வியாழன், 26 மார்ச், 2020

டாக்டர்களை உதைப்பவர்கள், லாண்ட் ரோவரில் வலம் வருபவர்கள் மீதெல்லாம் எல்லாம் உங்க லத்தி பாயாது.


Muralidharan Pb : அதில் பாருங்கள்
அயல்நாட்டிலிருந்து வியாதி கொண்டுவந்தவர்கள்,
வியாதி வைத்துக்கொண்டே எம்.பி, எம்.எல் வுக்கு தானம் வழங்கிய கனிக்கா கபூர் எலைட் வகையறாக்கள்,
வெளியே வரவேண்டாம் கூட வேண்டாம் என்று சொல்லியும் தட்டு தட்டு என தட்டை தட்டி கோ கொரோனா கோ என்று கத்தியவர்கள்,
மருத்துவர்களுக்கு வீடு கொடுக்க முடியாது காலி செய்யுங்கள் என்று சொன்னவர்கள்,
டாக்டர்களை உதைப்பவர்கள்,
லாண்ட் ரோவர் காரில் வலம் வருபவர்கள்,
இவர்கள் மேல் மேலே லத்தி பாயாது.
பாயவே பாயாது.
தண்டனை தேவை தான். ஆனால் இங்கே யாவருக்கும் சமமான தண்டனை தான் இருக்கிறதா?யார் வந்தாலும் லத்தி மண்டையப் பிளக்கும் என்றால் வாங்கள் அடிவாங்கி சமத்துவம் காண்போம். அடி என்ன, சட்டத்தை மீறினால் சாவு என்றாலும் சேர்ந்து வாங்குவோம். ஆனால் மேலே சொன்ன privileged , elite அல்லது ஒருவித sophisticated அமைப்புக்குள் போய் அமர்ந்துகொண்டவர்கள் மேல் நம் மேல் பாய்கிற அரச பயங்கரவாதம் பாயாது.
ஆவடி- இந்து காலேஜ் ட்ரெயினில் கத்தி வைத்து ஃபுட் போர்ட் அடிக்கும் மாணவன் மீது அடிவிழும்.

குடிபோதையில் வண்டி ஓட்டி விபத்து ஏற்படுத்திய துருவ் விக்ரம் மீது ஒரு கீறல் விழாது. இருவருக்கும் ஒரே வயது.
துப்புரவு பணியாளர் மீது காட்டு அடி விழும். ஆனால் காயத்திரி ரகுராம் மீது சட்டத்தின் நிழல் கூட விழாது. சேரி மக்களை எப்படி வேண்டுமானாலும் ஏசலாம்.
ஸ்நோலின் வாயில் குண்டு துளைக்கும். ஆனால் ஆண்டாளுக்காக சோடா பாட்டில் வீசுவேன், மண்டை உடைப்பேன் எனக்கும் ரவுடியிசம் வரும் என்று சொல்லும் ஜீயர் மேல் ஒரே ஒரு கேஸ் பதிவாகாது.
ஆசுவாசமாக அலைபவர்களுக்கும்,அவசரத் தேவைக்கு அலைபவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆன்லைன் டெலிவரி க்கு ஆப் தேடி ஓடும் இதே ஊரில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி, டிஜிட்டல் மணி பயன்படுத்த தெரியாத மக்கள் இருக்கிறார்கள். இரண்டு ஹைட்ராக்சி க்ளோரோகுவின் , ஒரு எரித்திரோமைசின் ஒரு ஹாண்ட் சானிட்டைசர், N95 அப்புறம் அப்படியே சில்டெனாஃபில் சிட்ட்ரேட் கொடுங்க என சொல்லும் ஊரில் தான், தம்பி கண் நோவுக்கு ஏதாவது மருந்து குடுப்பா, சளி மாத்திர இருக்கா என்று அப்பாவியாக கேட்கும் மக்களும் இருக்கிறார்கள்.
Social drinking during social distancing என்று சொல்லி குடும்பத்துடன் ரெமி மார்ட்டின், ரெட் லேபிள் அடிக்கும் ஊரில், ஃபுல் பாட்டில் வாங்கி stock செய்ய வழி இல்லாமல் க்வாட்டர், 90 அடிப்பவர்கள் அடுத்த வேளை குடிக்கு கை நடுக்கத்துடன் இருக்கிறார்கள்.
கோடிக் கோடியாய் வரியேய்ப்பு செய்தவர்களுக்கு ராஜ மரியாதை, தண்டல் கட்ட கடன் வாங்க பக்கத்து தெருவுக்கு போனவனுக்கு, பசங்களுக்கு பால் வாங்க போனவனுக்கு அடி உதை.
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் India is a land of Juxtapositions and Inequality. அங்கே எல்லாருக்கும் ஒரே சட்டம் ஒரே ஒழுங்குழ் ஒரே ட்ரீட்மெண்ட் என்று வரும்போது உங்கள் சட்ட ஒழுங்கு, நீதி நேர்மை நியாயத்தை தூக்கிக் கொண்டு வாருங்கள் .ஆற அமர பேசலாம். மத்தப்படி நடக்கும் அநியாயங்கள் உரிமை மீறல்களை எல்லாம் மக்கள் மீது அதுவும் அன்றாடங் காய்ச்சி மக்கள் மீது பழி போட்டுவிட்டு அரசுக்கு ஒத்துழைப்போம் என்று சொல்வது எல்லாம் ஏற்க முடியுமா?
அவ்ளோ யோக்கியர்கள் ஏன் யா இந்த ஊர் உள்ளார ஃப்லைட் பர்மிஷன் கொடுத்து வர விட்டீங்க. நிறுத்தியிருக்க வேண்டிதானே ? உங்க வசதிக்கு விட்டுட்டு சைக்கிள்ல வந்தவன் மேல நாயடி பேயடி அடிப்பிங்கன்னா நீங்க எல்லாம் நல்ல குடிமக்கள்னு சொல்லிக்க வெட்கப் படவேண்டும்.
இல்ல இப்படியே தான் இருக்கும், வல்லான் வகுத்ததே நீதி, தடி எடுத்தவன் தான் தண்டல்காரன் என்றால்...
என்னங்க சார் உங்க சட்டம் ? அது சாக்கட சார்.
தம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக