செவ்வாய், 21 ஏப்ரல், 2020

ரேபிட் கிட் பரிசோதனைகளை 2 நாட்கள் நிறுத்த அறிவுரை .. தவறான முடிவுகளை காட்டுகிறது ?


தினமலர் : ஜெய்பூர்: ராஜஸ்தானில் ரேபி கிட் மூலம் செய்யப்பட்ட பரிசோதனைகளின், 95 சதவீத முடிவுகள் தவறாக காணப்படுவதால், அப்பரிசோதனைகளை நிறுத்திவிட்டு, புதிய திட்டத்தை வகுக்க இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. அங்கு இதுவரை 1,600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 25 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதில் 13 பேர் சுற்றுலா நகரமான ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள்.
பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரேபிட் கிட் பரிசோதனைகளை ராஜஸ்தான் தொடங்கியது. இதற்காக மாநிலத்திற்கு 10 ஆயிரம் ரேபிட் கிட்டுகள் வரவழைக்கப்பட்டன. அவற்றின் மூலம் பெறப்பட்ட 95 சதவீத முடிவுகளில் முரண்பாடுகள் உள்ளதாகவும், ஆன்டிபாடி பரிசோதனைகளை நிறுத்திவிட்டு, ஆர்டி - பிசிஆர் பரிசோதனைகளை தொடர உள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ரகு ஷர்மா கூறியுள்ளார்.

மேலும் ஆன்டிபாடி பரிசோதனைகளை தொடருவது சம்பந்தமாக மருத்துவ ஆராய்சி கவுன்சிலிடம் வழிமுறைகளை கேட்டுள்ளதாக தெரிவித்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உயரதிகாரி ஒருவர் கடந்த வாரம் அளித்த பேட்டியில், ரேபிட் கிட் மூலம் செய்யப்படும் ஆன்டிபாடி பரிசோதனைகள் கொரோனா பரவலை கண்காணிப்பதற்காக மட்டுமே, கொரோனாவை கண்டறிய ஆர்டி - பிசிஆர் பரிசோதனையே இறுதியானது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக