திங்கள், 23 மார்ச், 2020

ஒரு கவிஞரின் சலூன் நூலகம் ... கணேசன் எம்.ஏ.,பி.லிட் யோகா பேராசிரியராகவும்....

Muralidharan Pb : புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடியில், 'இந்தியன்' என்ற பெயரில், சலுான் வைத்துள்ளவர், கணேசன், 50.
பொதுவாக, சலுான்களில், வண்ண காலண்டர்கள், சினிமா போஸ்டர்கள், படங்கள் இருக்கும்.
கணேசனின் சலுான், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நுாலகமாக செயல்படுகிறது. இங்கு, திருக்குறள், திருவாசகம், மு.மேத்தா, வைரமுத்து கவிதைகள், அப்துல் கலாம், கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன் உட்பட, பலர் எழுதிய ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த புத்தகங்களை வைக்க இடமின்றி, அட்டை பெட்டிகளிலும், கணேசன் அடுக்கி வைத்துள்ளார். மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குபடிக்கும் மாணவர்கள், தங்களுக்கு தேவையான புத்தகங்களை, இலவசமாக எடுத்து சென்று படிக்கின்றனர். 
அப்பகுதியில், கணேசனை, அனைவரும் கவிஞர் எனவும், இவரது கடையை, சலுான் லைப்ரரி எனவும் கூறுகின்றனர்.
கணேசன் கூறியதாவது: இளம் வயதில், தமிழாசிரியராக வேண்டும் என்பது, என் ஆசை. எட்டாவது படிக்கும் போது, என் தந்தை இறந்து விட்டதால், அவர் நடத்தி வந்த சலுான் கடையை, நான் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், பள்ளி படிப்பு பாதியிலேயே நின்று விட்டது.

படிக்கிற ஆசையில், அனைத்து விதமான புத்தகங்களை, அன்று முதல், இன்று வரை படித்து வருகிறேன். திறந்தவெளி பல்கலையில், எம்.ஏ., வரலாறு, அண்ணாமலை பல்கலையில், பி.லிட்., அஞ்சல் வழி கல்வியில், அடிப்படை இந்தி படித்துள்ளேன்.
தற்போது, திறந்தவெளி பல்கலை மாணவர்களுக்கு, யோகா பேராசிரியராகவும் உள்ளேன். பள்ளி குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு ஆர்வத்தை துாண்ட வேண்டும் என்பதே, என் நோக்கம். அதனால், திருக்குறள், நாலடியார், அவ்வையார் பாடல் தெளிவுரைகளை வாங்கி, அரசு பள்ளி மாணவர்களிடம் கொடுத்து வருகிறேன்.`
நாமும் பாராட்டலாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக