சனி, 21 மார்ச், 2020

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

BBC   : மதுரைக்கு அருகில் உள்ள கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளிலும் நடந்துவரும் அகழாய்வில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கொந்தகை கிராமத்தில் இந்த எலும்புக்கூடு கிடைத்திருக்கிறது. கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று துவங்கப்பட்டன. இந்த நிலையில், கொந்தகை பகுதியில்
நடந்துவரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவை கிடைத்து வந்தன.
கொந்தகை பகுதியில் இதுவரை மூன்று குழிகள் தோண்டப்பட்டுள்ளன. முதல் குழியில் 2 முதுமக்கள் தாழிகளும், 2வது குழியில் 8 முதுமக்கள் தாழிகளும், மூன்றாவது குழியில் 2 தாழிகளும் கிடைத்தன.
இந்த நிலையில், கொந்தகையில் இன்று நடத்தப்பட்ட அகழாய்வில் எலும்புக்கூடு ஒன்று கிடைத்திருக்கிறது. அந்தப் பகுதியில் வசித்தவர்கள் இருவிதங்களில் உடல்களைப் புதைத்துள்ளனர். ஒன்று தாழியில் வைத்து புதைத்தல். மற்றொன்று குழியைத் தோண்டி புதைப்பது.

"இப்போது குழியைத் தோண்டி புதைக்கப்பட்ட உடலின் எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கின்றன. தொல்லியல் ஆய்வுகளில் ஒவ்வொரு குழியாகத்தான் ஆய்வு நடக்கும் என்பதால், தற்போது தோண்டப்பட்டுள்ள குழியில் இடுப்பு வரையிலான பகுதிகளே வெளிப்பட்டிருக்கின்றன. அருகில் உள்ள பகுதியையும் தோண்டும்போது முழு எலும்புக்கூடும் கிடைக்கக்கூடும்" என பிபிசியிடம் தெரிவித்தார் மாநில தொல்லியல் துறையின் இயக்குனர் சிவானந்தம்.
இந்த எலும்புக்கூட்டின் வயது, கீழடியில் கிடைத்த பொருட்களின் வயதை ஒத்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால், அவை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே இதன் வயது துல்லியமாகத் தெரியவரும்.

மேலும், இரண்டு முதுமக்கள் தாழிகளில் உள்ள பொருட்களும் கவனத்துடன் வெளியே எடுக்கப்பட்டு வருகின்றன.
கீழடி கிராமத்தில் ஏற்கனவே நடந்த அகழாய்வுகளில் பழங்கால கட்டடத் தொகுதிகளும் தொல்பொருட்களும் கிடைத்திருக்கும் நிலையில், ஆறாவது கட்ட அகழாய்வை மாநில தொல்லியல் துறை தற்போது நடத்திவருகிறது.
இந்த நிலையில் ஆறாம் கட்ட அகழாய்வை கீழடியிலும் அதற்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் நடத்துவதற்கு மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது. இந்த இடங்களில் தரையை ஊடுருவிப் பார்க்கும் ரேடார், ஆளில்லா விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சரியான இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
இவற்றில் கொந்தகை ஒரு புதைமேடு என கருதப்படுகிறது. கீழடி பகுதியில் வாழ்ந்தவர்கள் இங்குதான் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மணலூர், அகரம் ஆகியவை மக்கள் வாழ்ந்த இடங்களாகக் கருதப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 120 ஏக்கர் பரப்பளவில் 50 லட்ச ரூபாய் செலவில் இந்த அகழாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2014ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டுவரை முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை மத்திய தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 7818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதற்குப் பிறகு இங்கு ஆய்வு நடத்த மத்திய அரசு முன்வரவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட அகழாய்வுகளை தமிழக அரசின் தொல்லியல் துறையே நடத்திவருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக