வெள்ளி, 13 மார்ச், 2020

என்பிஆருக்கு ஆவணங்கள் வேண்டாம்: அமித் ஷா

என்பிஆருக்கு ஆவணங்கள் வேண்டாம்: அமித் ஷாமின்னம்பலம் : என்பிஆர் தொடர்பாக எந்த ஆவணங்களையும் காட்டத் தேவையில்லை என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிழக்கு டெல்லியில் பிப்ரவரி 24ஆம் தேதி சிஏஏ போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 52 பேர் வரை உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று (மார்ச் 12) விளக்கம் அளித்த உள் துறை அமைச்சர் அமித்ஷா, “டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்களின் அடையாளங்களைக் கண்டுபிடிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படும். ஆதார் விவரங்கள் பயன்படுத்தப்படும் என்ற தவறான தகவல் ஊடகங்களில் பரப்பப்படுகிறது. குற்றவாளிகள் எந்த மதமாக, சாதியாக, அரசியல் கட்சியாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர்.

சில சமூக ஊடகக் கணக்குகள் வன்முறைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி 25ஆம் தேதி செயலிழக்கச் செய்யப்பட்டன. இந்தக் கணக்குகள் வெறுப்பைப் பரப்ப மட்டுமே செயல்பட்டன. அவற்றின் உரிமையாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்க வேண்டாம். இது டிஜிட்டல் யுகம், நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்” என்று தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகத் தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய அமித் ஷா, “சிஏஏ யாருடைய குடியுரிமையைப் பறிப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டதல்ல. குடியுரிமையை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது. என்பிஆர் கணக்கெடுப்பில் எந்த ஆவணங்களையும் காட்டத் தேவையில்லை என்று நான் மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன். என்பிஆர் கணக்கெடுப்பு தொடர்பாக யாரும் பயப்படத் தேவையில்லை. கேட்கப்படும் அனைத்து தகவல்களும் விருப்பமானது. இது ‘டி-சந்தேகத்திற்குரிய வகை’யாக இருக்காது” என்று கூறினார்.
நீதிபதி முரளிதர் இடமாற்றம் குறித்து பதிலளித்த அமித் ஷா, “நீதிபதிகள் மாற்றத்துக்கான பரிந்துரைகளை கொலிஜியம் மேற்கொள்கிறது. அதற்கான உத்தரவை மட்டுமே அரசு வெளியிடுகிறது. இது வழக்கமான ஓர் இடமாற்றம்தான். இதில் நீதிபதியின் ஒப்புதலும் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார்.
-எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக