புதன், 4 மார்ச், 2020

உரிமைகளை மீட்க அமித்ஷாவை சந்தித்தோம்: ஜெயக்குமார்

உரிமைகளை மீட்க அமித்ஷாவை சந்தித்தோம்: ஜெயக்குமார்மின்னம்பலம் : உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சிஏஏ போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் அவசர பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றனர். உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சிஏஏ விவகாரங்கள் குறித்தும், தமிழகத்தில் போராட்டங்களின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்களில் தகவல் வெளியானது. ஆனால் சந்திப்பு தொடர்பாக டெல்லியில் அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

இந்த நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 3) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமித்ஷாவுடனான சந்திப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்தவர், “அரசு முறை பயணமாக செல்லும்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்போம். மாநிலத்தின் நிதி மற்றும் உரிமைகள் தொடர்பாக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து வருகிறோம். மாநிலத்தின் நலன் சார்ந்த விஷயங்களுக்காக அவ்வப்போது டெல்லி செல்வதுண்டு. அந்த வகையில்தான் முதல்வரின் உத்தரவின் பேரில் நானும், அமைச்சர் தங்கமணியும் சென்று அமித் ஷாவை சந்தித்தோம். இதில் வேறு விஷயங்கள் எதுவுமில்லை. ஊடகங்கள்தான் இதனை பெரிதுபடுத்துகின்றன” என்று தெரிவித்தார்.
என்.பி.ஆர் தொடர்பாக தீர்மானம் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, “மாநிலத்தின் நலன், உரிமைகள் குறித்த பல விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளோம். திமுக ஆட்சியில்தான் உரிமைகள் தாரைவார்த்துக்கொடுத்துவிட்டனர். மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் வகையிலான சந்திப்புதான் நடந்தது. என்.பி.ஆருக்காகவெல்லாம் நாங்கள் சந்திக்கவில்லை” என்று கூறினார்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக