வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அதிமுகவினரால் கைப்பற்றப்பட்ட அம்மா உணவகங்கள்!


மின்னம்பலம : அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நலன் கருதி அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது. அதிமுக தலைமை உத்தரவின்படி, தமிழகம் முழுவதுமுள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளை இலவச உணவு வழங்குவதற்கான செலவுகளை அந்தந்த பகுதியிலுள்ள அதிமுகவினரே ஏற்றுக்கொண்டனர். அதன்படி, பல இடங்களில் இலவச உணவுகளும் வழங்கப்பட்டு வந்தது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், அம்மா உணவகங்களை ஆளுங்கட்சியினருக்கு குத்தகைவிட்டது போல தாரைவார்ப்பது மோசமான அரசியல் எனவும், அரசே இலவச உணவு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார். இதன் பின்னணியோடு, இன்று இலவச உணவு: அம்மா உணவக அரசியல்! என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதுபற்றி தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஏப்ரல் 24) கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “அம்மா உணவகங்கள் மூலம் வழங்கப்படும் இலவச உணவுக்கு அதிமுக நிதியளிக்கும் என முதல்வர், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அம்மா உணவகங்களில் இலவசமாக உணவளிக்க திமுக எம்.எல்.ஏ.க்கள் வழங்கும் நிதி நிராகரிக்கப்படுகிறது. கொளத்தூர் அம்மா உணவகத்துக்கு ஆகும் செலவை ஏற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ சேகர்பாபு மூலமாக அளித்த கடிதம் ஏற்கப்படவில்லை.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்மா உணவகங்கள் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பயன்பாட்டுக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய ஆர்.எஸ்.பாரதி, “இதனால் அதிமுகவினர் மட்டுமே பயனடைந்துள்ளனர். அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அம்மா உணவகத்தை அதிமுக என்னும் அரசியல் கட்சியின் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது முறையல்ல. ஆகவே, திமுக உள்ளிட்ட கட்சிகள் உண்மையான பயனாளிகளுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோலவே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கூடுதல் அம்மா உணவகங்களை திறக்க வேண்டும்” என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அதன்பின்னர் வீடியோ வாயிலான செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “லயன்ஸ், ரோட்டரி கிளப் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பைப் பெற்று இலவச உணவு வழங்குவதற்கு திட்டம் ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.” என்று கோரிக்கை வைத்தார்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக