வியாழன், 2 ஏப்ரல், 2020

கனிமொழி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ... 610 கி.மீ. தூரம்..

one.india.com : சென்னை டூ தூத்துக்குடி... 610 கி.மீ. தூரம்.. சீறிப்பாய்ந்த கனிமொழியின் கார்...
திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, தனி ஒரு ஆளாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டு சென்று அங்கு கொரோனா நோய் தடுப்பு பணிகள் பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டறிந்துள்ளார்.
இக்கட்டான இந்த பேரிடர் காலத்தில் தனது தொகுதி மக்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக கனிமொழி சென்னையில் இருந்து சாலை வழியாக காரில் பயணித்துள்ளார்.
மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படுள்ள நிலையில், தனது தொகுதிக்கு செல்வதாக கனிமொழி கூறியதால் அவருக்கு காவல்துறையினர் வழி ஏற்படுத்திக் கொடுத்து அனுமதி அளித்தனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் இருந்த கனிமொழி தனது தொகுதியான தூத்துக்குடிக்கு செல்ல நேற்று (செவ்வாய்கிழமை) திடீரென திட்டமிட்டார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அவர் தகவல் கூற, அவரும் கவனமாக பார்த்து செல்லுமாறு அண்ணனுக்கே உரிய அக்கறையில் கூறினார். விமான சேவை, ரயில் சேவை என எதுவும் இல்லாததால் தனது காரிலேயே தூத்துக்குடிக்கு புறப்பட்டார் கனிமொழி.
சென்னை சிஐடி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து என்.95 முககவசம் அணிந்தவாறு உதவியாளரை கூட உடன் அழைக்காமல் நேற்றிரவு (செவ்வாய்கிழமை) 11 மணிக்கு காரில் புறப்பட்டார் கனிமொழி. செல்லும் வழிகள் அனைத்தும் நிசப்தம் நிறைந்த சாலையாகவே இருந்துள்ளன. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மயான அமைதியில் சாலைகள் காணப்பட்டன. இதனிடையே சென்னையில் இரவு 11 மணிக்கு சீறத்தொடங்கிய கனிமொழியின் கார் சுமார் 9 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தூத்துக்குடி நகருக்குள் நுழைந்தது.
சென்னையில் தொடங்கி அவர் தூத்துக்குடி சென்று சேரும் வரை செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, விராலிமலை, துவரங்ககுறிச்சி, மதுரை ரிங் ரோடு, கோவில்பட்டி, என பல இடங்களிலும் கனிமொழியின் கார் நிறுத்தப்பட்டுள்ளது. பிறகு தனது தொகுதியான தூத்துக்குடிக்கு செல்வதாக கனிமொழி கூறியதை தொடர்ந்து அனைத்து மாவட்ட எல்லைகளிலும் அவருக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு அனுமதி தரப்பட்டுள்ளது.
ஒரு பெண்மணியாக இருந்து இப்படி அசாதாரண சூழலில் வரலாமா என உரிமையுடன் கேட்டு கண் கலங்கியிருக்கிறார் தூத்துக்குடியில் உள்ள கனிமொழி இல்ல பணிப்பெண் ஒருவர். அவரை சமாதானப்படுத்திய கையோடு, அடுத்த சில மணி நேரங்களில் ரூ.1 கோடிக்கான காசோலையை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதி அளித்துள்ளார். மேலும், அரசு மருத்துவமனையில் லிப்ட் அமைப்பதற்காக கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியையும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக