வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கொரோனா .. டானிக் வாட்டர் .. இன்றைய பேசுபொருளின் வரலாற்று பின்னணியும் ..உண்மைகளும்


Dr. Mohammed Sayee : இன்றைய கொரொனா கால கட்டத்தில் அதிகம் பேசப்படும் தலைப்பு, வேண்டப்படும் பொருள், உண்ணப்படும் மருந்து, ஆராயப்படும் வேதி பொருள் - ஹைட்ராக்சி க்லோரொக்வின்.
இந்த மருந்தினை உலகமே இந்தியாவிடம் கேட்கும் நிலைமைக்கு காரணம் மன்னர் டிப்பு சுல்தான், காலஞ்சென்ற பிரதமர் இந்திரா காந்தி, காலஞ்சென்ற முன்னாள் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோர்.
தோஹா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு இந்தியாவின் ஏற்றுமதி கொள்கை இந்தியாவிற்கு சாதகமானது. இதற்கு காரணமாக விளங்கியவர் திரு முரசொலி மாறன் அவர்கள். அவரிடம் விவாதிக்க அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் சியாட்டில் நகரத்தில் தயங்கியது வரலாற்று சிறப்பு. இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் தனது இல்லத்தில் அதே முரசொலி மாறன் அவர்களுக்கு விருந்து கொடுத்தவர் விவாதித்து மதித்தவர் என்பதும் ஒரு நாட்டின் பிரதமருக்கு வழங்கப்படும்
மரியாதையினை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் அவர்களுக்கு வழங்கினார் என்பதும் வரலாறு. காட் ஒப்பந்தம், டன்கல் வரையொப்பம், தோஹா ஒப்பந்தம் ஆகியவற்றை படித்துப் பார்த்தால் உலக வல்லரசுகள் இந்தியா மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் வியாபாரம் உற்பத்தி மற்றும் மானிய கொள்கைகளை கட்டுப்படுத்திய விதத்தையும் அவற்றை முறியடிக்க முரசொலி மாறன் அவர்களும் அவருக்கு முன் இந்திரா காந்தி அம்மையார் உருவாக்கி வைத்த தன்னிறைவு நோக்கிய நகர்வுகளையும் நன்கறியலாம்.

இவர்களின் சிந்தனை காரணமாகவும் இந்திய தொழில் முனைவர்களின் தொடர் உழைப்பினாலும் இந்திய மருத்துவ துறை உலகம் வியக்கும் தூய்மை யுடன் உலகத் தர மருந்து பொருட்களை உற்பத்தி செய்கிறது.
இப்போது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஆங்கிலோ மைசூர் போர் களுக்கு செல்வோம்.
1799 ஆம் ஆண்டில் நடைபெற்ற நான்காவது ஆங்கிலோ மைசூர் போரில் மாவீரர் டிப்பு சுல்தான் மூன்று மாத முற்றுகை போருக்கு பின் சீரங்கபட்டின கோட்டைக்குள் கொல்லப்பட்டார். அதற்கு பின் அங்கு தங்கியிருந்த ஆங்கில படையினர் மர்மமான காய்ச்சல் தாக்கி இறக்க ஆரம்பித்தனர். எஞ்சிய படையினர் சதுப்பு நிலப் பகுதிகள் நிறைந்த சீரங்கபட்டினத்திலிருந்து பெங்களூர் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்காக உருவாக்கப் பட்ட பகுதி தான் இன்றைய பெங்களூர் கண்டோன்மெண்ட் பகுதி, பென்சன் டவுன், ஃப்ரேசர் டவுன் ஆகியவை. அந்த நகரத்தின் குளிர்ச்சி ஆங்கில படையினருக்கு வசதியாக இருந்தது.
ஆனாலும் மரணங்கள் தொடர்ந்தன. இவர்கள் மலேரியா காரணமாக இறக்க நேர்ந்ததை கண்டறிந்த ஆங்கில ஆட்சியாளர்கள் அப்போதைய அதிசய மருந்து பொருளாகிய க்வினீன் எனும் மருந்தினை தென் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தனர். அந்த க்வினீன் மருந்து மலேரியா வினால் பாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கும் நல்ல உடல்நலம் கொண்ட மற்ற வீரர்களுக்கும் கட்டாயமாக கொடுக்கப்பட்டது. அதிக கசப்பு கொண்ட க்வினீன் பல படை வீரர்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. இதே காலகட்டத்தில் ஜூனிபர் எனும் பழத்திலிருந்து வடிக்கப் பட்ட 'ஜின்' எனும் சாராயம் இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியா வந்தது. இந்த 'ஜின்' உடன் 'க்வினீன்' சாறு சேர்ந்தால் கசப்பு நீங்கி இனிப்பு-துவர்ப்பு கலந்த சுவை உருவானது. இந்த க்வினீன் சாற்றினை ஆங்கிலேயர்கள் 'டானிக்' என அழைத்தனர். பின்னர் தெம்பளிக்கும் எல்லா திரவ மருந்துகளும் 'டானிக்' என்று நம் மக்களால் அழைக்கப்படுவதை நாமனைவரும் நன்கறிவோம். இப்போது இந்த 'மருந்து ' அனைவராலும் விரும்பப்பட்டது. இந்த 'ஜின்' மற்றும் 'டானிக்' ஒரு வெற்றிக் கூட்டணியாக மாறி இன்றளவிலும் பருகப்படுகின்றது. மலேரியாவிலிருந்து ஆங்கிலேயர்களை காப்பாற்றிய 'மருந்து' இப்படித்தான் பிறந்தது.
இந்த மருந்து 'மருந்தாக' மாறிய பின்னர் பயன்பாடு அதிகரித்தது. ஆங்கிலப் படைவீரர்களின் தாகம் தீர்க்க பெங்களூரின் பல பகுதிகளில் கிழக்கிந்தியக் கம்பெனி சாராய ஆலைகளை திறந்தது. பெங்களூரு தயாரிப்புகள் இந்தியா முழுவதும் விரும்பப்பட்டது. வட இந்தியாவின் ஆங்கில படைவீரர்கள் தன்னிறைவு விரும்பிய காரணமாக சிம்லா மற்றொரு சாராய ஆலை மையமாக கட்டமைக்கப் பட்டது. ஜாலியன் வாலா பாஃக் படுகொலை செய்த ஜெனரல் டயர் அவர்களின் தந்தை தான் சிம்லாவின் 'டயர் மீகின்' சாராய ஆலை அதிபர் ஆவார்.
இந்திய விடுதலைக்கு பின்னர் பெங்களூரில் இருந்த சில சாராய ஆலைகளை விட்டல் மல்லையா என்பவர் ஆங்கிலேயர்களிடமிருந்து வாங்கினார். இவர் திரு சுப்பிரமணிய சாமி நடத்திக்கொண்டிருந்த ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த விஜய் மல்லையாவின் தந்தை ஆவார். இன்றைக்கு ஸ்காட்லாந்து நாட்டில் ஜூனிபர் பழங்களுடன் ஒன்பது மூலிகைகளைக் கலந்து ஒரு புதிய ஜின் உருவாக்கப் பட்டுள்ளது. இதனை -33 எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்த க்வினீன் மருந்து பின்னாளில் டானிக் ஆகி பல காய்ச்சல்களுக்கு நல்ல மருந்தானது. சாறு, பொடி, மாத்திரை என பரிணமித்த க்வினீன் மலேரியாவை பெருமளவில் கட்டுப்படுத்தியது. பின்னர் ஹைட்ராக்சி க்லோரொக்வின் எனும் மருந்தாக தூய்மை பெற்றது. இன்றைக்கு மலேரியாவை மட்டுமல்லாமல் எலும்பு முடக்கு வாதத்திற்கும் ஒரு சிறந்த மருந்தாக திகழும் ஹைட்ராக்சி க்லோரொக்வின் கொரொனா வினையும் கட்டுப்படுத்த உதவும் என மருத்துவ உலகம் கருதுகிறது. டிப்பு சுல்தான் உடன் நடைபெற்ற போர் முதல் கொரொனா விற்க் கெதிரான போர் வரை ஹைட்ராக்சி க்லோரொக்வின் ஒரு மருந்தாக மட்டுமின்றி வரலாறாகவும் வாழ்கின்றது.
க்லோரொக்வின் வாழ்க!
கொரொனா ஒழிக!
Dr T S Mohammed Sayee,
நன்றி: டாக்டர் தி ச முகமது சயி,
கலைஞர் மருத்துவ ஆராய்ச்சி மையம்,
வேலூர் கண் மருத்துவமனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக