திங்கள், 20 ஏப்ரல், 2020

கொரோனா அமெரிக்காவில் 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு – மிரண்டு போன அமெரிக்கா

    மாலைமலர் : அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா கொரோனாவின் கோரப்படியில் சிக்கியுள்ளது. உலக அளவில் வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 636 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 6 லட்சத்து 48 ஆயிரத்து 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 13 ஆயிரத்து 556 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், தற்போதைய நிலவரப்படி, வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் 40 ஆயிரத்து 223 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளதால் அமெரிக்க மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக