புதன், 29 ஏப்ரல், 2020

தமிழகத்தில் 121 பேருக்கு கரோனா; சென்னையில் 103 பேருக்கு பாதிப்பு எண்ணிக்கை 2,058 ஆக அதிகரிப்பு

2-058-persons-affected-by-corona-virus-in-tamilnadu
பிரதிநிதித்துவப் படம்

hindutamil.in : தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அல்லது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து அன்றைய நாளில் தமிழகத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது போன்ற விவரங்களை அளித்து வந்தனர் இந்நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக வழக்கமாக நடைபெறும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுவதில்லை. மாறாக, தினந்தோறும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்படும் அறிக்கை மட்டும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று (ஏப்.27) தமிழகத்தில் 1,937 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று (ஏப்.28) தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன்படி, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, கரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மொத்தமாக 5 மாவட்டங்களில் மட்டுமே புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் 103 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேருக்கும், காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே தொற்று எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கும் சென்னையில் மொத்தமாக 673 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, இன்று மட்டும் 27 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 1,128 பேர் வீடு திரும்பியுள்ளனர். 902 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 1,874 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 93 ஆயிரத்து 189 தனிப்பட்ட நபர்கள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
30 ஆயிரத்து 692 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 47 பேர் அரசு தனிமை முகாம்களில் கண்காணிக்கப்படுகின்றனர். கரோனா தொற்று சந்தேகத்தின் பேரில், 1,856 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக