புதன், 15 ஏப்ரல், 2020

மலைக் கிராம மக்களின் மருத்துவர்; தினமும் பரிசல் பயணம்'- கோவையைக் கலங்கவைத்த இளம் மருத்துவரின் மரணம்

சதீஸ் ராமசாமி - கே.அருண் -:விகடன் : கோவை மாவட்டத்தைப் பூர்வீகமாகக்
கொண்ட இளம் டாக்டர் ஜெயமோகன் டெங்கு காய்ச்சலால் மரணமடைந்தார்.
கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த எல்.ஐ.சி ஏஜென்ட் வாசுதேவன். இவரின் மகன் ஜெயமோகன் (29) எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு, தெங்குமரஹாடா ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. இதனிடையே, கடுமையான காய்ச்சல் காரணமாக, ஜெயமோகன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், டாக்டர் ஜெயமோகனுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. ஆனால், அதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. அதே நேரத்தில், ஜெயமோகனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜெயமோகனின் நண்பர்கள் சிலர் கூறுகையில், ``ஜெயமோகன் நல்ல படிப்பாளி. ப்ளஸ் டூ தேர்வில், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர். மருத்துவராக வேண்டுமென்பது அவரின் சிறு வயது கனவு. எம்.பி.பி.எஸ் முடித்தவுடன் வெளிநாட்டுக்கோ, தனியார் மருத்துவமனைக்கோ செல்லாமல், தெங்குமரஹாடா என்ற மலைக் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். பரிசல் மூலமே அங்கு செல்ல முடியும். ஒருநாளும் தவறாமல் பணிக்குச் செல்வார்.




டாக்டர் ஜெயமோகன்




டாக்டர் ஜெயமோகன்
தன்னுடன் பணியாற்றுபவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துவார். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மீது அதிக அக்கறையுடன் இருப்பார். கொரோனாவுக்கு எதிரான பணியில் கூட ஆக்டிவாக இருந்தார். சில நாள்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதித்ததாக தகவல் வந்தது. இப்படியாகும் என்று நாங்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை” என்றனர்.





ஜெயமோகன் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனையில் கேட்டபோது, ``கடந்த மூன்று நாள்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும், வார்டில் நன்றாகத்தான் இருந்தார். கொரோனா நெகட்டிவ் என்று வந்தது. டெங்கு உறுதி செய்யப்பட்டதால், அதற்கான சிகிச்சை அளித்து வந்தோம். உயிரிழப்பதற்கு 6 மணி நேரத்துக்கு முன்னர் மயக்கமடைந்தார்.




டாக்டர் ஜெயமோகன்




டாக்டர் ஜெயமோகன்
பிறகு தண்ணீர் கேட்டார். நாங்கள் தண்ணீர் கொடுக்கும்போது, அவரிடம் எந்தப் பதிலும் இல்லை. திடீரென்று அவரது இதயத்துடிப்பு முடங்கிவிட்டது (Cardiac arrest). உடனடியாக ஐ.சி.யூ-வுக்கு மாற்றி வென்டிலேட்டர் வைத்தோம். அது பலனளிக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிரிந்துவிட்டது” என்றனர்.

ஜெயமோகன் மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெயமோகன் உயிரிழந்த தகவலை தெரிந்து அவரின் தாய், தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார்.
ஜெயமோகன் உயிரிழப்பு குறித்து நீலகிரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, ``கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தெங்குமரஹாடாவில் பணியாற்றிவந்த டாக்டர் ஜெயமோகன் தனக்கு உடல் சரியில்லை என சில தினங்களுக்கு முன் விடுமுறை எடுத்துக்கொண்டார்.




டாக்டர் ஜெயமோகன்




டாக்டர் ஜெயமோகன்

கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் தொடர்பான சோதனை மேற்கொண்டதில் இரண்டுமே இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மருத்துவரின் இறப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரித்து வருகிறோம்" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக