வெள்ளி, 6 மார்ச், 2020

சென்னை பல்கலை கழக துணை வேந்தராக ஜெகதீஷ் (telugu).. தமிழகத்தில் யாருக்கும் தகுதியில்லையா?

சென்னை பல்கலை: தமிழகத்தில் யாருக்கும் தகுதியில்லையா?மின்னம்பலம் : சென்னை பல்கலை துணை வேந்தர் தேடுதல் குழு தலைவர் நியமனத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதில் இருந்து பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களாக வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரியையும். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கர்நாடகாவைச் சேர்ந்த எம்.கே. சூரப்பாவும் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு எதிராக, தமிழகத்தில் ஒருவர் கூடவா துணை வேந்தர் பதவிக்கு தகுதியானவர் இல்லை என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின.
தற்போது சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேர்வுக்குழுவின் தலைவராக புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார்.இதற்கும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டு, பா.ஜ.க.வின் காவிமயக் கல்விக் கொள்கையை தமிழக உயர்கல்வியிலும் புகுத்துவதற்கு, ஒரு ஆளுநரே அரசியல் சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற செயலை ஆளுநர் உடனே கைவிட்டு, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவிற்கு, தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த கல்வியாளர் ஒருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அமைப்புகளின் நேசத்திற்குரிய ஜெகதீஷ் குமார் ஜே.என்.யு. பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பிறகுதான் அப்பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தாக்குதல் நடத்தியது. இவை அனைத்திற்கும் பின்னணியில் இருந்தவர் ஜெ.என்.யு. பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார்தான்.
ஜே.என்.யு. ஜெகதீஷ் குமாரை நீக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 747 பேர் ஒன்றிணைந்து அறிக்கை வெளியிட்டனர்.அத்தகைய நபரை சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தேர்வுக்குழுத் தலைவராக தமிழக ஆளுநர் நியமித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், "இதற்கு உடந்தையாக இருப்பது தமிழக முதலமைச்சரும், உயர்கல்வித் துறை அமைச்சரும்தான். சென்னை பல்கலைக் கழகம் தொடர்பான ஆளுநர் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை பல்கலைக்கழகத் துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவின் தலைவராக தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமாரை ஆளுநர் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எழில் >

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக