வெள்ளி, 27 மார்ச், 2020

விவசாயிகள் மீது தடியடி! சந்தையில் இருந்து திரும்பும் போது போலீஸ் அடாவடி! காய்கறிகள் விலை உயரும்


rnakkheeran.in - எஸ்.பி. சேகர் : > விளைந்த காய்கறிகளை சந்தைகளுக்கு சென்று கொடுத்துவிட்டு திரும்பும் விவாயிகள் மீது போலீசார் தடியடி நடத்துவதால் தமிழக விவசாய சங்கங்கள் அதிரடி தீர்மானம் நிறை வேற்றியுள்ளன.  இதனால், காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம்,  தமிழ் விவசாயிகள் சங்கம், அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு கேள்விகள் எழுப்பி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அதில்,  ‘’தமிழக அரசே, காய்கறிகள் அத்தியாவசிய பொருட்களில் உள்ளதா? இல்லையா? நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் இருக்கும் தினசரி காய்கறி சந்தைக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரும் போது மட்டும் உழவர்களை  அனுமதித்துவிட்டு, அவர்கள் திரும்பி செல்லும்போது காவல்துறையினர் தடியடியை பரிசாக கொடுத்து அனுப்பியுள்ளார்கள்.


அதேபோல் தினசரி காய்கறி சந்தைக்கு காய்கறிகளை வாங்க வரும் சிறு,குறு வியாபாரிகளையும், மளிகைகடைக்காரர் களையும் சந்தைக்கு வருவதற்கு தமிழக காவல்துறை அனுமதிக்கவே இல்லை.  தமிழக உழவர்களை பொருத்தவரை கொரோனா(வைரஸ்)ஒழிப்பில் அரசுக்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறோம். மேலும் எங்கள் உயிரோடு சம்பந்தப்பட்டதும் கூட.  

தேவையே இல்லாமல் ஊர் சுற்றுபவர்களை தண்டிக்கும் பாணியில் உழவர்களையும் தண்டிப்பது ஏற்கத்தக்கதா? இந்தப் பிரச்சினை நேரடியாக காய்கறிகள் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். மக்களையும் பாதிக்கும், தினசரி காய்கறி சந்தையால்  கொரோனா பரவும் அபாயம் இருந்தால் மற்ற நிறுவனங்களைப் போலவே தினசரி காய்கறி சந்தையை மூடிவிடுங்கள்.  தமிழக உழவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

காய்கறிகள், கீரைகளை விற்கும் பல்பொருள் விற்பனை நிலையங்கள், மளிகை கடைகளுக்கு அனுமதி, காய்கறிகளை தினசரி சந்தைக்கு விற்பனை செய்ய கொண்டுவரும் உழவர்களுக்கு மட்டும் அடியா? மேற்கண்ட பிரச்சினை குறித்து முடிவு எடுக்கும் பொறுப்பை உழவர்கள் தமிழக அரசிடமே விட்டுவிடுவதாக தீர்மானித்துள்ளோம். 

இந்தக்கோரிக்கை செய்தியை தமிழக அரசுக்குகொண்டு செல்லும் வகையில் அனைத்து குழுக்களிலும், ஊடகங்களிலும் பகிருமாறு விருப்பம் உள்ளவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக