புதன், 1 ஏப்ரல், 2020

சென்னையின் அசோக் லேலண்ட்! 90% விற்பனை சரிவு


tamil.goodreturns.in : இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே, பல்வேறு காரணங்களால், ஆட்டோமொபைல் கம்பெனிகள் பெரிய சரிவைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது பற்றாக் குறைக்கு கொரோனா வைரஸ் வேறு ஒட்டு மொத்த உலகத்தையும் பிரட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது. உலகில் சுமார் 8.80 லட்சம் பேர் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 40,000 பேர் மரணித்து இருக்கிறார்கள்.
 இந்த எல்லா காரணிகளும் ஒன்று சேர்ந்து, தற்போது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனையை படு பாதாளத்துக்கு தள்ளி இருக்கிறது
இந்தியாவின் முன்னணி கண ரக மற்றும் வணிக ரக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் அசோக் லேலண்டும் ஒன்று. இந்த நிறுவனம் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் என்பதும் இங்கு தனியாக குறிப்பிட வேண்டிய ஒன்று.
சரி விற்பனை விவரங்களுக்கு வருவோம். அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த மார்ச் 2019-ல் 21,535 வாகனங்களை விற்றது. ஆனால் இந்த மார்ச் 2020-ல் வெறும் 2,179 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, மார்ச் 2019-ல் 20,521 ஆக இருந்தது. இந்த மார்ச் 2020-ல் 1,787 ஆக சரிந்து இருக்கிறது. ஆக உள்நாட்டு விற்பனை 91% சரிந்து இருக்கிறது. மீடியம் & ஹெவி வணிக வாகனங்களின் (Medium and Heavy Commercial Vehicles - M&HCV) உள்நாட்டு விற்பனை மார்ச் 2019-ல் 15,235 ஆக இருந்தது, இந்த மார்ச் 2020-ல் 1,498 ஆக சரிந்து இருக்கிறது.
ஆக மீடியம் & ஹெவி வாகன விற்பனை 90% சரிந்து இருக்கிறது அதே போல லைட் வணிக வாகனங்களை (Light Commercial Vehicle - LCV) எடுத்துக் கொண்டால் மார்ச் 2019-ல் 5,286 வாகனங்கள் விற்பனை ஆகி இருந்ததாம். ஆனால் இந்த மார்ச் 2020-ம் வெறும் 289 வாகனங்கள் தான் விற்று இருக்கிறார்களாம். ஆக லைட் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் அசோக் லேலண்ட் 95 % சரிந்து இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக