வெள்ளி, 3 ஏப்ரல், 2020

BBC: நாய், பூனை கறிக்கு தடை விதித்த சீன நகரம் துணி முகக்கவசங்களை பரிந்துரைக்கும் அமெரிக்கா

. நாய், பூனை கறிக்கு தடை விதித்த சீன நகரம் ஷென்ஸென் சீனாவில் பூனை மற்றும் நாய் இறைச்சி வாங்கவும் விற்கவும் தடை செய்த முதல் நகரமாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை வன விலங்குகளின் இறைச்சியை உண்பதுடன் தொடர்புபடுத்தபட்ட பிறகு சீன அதிகாரிகள் வன விலங்குகளின் இறைச்சியை விற்பதற்கு தடை விதித்தனர். ஷென்ஸென் நகரம், வன விலங்குகளோடு நாய் மற்றும் பூனை இறைச்சியையும் விற்கக் கூடாது என தடை விதித்துள்ளது. இந்த தடை மே 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
1 ..அமெரிக்காவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை. மக்கள் அணிய வேண்டும் என்றால் அணியலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தில் இதுவரை 1,562 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வாழ்பவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 75 சதவீதத்திற்கும் மேலான அமெரிக்கர்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிகம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காவாக உள்ளது. அங்கு 2,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6000த்தை கடந்துள்ளது.


2 .. அரபு நாடுகளில் ஆபத்தில் சிக்கியுள்ள பல கோடி உயிர்கள் யுத்தம் மற்றும் தொற்றுநோயால் எவ்வாறு பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. இப்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளதால், ஏற்கனவே பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் இந்த பகுதியில் இனி மனிதாபிமான மற்றும் அரசியல் விளைவுகள் மிகவும் தீவிரமாக ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

 3 .. கொரோனா நோய் தொடர்பாக தமிழ்நாட்டில் 90,412 பேர் வீட்டிலேயே வைத்து கண்காணிக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலர், இன்று கொரோனா நோய் இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றுவரை 309ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 102 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, மொத்த எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது.

4 ... நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரிட்டன் ராணி எலிசபெத் பிரிட்டன் ராணி எலிசபெத் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. தனது அரச பொறுப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ராணி, தற்போது வின்ஸ்டோரில் உள்ள அரண்மனையில் தனது கணவருடன் வசித்து வருகிறார். 68 ஆண்டுகால ஆட்சிக் பொறுப்பில், நான்காவது முறையாக நாட்டு மக்களிடம் அவர் உரையாற்ற உள்ளார். 2002ஆம் ஆண்டு அவரது தாயின் மரணம், 1997ல் வேல்ஸ் இளவரசி டயானா மற்றும் 1991ல் முதல் வளைகுடா போர் ஆகிய மூன்று நிகழ்வுகளின் போது மட்டுமே இரண்டாம் எலிசபெத் ராணி இதுவரை உரையாற்றி உள்ளார்

5 ... பிரிட்டனில் 9 நாட்களில் கட்டப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை பிரிட்டனில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மிகப் பெரிய புதிய மருத்துவமனையை அந்நாடு கட்டியுள்ளது. கிழக்கு லண்டனில் இருக்கும் எக்செல் எனப்படும் கண்காட்சி அரங்கம்தான், தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 4000 படுக்கை வசதிகள் கொண்ட அந்த நைட்டிங்கேள் மருத்துவமனை ஒன்பதே நாட்களில் கட்டப்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று திறக்கப்பட்ட மருத்துவமனை, அந்நாட்டின் அரச படைகள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோரின் உதவியோடு கட்டப்பட்டது.

6 .. பிரிட்டன் பிரதமருக்கு தொடர்ந்து இருக்கும் கொரோனா அறிகுறிகள் தனக்கு இன்னும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில், “நான் நன்றாக உணர்கிறேன். ஏழு நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் எனக்கு வைரஸ் தொற்றுக்கான சில அறிகுறிகள் இருக்கின்றன. இன்னும் காய்ச்சல் இருக்கிறது. அதனால் அரசாங்கத்தின் அறிவுரைப்படி நான் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

7 .. தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் அங்கிருந்த செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக அம்மாநில அரசு அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் சிலர், பாதுகாவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடமும் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. டெல்லி மத நிகழ்வில் கலந்து கொண்ட 156 தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் காசியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. “அவர்கள் சட்டங்களை பின்பற்றவும் மாட்டார்கள், அதனை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். மனிதத்தின் எதிரி அவர்கள். பெண் செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டது மிகப்பெரிய குற்றம். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் கூறினார்.

 8 ... சரிவை சந்திக்க உள்ள ஆசிய பொருளாதாரம் ஆசியாவின் வளரும் நாடுகளில் 2020ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி இரண்டு சதவீதமாக குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது. 2019ஆம் ஆண்டின் இறுதியில் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 5.5 சதவீதம் இருக்கும் என கணக்கிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழக ஜிஎஸ்டி வருவாய் பாதிப்பு கொரோனா தடுப்பு ஊரடங்கின் காரணமாக தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இயங்காததால் மாநிலத்தின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்யும் திட்டம் ஏதும் இல்லையென்றும் அவர் கூறியிருக்கிறார்.

9 .. கொரோனா வைரஸ்: வாசனைகளை முகர முடியாததும், சுவை இழப்பதும் கோவிட்-19 அறிகுறியா? வாசனைகளை முகர முடியாமல் போவதும், உணவுப் பொருட்களின் சுவைகளை அறிய முடியாமல் போவதும்கூட கொரோனா தொற்றின் (கோவிட்-19) அறிகுறிகள் என்பது பிரிட்டன் ஆய்வாளர்களின் கூற்று. தங்களுக்கு கோவிட் -19இன் அறிகுறிகள் இருக்கலாம் என்று நினைத்து, அறிகுறிகளை ஒரு செயலியில் பதிவிட்ட நான்கு இலட்சம் மக்களின் தகவல்களை லண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரி குழு ஒன்று ஆய்வு செய்தது. ஆனால், இவ்வாறு வாசங்களை முகர முடியாமல் போவதும், சுவை உணர்வை இழப்பதும், சாதாரண சளி போன்ற ஏனைய சுவாசப் பிரச்சனைகளின் அறிகுறிகளாக இருப்பவையே.

10 ... கொரோனா வைரஸ்: அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமா? கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் நிறைய பேர் முகக்கவசம் அணிய வேண்டுமா? உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள சிறப்பு குழு ஒன்று இந்த கேள்விக்கான பதிலை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவின்படி, கொரோனா பாதித்த ஒருவர் இருமினால் அது ஆறு மீட்டர் வரையும், தும்மினால் எட்டு மீட்டர் வரையும் இருப்பவர்களை பாதிக்கக் கூடும். இது தற்சமயத்தில் உலக சுகாதார நிறுவனத்தால் நம்பப்பட்டு வரும் தூரத்தை விட அதிகம். எனவே, இந்த சிறப்பு குழுவானது வைரஸின் பரவல் தூரம் குறித்து ஆய்வு நடத்த உள்ளது ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக