செவ்வாய், 14 ஏப்ரல், 2020

Anand Teltumbde Arrested தேசம்.. தேசியம்.. என்பதெல்லாம் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க ஒரு கருவியாக


Shalin Maria Lawrence - மு. நியாஸ் அகமது : எனக்கு நன்றாக தெரியும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கூட்டு மற்றும் அவர்களது கோரிக்கைகளை எந்த கேள்வியும் எழுப்பாமல் ஏற்கும் ஊடகங்கள் - இவர்கள் எழுப்பப் போகும் திட்டமிட்ட அருவருப்பான ஒலியில் எனது குரல் கேட்காமல் போகும். இருந்தபோதிலும் இப்போது பேசுவது தேவையான ஒன்று என்றே கருதுகிறேன். ஏனெனில் எனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா என தெரியாது.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவா மேலாண்மை கல்வி நிலைய வளாகத்தில் உள்ள என் வீட்டில் போலீஸ் சோதனை நடத்தியதிலிருந்தே எனது உலகம் தலைகீழாக மாறிவிட்டது.
எனது மோசமான கனவுகளில் கூட, எனக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்துப் பார்த்தது இல்லை.
பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் நான் ஆற்றிய உரைக்கு ஏற்பாடு செய்த அமைப்பாளர்களிடம் என்னைப் பற்றி விசாரித்து போலீஸ் அச்சமூட்டிய போது, நான் கூட போலீஸார் பல காலத்திற்கு முன்பு எங்கள் வீட்டை விட்டு வெளியேறிய என் சகோதரர் குறித்து விசாரிக்கிறார்கள். நான்தான் அவர் என் தவறுதலாக நினைத்து விசாரிப்பதாகவே நினைத்தேன்.
நான் ஐஐடி கரக்பூரில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, ஒரு பி.எஸ்.என்.எல் ஊழியர் என்னை தொலைப்பேசியில் அழைத்தார். எனது நலம் விரும்பி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், எனது ஃபோன் உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாகக் கூறினார்.
நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். ஆனால், அதன் பின்பும் கூட என் சிம்கார்டை நான் மாற்றவில்லை.

இது போன்ற கண்காணிப்புகளால் நான் தொந்தரவுக்கு உள்ளாகி இருந்தாலும், என்னைக் கண்காணிப்பதன் மூலம் போலீஸுக்கு உண்மை புரியும்… நான் சட்டத்துக்கு புறம்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என அவர்கள் புரிந்து கொள்வார்கள் என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.
போலீஸை கேள்வி கேட்பதால் அவர்கள் பெரும்பாலும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை வெறுப்பார்கள். நானும் அத்தகைய ஒருவன் என்பதால் போலீஸ் என்னை கண்காணிப்பதாக நினைத்தேன். ஆனால், என் பணி நிமித்தம் காரணமாக அவ்வாறான செயல்பாடுகளிலும் நான் ஈடுபடுவதில்லை என்பதை என்னைக் கண்காணிப்பதன் மூலம் போலீஸ் உணர்வார்கள் என நினைத்தேன்.
ஆனால், ஒரு நாள் அதிகாலை என்னை அழைத்த எனது கல்வி நிலையத்தின் இயக்குநர் போலீஸ் எங்கள் கல்வி நிலையத்தைச் சோதனை இடுவதாகவும்… நான் எங்கே என தேடுவதாகவும் கூறிய போது.. ஒரு சில விநாடிகள் வார்த்தையற்று போனேன்.
ஒரு அலுவலக வேலை காரணமாக சில மணி நேரங்களுக்கு முன்புதான் நான் மும்பை வந்திருந்தேன். என் மனைவி எனக்கு முன்பே வந்திருந்தார்.
மேலும் சில இடங்களில் சோதனை நடந்தது என்றும், அப்படி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்றும் நான் அறிந்த போது, சில மணி நேரங்களுக்கு முன்பு அங்கிருந்து மும்பை பயணித்ததால் தப்பித்தேன் என்ற நினைப்பே என்னை உலுக்கியது.
ஆனால், போலீஸூக்கு நான் எங்கு இருக்கிறேன் என தெரியும். என்னைக் கைது செய்திருக்கலாம். ஆனால், ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
போலீஸார் காவலரிடமிருந்து பெற்ற டூப்ளிகேட் சாவிக் கொண்டு வலுக்கட்டாயமாக என் வீட்டை திறந்தார்கள். வீட்டை வீடியோ பதிவு செய்தபின் மூடிவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால் எங்களது இன்னல்கள் அங்கிருந்துதான் தொடங்கியது.
எங்களது வழக்குரைஞர்களுடன் ஆலோசித்தப்பின் என் மனைவி அடுத்த விமானம் பிடித்து கோவா சென்றார். பிகோலிம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.
அதாவது நாங்கள் இல்லாத போது எங்கள் வீடு சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. வீட்டில் ஏதாவது பொருள் வைக்கப்பட்டிருந்தால் நாங்கள் பொறுப்பில்லை என்பதுதான் அந்த புகார்.
இதுதொடர்பாக எங்களை விசாரிப்பதற்காக எங்கள் தொலைபேசி எண்ணையும் காவல் நிலையத்தில் கொடுத்துவிட்டே வந்தார்.
ஆனால், அதன் பின் போலீஸ் பத்திரிகையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்து மாவோயிஸ்ட் கதைகள் சொல்லும் காரியத்தில் இறங்கியது.
எனக்கு எதிரான ஒரு முன்முடிவை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். ஊடகத்தின் மூலம் அந்த சித்திரத்தை ஏற்படுத்தி என்னை கைது செய்ய திட்டமிட்டார்கள்
2018 ஆக்ஸ்ட் மாதம் 31ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், சோதனை செய்யப்பட்ட வீடுகளில் உள்ள கணிணியிலிருந்து எடுக்கப்பட்ட கடிதம்தான் எனக்கு எதிரான ஆதாரம் எனக் கூறி அந்த கடிதத்தை வாசித்தார்கள்.
ஆனால், அந்த கடிதத்தில் எதுவுமே இல்லை. நான் கல்வி தொடர்பாகக் கலந்து கொண்ட மாநாடுகள் தொடர்பான தகவல்கள் அது. அந்த தகவல்கள் அமெரிக்கன் யுனிவர்சிட்டி ஆஃப் பாரிஸ் இணையதளத்தில் இருக்கிறது.
முதலில் நான் சிரித்துக் கொண்டேன் ஆனால் அதன் பின் அந்த அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு வழக்குப் போட தீர்மானித்தேன். அனைத்தும் நடைமுறைகள்படி நடக்க வேண்டும் என்பதற்காக இதுதொடர்பாக ஒரு கடிதத்தை மகாராஷ்டிரா அரசுக்கு அனுப்பினேன்.
ஆனால், இன்று வரை அவர்களிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. உயர்நீதிமன்றம் கண்டித்தபின் இப்படியான பத்திரிகையாளர் சந்திப்புகள் ஒரு கட்டத்தில் நின்றது.
இந்த வழக்கின் மொத்த பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கை வெளிப்படையாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயற்பாட்டாளர் ரமேஷ் படாங்கே என்னை குறித்து ஒரு கட்டுரை அவர்களது பிரசார இதழான பஞ்சன்யாவில் எழுதி இருப்பதாக எனது மராத்தி நண்பர் கூறினார்.
அந்தக் கட்டுரையில் நான் 'மாயாவி அம்பேத்கர்வாதி' என குறிப்பிடப்பட்டு இருந்தேன். அருந்ததி ராய் மற்றும் கையில் ஓம்வெட் ஆகியோருடன் என்னை இணைத்து அந்தக் கட்டுரை புனையப்பட்டு இருந்தது. மாயாவி என்பது இந்து புராணங்களில் அழிவை உண்டாக்கும் துர்சக்தியை குறிக்கும் வார்த்தை.
எனது புனே இல்லத்தில் நான் சட்டப்படி கைது செய்யப்பட்டபோது, இந்துத்துவவாதிகளின் இணைய கும்பல் என்னை குறித்து இணையத்தில் தாக்குதல் நடத்தியது.
எனது விக்கிமீடியே பக்கம் அழிக்கப்பட்டு… அதில் பொய் தகவல்கள் சேர்க்கப்பட்டன. பல ஆண்டுக்காலமாக அந்த விக்கிமீடியா பக்கம் பப்ளிக் பேஜ் (Public Page) ஆகத்தான் இருந்திருக்கிறது. இது குறித்து எனக்கே தெரியாது.
அந்த பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் அழித்து, “எனக்கு மாவோயிஸ்ட் சகோதரர் இருக்கிறார்… அவர் வீடு போலீஸால் சோதனை செய்யப்பட்டது… மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்துள்ளதால் கைது செய்யப்பட்டுள்ளார்…” ஆகிய தகவகளை அதில் சேர்த்தனர்.
அதனை திருத்த எனது மாணவர்கள் ஒவ்வொரு முறை முயற்சி செய்த போதும் அந்த கும்பலால் மீண்டும் மீண்டும் இதே தகவல் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனை என் மாணவர்கள் என்னிடம் கூறினர்.
இறுதியாக விக்கிமீடியா தலையிட்டு என் பக்கத்தை மீட்டது. அந்த இந்துத்துவ கும்பலின் கருத்தும் அதில் சேர்க்கப்பட்டது.
நக்சல் நிபுணர்களைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, ஊடகங்களில் பொய்யையும், புரட்டையும் கட்டவிழித்துவிட்டது.
இது தொடர்பாக நான் ஊடக அமைப்புகளுக்கு, குறிப்பாக இந்தியா ப்ராட்காஸ்டிங் ஃபவுண்டேசனுக்கும் புகார் அளித்தேன். ஆனால் எந்த பலனும் இல்லை.
என் கைபேசியில் இஸ்ரேலி ஸ்பைவேர் பொருத்தப்பட்டு தகவல்கள் எடுக்கப்பட்டதாகவும் இதிகாச கதைகள் அதன் பின்ன வெளிவந்தன. ஆனால், இதனை வைத்து ஊடக சலசலப்புகள் உடனே எழுந்தன. ஆனால், அந்த கதைகளும் பின் மரணித்தது.
நான் ஒரு எளிய மனிதன். நியாயமாக உழைத்து உண்கிறேன். எனது எழுத்தின் மூலமாக எனது அறிவை பகிர்ந்து கொண்டு பிறருக்கு உதவுகிறேன்.
ஆசிரியனாக, சிவில் சமூக செயற்பாட்டாளனாக, சமூக அறிவுஜீவியாக கடந்த ஐம்பதாண்டுகாலமாக இந்த கார்ப்பரேட் உலகத்தில் எந்த களங்கமும் இல்லாமல் சேவையாற்றி இருக்கிறேன்.
எனது எழுத்துகள் 30 புத்தகங்களாக, பல ஆராய்ச்சி கட்டுரைகளாக வெளிவந்திருக்கிறது. சர்வதேச அளவில் என் கட்டுரைகள், எனது நேர்காணல்கள் பிரசுரமாகி இருக்கின்றன. ஆனால் என் வாழ்வின் இறுதி காலகட்டத்தில், கொடூரமான குற்றம் புரிந்ததாக சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களை தடுக்கும் கொடுமையான சட்டமான UAPA சட்டத்தில் கைது செய்யப்படுகிறேன்.
என்னை போன்ற தனிமனிதர்கள் அரசால் ஊக்கமூட்டப்பட்ட பிரசாரத்தை, அவர்களுக்கு கீழ்படியும் ஊடகங்களை எதிர் கொள்ள முடியாது. இணையத்தில் இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. அதை படிக்கும் அனைவருக்கும் இது ஜோடிக்கப்பட்ட வழக்கு எனப் புரிந்து கொள்ள முடியும்.
AIFRTE இணையத்தில் இது தொடர்பாகச் சுருக்கமான தகவல்கள் கிடைக்கின்றன. அதனைச் சுலபமாகப் படிக்க முடியும்.
இருந்த போதிலும் உங்களுக்காக இந்த வழக்கின் சுருக்கத்தை தருகிறேன்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் கணிப்பொறியில் கிடைத்த 13 கடிதங்களில் ஐந்து கடிதங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் நான் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறேன். என்னிடமிருந்து நேரடியாக எதுவும் மீட்கப்படவில்லை.
ஆனந்த என சில கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பலருக்கு இருக்கும் பொதுவான பெயர் அது. ஆனால்,போலீஸார் எந்த கேள்வியும் இல்லாமல் என்னை அதனுடன் சம்பந்தப்படுத்துகிறார்கள். அந்த கடிதத்திலும் பெரிதாக எதுவும் இல்லை. பல வல்லுநர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி உட்பட இந்த சாட்சியை புறந்தள்ளி இருக்கிறார்கள். சாதாரண வழக்காகக் கூட பதியப்பட முடியாத கடிதத்தை சாட்சியாக கொண்டு கொடூரமான UAPA சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
நீங்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள இந்த வழக்கை பின்வருமாறு விவரிக்கிறேன்:
திடீரென ஒருநாள் காவல்துறை எந்த வாரண்டையும் காட்டாமல் உங்கள் வீட்டுக்குள் நுழைகிறது. உங்கள் வீட்டை சேதப்படுத்துகிறது. இறுதியில் உங்களை கைது செய்து சிறையில் தள்ளுகிறது.
நீதிமன்றத்தில் ஏதேதோ சொல்கிறது. அதாவது ஒரு திருட்டு குற்றச்சாட்டை இந்தியாவில் ஏதோவொரு இடத்தில் விசாரிக்கும் போது, போலீஸுக்கு ஒரு பென் டிரைவ் கிடைத்ததாகவும், அதில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் கடிதம் எழுதியதாகவும், அதில் ஏதோவொரு பெயர் குறிப்பிடப்பட்டதாகவும், ஆனால் போலீஸை பொறுத்தவரை அது நீங்கள்தான் என்றும் கூறுகிறது.
ஆழமான சதித்திட்டத்தில் உங்களை சிக்க வைக்கிறார்கள். உங்களது வாழ்க்கை திடீரென தலைகீழாக மாறுகிறது. உங்கள் வேலை பறிபோகிறது. உங்கள் குடும்பம் அனைத்தையும் இழக்கிறது. உங்களால் எதிர்கொள்ளவே முடியாத அளவுக்கு ஊடகங்கள் உங்களுக்கு எதிரான பரப்புரையில் இறங்குகின்றன.
போலீஸார் சீல் இடப்பட்ட கவரை நீதிபதிகளிடம் தருகிறார்கள். உங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முகாந்திரம் இருப்பதாகவும், உங்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென்றும் கூறுகிறார்கள்.
நீதிமன்ற விசாரணை முடிந்தபின் உங்களைச் சிறைக்கு அனுப்புகிறார்கள். நீங்கள் பிணை கோருகிறீர்கள். ஆனால் நீதிமன்றம் மறுக்கிறது .
கற்பனை செய்து பாருங்கள்… நீங்கள் என்ன செய்வீர்கள்?
இந்தியாவில் ஒருவர் குற்றமே செய்யவில்லை என இறுதியில் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டாலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் விசாரணை கைதியாகச் சராசரியாக நான்கிலிருந்து பத்து ஆண்டுகள் வரை சிறையில் இருக்கிறார்.
தேசத்தின் பெயரால் கொடூரமான சட்டத்தைக் கொண்டு தனி நபர்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
தேசம்.. தேசியம்.. என்பதெல்லாம் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மக்களுக்கு தன்னலமற்று சேவை செய்பவர்கள் தேசத் துரோகிகளாகவும், தேசத்தை அழிப்பவர்கள் தேசபக்தர்களாகவும் பொருட்பட தொடங்கிவிட்டனர்.
எனது இந்தியா சிதைக்கப்படுவதை நான்பார்க்கும் இந்த நேரத்தில், பலவீனமான நம்பிக்கையுடன் இந்த கடிதத்தைக் கடுமையான தருணத்தில் எழுதுகிறேன்.
சரி… என்.ஐ.ஏ கட்டுப்பாட்டிற்குள் செகிறேன். உங்களுடன் மீண்டும் எப்போது பேச முடியும் என எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுவீர்கள் என நம்புகிறேன்.
- ஆனந்த் டெல்டும்டே
தமிழாக்கம் : மு. நியாஸ் அகமது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக