செவ்வாய், 21 ஏப்ரல், 2020

பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறப்பு ஏன்?

பத்திரமாக வீட்டுக்குள் இருக்கும்போது பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறப்பு ஏன்? மின்னம்பலம் : நாடு முழுவதும் கொரோனாவால்
ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தளர்வுகளைக் கொண்டுவர முடியாது என்று தமிழக அரசும் நேற்று (ஏப்ரல் 20) திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
ஆனால்,  நேற்று முதல் தமிழக அரசின் பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்கள் மட்டும் திறக்கப் பட்டிருக்கின்றன. மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமல்லாமல், இணை, துணைப் பதிவாளர் அலுவலகங்களும் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் குறைந்த அளவிலே வந்திருந்தாலும் அலுவலகங்கள் இயங்கின. ஏற்கனவே சார்பதிவாளர்கள் சங்கத்தினர், “ஊரடங்கு முடியும் வரை பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறக்க வேண்டாம். பத்திரப் பதிவு செய்ய பலர் வர வாய்ப்பில்லை என்றாலும் தொற்று அறிகுறியோ, தொற்றோ இருக்கும் சிலர் வந்தாலும் பிரச்சினை ஆகிவிடும். இது அத்தியாவசியமான தேவையும் அல்ல. எனவே ஊரடங்கு முடியும் வரை பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறக்க வேண்டாம்” என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனாலும் அவர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன
தமிழகம் முழுவதும் சில இடங்களில் முத்திரைத் தாள் விற்பனை நடைபெற்றதாகவும் சில இடங்களில் பத்திரப் பதிவுகளும் நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் திருச்சி ஜி.கே.முரளிதரன், “மக்களைப் பத்திரமாக வீடுகளில் இருக்கச் சொல்லியிருக்கிறார்கள். பலரது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டாலும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம். இந்த நேரத்தில் உணவு, காய்கறி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான பணிகள் மட்டுமே நடைபெற வேண்டும். ஆனால் பத்திரப் பதிவுத் துறை என்பது அத்தியாவசியமான ஒன்றா? இன்றோ இன்னும் சில நாட்களுக்குள்ளே பத்திரம் பதிவு செய்யப்படவில்லை என்றால் ஏதாவது விபரீதம் ஆகிவிடுமா? மக்களுக்கான போராட்ட இயக்கங்கள், தன்னார்வலர்கள் எல்லாம் அரசின் உத்தரவை மதித்து வீட்டுக்குள் இருக்கும் நிலையில், பத்திரப் பதிவு அலுவலகங்களில் என்ன நடக்கும்? மலையளவு மதிப்புள்ள சொத்துகள் மடுவளவு மதிப்புக்குப் பதிவாகப் போகின்றன என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிறது. ஆட்சி முடியும் நேரம் இது. எனவே இந்தச் சூழலை ஆட்சியாளர்கள் வேறு மாதிரி பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. எனவே தன்னார்வலர்கள், அந்தந்த மாவட்டங்களில் பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்களில் யார் சொத்துகளைப் பதிவு செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்” என்கிறார்அதேநேரம் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள் சிலரோ, “எல்லாவற்றையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது இப்போது பழக்கமாகிவிட்டது. தமிழக அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களாக இருப்பவை பத்திரப் பதிவுத்துறையும், டாஸ்மாக்கும்தான். டாஸ்மாக் கடைகள் கடந்த ஒரு மாதமாக மூடிக்கிடக்கின்றன. அதனால், அடுத்த கட்டமான பத்திரப் பதிவு மூலம் கிடைக்கும் வருவாயிலும் இழப்பு ஏற்பட்டால் அது அரசு நிர்வாகத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். 2018-19 ஆம் நிதியாண்டில் பத்திரப் பதிவுத்துறை மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்த வருமானம் 11 ஆயிரத்து 100 கோடி ரூபாய். 2019-20 ஆம் ஆண்டு அதைவிட அதிகமாக வருமானம் ஈட்ட வேண்டும் என்று 13 ஆயிரத்து 122 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்தது அரசு. ஆனால் ஊரடங்கு உத்தரவால் அதை சாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் ஊரடங்கைப் பயன்படுத்தி அமைதியான முறையில் கூட்டம் இல்லாத நேரத்தில் பத்திரப் பதிவு செய்ய மக்கள் வருவார்கள் என்று கணக்கிட்டு பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பத்திரங்கள் எந்த தேதியில் பதிவானாலும், முத்திரைத் தாள்கள் எப்போது விற்பனை செய்யப்பட்டாலும் அவையெல்லாம் இப்போதைய நிர்வாக முறையில் வெளிப்படையாகத்தான் இருக்கும். எனவே அரசின் வருமானமே இதில் பார்க்கப்படுகிறதே தவிர வேறேதும் இல்லை” என்று விளக்கம் அளித்தனர்.
-ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக