செவ்வாய், 3 மார்ச், 2020

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே பலத்த சத்தத்துடன் வெடித்த நாட்டுவெடிகுண்டு


  தினகரன் : சென்னை: சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே வெடிகுண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த வெடிச்சத்தத்தின் காரணமாக அருகில் உள்ள கார் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு 10 அடி தொலைவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை நடத்தியதில் அது நாட்டு வெடிகுண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது ஜெமினி மேம்பாலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் எதிர்புறம் இருக்கும் நபர் மீது இந்த நாட்டு வெடிகுண்டை வீசிய காட்சி பதிவாகியுள்ளது. எதிரே உள்ள நபர்கள் மீது வீசிய அந்த வெடிகுண்டு அவர்கள் மீது படாமல் சாலையில் விழுந்து வெடித்தது தெரிய வந்தது. அந்த மர்ம நபர்கள் யார் மீது இந்த நாட்டு வெடிகுண்டை வீசினார்கள்? என்பது குறித்து தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசிட நபர்களை கைது செய்ய போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் வெடிகுண்டு வெடித்த இடத்தில் தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்து வருகிறார். போக்குவரத்து அதிகமாக உள்ள அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வெடித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அமெரிக்க தூதரகம் உள்ள அண்ணா மேம்பாலம் அருகே குண்டு வெடித்ததால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது
நக்கீரன் :சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே பெட்ரோல் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரு நபர்கள் திடீரென அருகிலிருந்த கார் ஷோரூமின் மீது வீசிய பெட்ரோல் குண்டு வெடித்து ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார், எதற்காக பெட்ரோல் குண்டு போடப்பட்டது என்ற கோணத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்ராஜ் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அங்கு உடனடியாக வந்த தடயவியல் நிபுணர் ஷோபா ஜோசப் ஆய்வு செய்துவருகிறார். ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் தேனாம்பேட்டையில் வெங்கடேசன் என்பவர் காதல் தோலிவியால் காதலி மீது விசிய பெட்ரோல் குண்டு தவறி போலீஸ்டேசன் பூத் மீது விழுந்து சேதம் அடைந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று நடந்த இந்த சம்பவம் மீண்டும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக