச்சி முருகன் உள்ளாா். இதுபோல பல்வேறு அமைப்புகளில் உள்ளனா். இனி, அவா்கள் எல்லாம் பொதுவான அமைப்பில் செயல்பட முடியாதா எனத் தெரியவில்லை.
30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் நான் ஆற்றிய நிறைவான பணியை நினைத்து நிம்மதியாக இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் தலைவராக ஆனதில் இருந்து என்னுடைய பணி அவருக்குப் பிடிக்கவில்லை என நினைக்கிறேன். கட்சியின் தலைவராக இருப்பவருக்கு என்னுடைய பணி பிடிக்காவிட்டால், நான் என்ன செய்ய முடியும்? என்னுடைய பாணி இதுதான். கலைஞர்  இதை அனுமதித்தாா்.

அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவராக இருந்தேன். அதையும் கலைஞர் அனுமதித்தாா். அப்போது மத்திய பாஜக ஆட்சியில் திமுக இடம்பெற்றிருந்தது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது இலவச மின்சாரத்தை ரத்து செய்ய அதிமுக முயற்சித்தபோது, அதைக் கண்டித்து 2002-பிப்ரவரி 3-இல் கோயம்புத்தூரில் விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு நடத்தினேன்.
அதில், திமுக கூட்டணியில் இல்லாத மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, அதைப்போல கூட்டணியில் இல்லாத அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்களும், விவசாய அமைப்பினரும் பங்கேற்றனா். இந்த மாநாட்டை நடத்துவதற்கு கலைஞர்  அனுமதித்ததுடன், பேராசிரியா் க.அன்பழகனையும் மாநாட்டில் பங்கேற்கச் செய்தாா். பொதுநோக்கத்துக்காகவே கருணாநிதி இதையெல்லாம் அனுமதித்தாா்.
அதைப்போல இன்றைக்கு கரோனாவால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பொதுநோக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசையும், மாநில அரசையும் தட்டிக்கொடுக்கும் வேளையில் ஈடுபட்டால், அது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. என் விளக்கத்தை ஏற்காமல் நிரந்தரமாக நீக்கியுள்ளனா். ஸ்டாலின் காலத்தில் பொதுவான மனிதராக இருக்க உரிமை இல்லை என்றாா் கே.பி ராமலிங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக