செவ்வாய், 31 மார்ச், 2020

திமுக உயர் பொறுப்புக்களுக்கு துரைமுருகன் டி ஆர் பாலு கே என் நேரு.. ஊரடங்கு நேரத்தில் உலவும் சில குரல்கள்!

திமுக பொருளாளர் நேரு? ஊரடங்கு நேரத்தில் உலவும் சில குரல்கள்!மின்னம்பலம் :
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பண்ணை வீட்டில் தனித்திருந்து சமூக விலகல் கொள்கையை கடைபிடித்து வரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட செயலாளரிடமும் கொரோனா தொற்று பற்றிய நிலவரத்தை வீடியோ கால் மூலம் கேட்டு தெரிந்து கொண்டு வருகிறார்.இது மட்டுமன்றி தினந்தோறும் பல்வேறு மாவட்ட செயலாளரிடமும் மாநில நிர்வாகிகளிடமும் வாட்ஸ்அப் காலில் பேசி வரும் ஸ்டாலின்... தமிழக அரசு இந்த அசாதாரண நிலையை எவ்வாறு கையாண்டு வருகிறது என்றும் அதன் அரசியல் லாப நஷ்டங்கள் என்ன என்றும் விரிவாக விவாதிக்கிறார்.
இது ஒரு பக்கம் நடக்க இன்னொரு பக்கம் திமுக மாவட்ட செயலாளர்கள் தங்களுக்குள் வாட்ஸ்அப் கால்களில் பேசி கட்சியின் போக்கு பற்றியும் விவாதித்து வருகிறார்கள்.கடந்த மார்ச் 29ஆம் தேதி கூடியிருக்க வேண்டிய திமுக பொதுக்குழு பொதுச் செயலாளராக துரை முருகனையும் பொருளாளராக டிஆர் பாலுவையும் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.ஆனால் கொரோனா  பீதி காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் முடக்கப்பட்டதால்  திமுக பொதுக்குழுவும் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் திமுக பொதுச் செயலாளர் , பொருளாளர்  பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக ஊகிக்கப்படும்  துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் குறித்து   மாவட்ட செயலாளர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை ஸ்டாலினுக்கும் தெரியப் படுத்தி உள்ளார்கள்.
இதுபற்றி மாசெக்கள்  சிலரிடம் பேசினோம்.
 “கொரோனா தொற்று அதன் பிறகான ஊரடங்கு இல்லையென்றால் இந்நேரம் திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும்  தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். பொதுக்குழு தள்ளிப் போனதால் இந்த இடைவெளியைப் பயன்படுத்தி மேலும் சில முயற்சிகளும் நடந்து வருகின்றன. பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனை விட்டால்  வேறு யாரும் பொருத்தமானவர் இல்லை என்றபோதும்... அவர் சமீப  நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு காட்டி வரும் நெருக்கங்கள் வேறு மாதிரி சிந்திக்க வைக்கிறது. இதுபற்றி சில மாசெக்களே ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார்கள்.
அடுத்து பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயர் பேசப்பட்டு வரும் நிலையில் சமீபமாக சில மாசெக்கள் தற்போதைய தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் நேருவை பொருளாளர் ஆக்கினால் என்ன என்று  பேசி வருகிறார்கள்.  நேரு ஜனவரி மாதம்தான் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்குள் அவருக்கு அடுத்த ப்ரமோஷனா என்று யோசிக்காமல் கட்சி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில் நேருவை பொருளாளர் ஆக்கலாம். ஒருவேளை துரைமுருகன் பொதுச் செயலாளர்,  டி,.ஆர்,பாலு பொருளாளர் என்றால்  வன்னியர், முக்குலத்தோர் போன்ற பெரிய சமுதாயங்கள் திமுகவின் தலைமைக் கழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற தோற்றம் உருவாகக் கூடும். தலைமைக் கழகத்தில் மைனாரிட்டி சமூகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அது நன்றாக இருக்கும். அதனால் நேருவுக்கு பொருளாளர் பதவியைக் கொடுக்கலாம் என்று சிலர் ஊரடங்கு நேரத்தில் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார்கள்” என்கிறார்கள்.
இப்படி பல ஆலோசனைகள் தனக்கு வந்துகொண்டிருந்தாலும் ஸ்டாலின் நிலைப்பாடு என்ன?
” சீனியாரிட்டிக்கு முக்கியத்துவம் தருவதைத் தவிர வேறு எந்த சிந்தனையும்  ஸ்டாலினிடம் இல்லை. துரைமுருகனும், டி.ஆர்,.பாலுவும் திமுகவுக்காக நீண்ட காலம் உழைத்தவர்கள், உழைத்துக் கொண்டிருப்பவர்கள். இத்தனை ஆண்டுகளில் கட்சிக்குள் அவர்கள் மீது சிற்சில சலசலப்புகள் சர்ச்சைகள் வந்திருந்தாலும் அவர்கள் ஒரு போதும் கட்சிக்கு எதிரான  நிலை எடுத்ததில்லை. கட்சிக்குள்  சிலருக்கு எதிர்ப்பு, சிலருக்கு ஆதரவு என்ற நிலைப்பாடுகளில் அவர்கள் இருந்தாலும் திமுகவை ஒரு போதும் அவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை. எனவே இதுபோன்ற வாதப் பிரதிவாதங்கள் இப்போது தேவையில்லை என்று கருதுகிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அதற்கு முன் கட்சியில் தலைமை கழக நிர்வாகிகள் முதல் கீழ் நிலை நிர்வாகிகள் வரை எந்த நிலையிலும் சலசலப்புக்கோ சர்ச்சைக்கோ உள்ளாகி, அது கட்சிக்கு எதிராக மீடியாக்களில் பெரிதாகக் கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். எனவே சீனியாரிட்டி மட்டுமே இப்போது அவருடைய ஸ்கேலாக இருக்கிறது” என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமான சில மாசெக்கள்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக