திங்கள், 13 ஏப்ரல், 2020

அரசின் தடை பட்டினி சாவுக்கு வழிவகுக்கும்: அரசியல் கட்சிகள்!


அரசின் தடை பட்டினி சாவுக்கு வழிவகுக்கும்: அரசியல் கட்சிகள்!மின்னம்பலம் : கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் இந்த சூழலில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில், “பொதுமக்களை நேரடியாக அணுகி இதுபோன்று நிவாரணம் வழங்குவது 144 தடை உத்தரவு விதியினை மீறும் செயலாகும். விதி மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக அரசு சார்பில் நேற்று (ஏப்ரல் 12) அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்பு, ஆதரவற்றோர், ஏழை எளிய மக்கள், மனநலம் பாதித்தவர்கள், வீடு இல்லாதோர் ஆகியோருக்கு உதவி செய்து வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் திமுக, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மின்னம்பலத்தில், கொடைக்குத் தடை: அரசே செய்யும் அரசியலா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் தற்போது அரசின் அறிவிப்புக்கு, அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கருணையில்லா ஆட்சி
"இத்தகைய உத்தரவு போட்ட ஈவு இரக்கமற்ற அந்த உள்ளத்தைக் கேட்கிறேன்; தானும் செய்யமாட்டேன், மற்றவர்களும் செய்யக் கூடாது, செய்ய முன்வந்தால் தடுப்பேன் என்பதுதான், இந்த ஆட்சியின் வஞ்சக எண்ணமா?
தனிமனித இடைவெளி இல்லாமல் கூடுவது தவறாக இருக்கலாம். அப்படி கூட்டம் சேர்வதைக் காவல் துறையினர் ஒழுங்குபடுத்தலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியே செய்யக்கூடாது, உணவுப் பொருள் தரக்கூடாது என்று எப்படி உத்தரவிட முடியும்?
கருணை உள்ளத்தோடு, கண்ணீர் துடைக்கத் தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க எவராலும் இயலாது; இது ஜனநாயக நாடு; யாரும் எவருக்கும் உதவி செய்யலாம்; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்!
'கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!' என்ற வள்ளலார் வார்த்தைகளால் எச்சரிக்கிறேன்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பட்டினி சாவுக்கு வழிவகுத்துவிடும்
முதியோர்களுக்கு மருந்துப் பொருட்களும், ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொருட்களையும் அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் விநியோகிக்கவில்லை எனில் முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோரின் உயிர் வாழ்வு என்பது கேள்விக்குறியாகிவிடும். அரசு இயந்திரத்தை மட்டும் வைத்து தமிழகத்தில் உள்ள அனைவரின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்வது இயலாத காரியமாகும். இது பட்டினிச் சாவிற்குக் கூட வழிவகுத்து விடும்.
அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவிற்கு எதிரான இந்த யுத்தத்தில் பாடுபட வேண்டும் என்ற நிலையில் அரசியல் மாச்சரியங்களால் தமிழக அரசு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, தமிழக அரசு இந்த அசாதாரண சூழ்நிலையிலும் அரசியல் மாச்சரியங்களைத் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் உதவிகளை உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பொதுமக்கள் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மக்களுக்கு உதவிடப் பிறப்பித்துள்ள தடை உத்தரவைத் தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும்'' என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
“வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்த தடை உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக