புதன், 8 ஏப்ரல், 2020

தேவையில்லை, இந்த பாசாங்கு ... பாஜக அமைச்சர்களின் எம்பிகளின் சம்பள குறைப்பு நாடகம் !

சாவித்திரி கண்ணன் : தேவையில்லை, இந்த பாசாங்கு!
பாசாங்குத்தனத்தை போல அறுவெறுக்கதக்கதும், ஆபத்தானதும் வேறில்லை!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தில் 30% த்தை கொரானா சிகிச்சைக்கான நிதியாக  தருவதற்கு ஒரு அவசரசட்டம் இயற்றப்பட்டுள்ளது!
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்?
இதை தியாகம் என்று மக்கள் போற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?
இவர்களெல்லாம் எத்தனை கோடிகள் செலவழித்து அந்த பதவிக்கு வந்தவர்கள் எனத் தெரியாதா- மக்களுக்கு!
ஒரு லட்சம் சம்பளத்தில் 30,000 ஆயிரம் போனாலும், ரூபாய் 70,000 த்துடன் மற்றொரு 70,000 ஆயிரம் படியாகவும் மற்ற பல சலுகைகளும் எம்பிக்களுக்கு கொட்டிக் கொடுக்கப்படுகிறதே!

ஆனால்,இவர்களில் கம்யூனிஸ்டு எம்.பிக்களைத் தவிர, வேறு யாரும் இவற்றையெல்லாம் நம்பி வாழ்பவர்களாக இருக்க வாய்ப்பில்லை..என்பதும் மக்களுக்கு தெரியாததல்ல!
ஆக,பெரும்பாலான எம்பிக்கள் தங்கள் முழுச் சம்பளத்தை தந்தால் கூட அவர்களுக்கு இழப்பேதும் இருக்காது என்பது தான் உண்மை! ஏனெனில், சாராய ஆலைகள், பணம்பிடுங்கும் கல்லூரிகள்,சமூகத்தை சீரழிக்கும் சாட்டிலைட் சேனல்கள், மணல்குவாரிகள்,கிரானைடுகுவாரிகள்…பெரும் தொழிற்சாலைகள்,வியாபார நிறுவனங்கள்…என எத்தனையெத்தனை சொத்துகளுக்கு தங்கள் எம்பிக்கள் சொந்தக்காரர்கள் என்று அந்தந்த தொகுதி மக்களுக்கு நன்கு தெரியுமே!
ஏதோ தியாகம் செய்வது போல நீங்கள் செய்யும் இந்த பாசாங்குத்தனத்தால் எத்தனை அலுவலகங்களில்,தொழிற்சாலைகளில்,இன்னும் பல வியாபாரத் தளங்களில் சம்பளக்குறைப்புக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாவீர்கள் தெரியுமா?
உங்களைப் போல லட்சக்கணக்கில் சம்பளம்,சலுகை பெறுபவர்களுக்கு குறைக்கப்பட்டால் பாதிப்பில்லை! ஆனால், பத்தாயிரம்,இருபதாயிரம் முப்பதாயிரம் என்றும், இன்னும் சில நூறுகளும் தினகூலியாக வாங்கும் கூலிகளிடமும் உங்கள் முன்னுதாரணத்தை காட்டியல்லவா பேரம்பேசும் பெரும்பாலான முதலாளிவர்க்கம்!
ஒரு சில முதலாளிகள் வேலை,வருமானம் இல்லாவிட்டாலும் கூட, தொழிலாளி என்ன செய்வான் பாவம்? அவன் குடும்பத்தை பட்டினிபோடக் கூடாது என்று கொடுக்கிறார்களே…,தங்கள் இழப்பை பொருட்படுத்தாமல்- அது தான் தியாகம்!
நான் கேட்பதெல்லாம், முறைகேடான வழிமுறைகளில் நீங்கள் சேர்த்து வைத்துள்ள செல்வம் மற்றும் ஊழல் பணத்தை இந்த பேராபத்தான காலகட்டத்தில் இந்த சமூகத்திற்கே திருப்பி கொடுக்க முன்வருகிறீர்களா?
முழுதாக இல்லாவிட்டாலும்,அதில் ஒரளவேனும் கொடுக்க முன்வந்தால்.., அது கூட தியாகமில்லை! ஆனால், ’’மனசாட்சிக்கு ஒரளவாவது கட்டுப்பட்டவன்பா…’’ என்ற அளவுக்காவது மக்கள் அங்கீகரிப்பார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக