புதன், 18 மார்ச், 2020

வெறிச்சோடிய தேசங்கள் .. ஜெர்மனியில் இருந்து ... வீடியோ


Subashini Thf : ஜெர்மனியில் CoV-19 வைரஸ் பாதிப்பின் காரணமாக அரசு வெளியிட்டு இருக்கின்ற கட்டுப்பாடுகள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான கடைகள் காலையில் சில மணி நேரங்கள் மட்டுமே திறக்கும் வகையில் செயல்படுகின்றன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் என்பது வெளியில் மிகக்குறைவாக தென்படுகிறது.
தொலைக்காட்சியில் பெரிய நகரங்களின் மையப் பகுதிகள் எப்படி காட்சி அளிக்கின்றன என்பது பற்றிய படக்காட்சிகளை செய்தியின் போது காட்டினார்கள். காவல்துறையினர் ஒவ்வொரு கடைகளாக சென்று மாலை ஆறு மணிக்கு மேல் திறந்திருக்கும் உணவகங்களை சட்டத்திற்கு மீறியதாக குறிப்பிட்டு மூடச் சொல்கின்றார்கள். ஒரு சில பொதுமக்கள் ஆங்காங்கே சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். தெருக்களில் பாடல் பாடியோ அல்லது வித்தை காண்பித்தோ பணம் சம்பாதிக்கும் ஒரு சிலர் ஏன் மக்கள் வரவில்லை என்பது புரியாமல் இருக்கின்றார்கள். அவர்களிடம் அரசாங்க ஊழியர்கள் நேரில் சென்று நிலைமையை விளக்கி பேசி அவர்களையும் திரும்பிப் போகச் சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.

இது விடுமுறை காலம் ஆதலால் விடுமுறைக்காக வெளியூர் சென்றவர்களின் நிலைதான் பரிதாபம். நேற்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகம் ஜெர்மனிக்கு வெளியே உல்லாச பயணத்திற்காக சென்றவர்களின் எண்ணிக்கை 100 ஆயிரத்தை நெருங்கும் என்று குறிப்பிட்டு அதிலும் குறிப்பாக எகிப்து கனேரிய தீவுகளில் குவிந்திருக்கும் ஜெர்மானிய சுற்றுப் பயணிகளைத் திரும்பி அழைத்து வரும் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதைப் பற்றி விவரித்தனர்.
துனிசியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் மாட்டிக்கொண்ட ஜெர்மானிய பயணிகள் இன்டர்நெட் வழியாக தங்கள் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதைத் தெரிவித்து உதவி கோரிக் கொண்டிருந்தனர்.
ஜெர்மனியின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களான Daimler மற்றும் Volkswagen இரண்டும் அடுத்த இரு வாரங்களுக்கு production பணிகளை நிறுத்தி இருக்கின்றன.
இப்படி பல்வேறு முயற்சிகளை ஜெர்மனிக்குள் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் இந்தச் சூழலில் வெளியே சந்திப்புகள் ஏதுமின்றி வீடுகளில் இருப்பதே சாலச் சிறந்தது. தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம் என்று கவலைப்படாமல் இந்த நேரத்தை நமக்கு பிடித்த பல்வேறு வகையில் பயன்படுத்தி மன மகிழ்ச்சியோடு வாழ்வதும் முக்கியம்.
இன்டர்நெட் நமக்கு கொடுத்திருக்கும் சாத்தியம் இருப்பதால் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தொலைபேசி வாட்ஸ்அப் ஃபேஸ்புக் என நாம் தொடர்ந்து மக்களுடன் தொடர்பில் தான் இருக்கின்றோம். உடல் ஆரோக்கியத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் இருப்போம்.
-சுபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக