செவ்வாய், 17 மார்ச், 2020

ஸ்டாலின் கோரிக்கை: திமுக எம்.எல்.ஏ மீதான நடவடிக்கை ரத்து!

ஸ்டாலின் கோரிக்கை: திமுக எம்.எல்.ஏ மீதான நடவடிக்கை ரத்து!மின்னம்பலம் : திமுக எம்.எல்.ஏ மீதான நடவடிக்கையை ரத்துசெய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் மார்ச் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இன்றைய விவாதத்தில் முதல்வர் பதிலளித்து பேசிக்கொண்டிருந்தபோது, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் இருக்கையில் அமர்ந்தபடி குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.
இதனால் அதிருப்தியடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர் இவ்வாறு பேசுவது தவறான செயல்” என்று தெரிவித்தார். மேலும், ஆஸ்டினுக்கு முகவரி கொடுத்ததே அதிமுகதான், அது இல்லாவிட்டால் அவர் சட்டமன்ற உறுப்பினராகி இருக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆஸ்டினுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டும் இவ்வாறு நடந்துகொள்வதால் அவர் மீது நடவடிக்கை தேவை என துணை முதல்வரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி இன்று ஒருநாள் மட்டும் ஆஸ்டீனை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
ஆஸ்டின் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். “உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்தபடி பேசுவது தவறான செயல்தான் எனவும், ஆஸ்டின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்து இறுதி எச்சரிக்கையுடன் உத்தரவு இருக்க வேண்டும்” என்று துரைமுருகன் கோரினார்.
இதனை ஏற்று ஆஸ்டின் மீதான அவை வெளியேற்ற நடவடிக்கையை நிறுத்திவைப்பதாக சபாநாயகர் உத்தரவிட்டார்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக