வியாழன், 26 மார்ச், 2020

மோடியின் இந்தி பேச்சு ... ஏழைகளை கைகழுவிய டெல்லி அரசு

Annamalai Arulmozhi : உங்களில் நிறைய பேர் நேற்று ‘நமது பிரதமர்’ ‘நாட்டு மக்களுக்கு ‘ தொலைக்காட்சியில் ஆற்றிய உரையை பார்க்கவில்லை
அல்லது கேட்கவில்லை , கேட்டாலும் புரியவில்லை , புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை ( நமக்குப் புரியவேண்டும் என்ற கவலை பிரதமருக்கும் இல்லை .. அதனால்தான் ஒரு அரைமணிநேர உரையை அவர் இந்தியில் மட்டுமே ஆற்றினார் )என்பதை நான் எப்படித்தெரிந்து கொண்டேன் தெரியுமா ?
‘லஷ்மன் ரேக்கா ‘ அதாவது ‘இலட்சுமணன் கோடு ‘ என்ற சொல்லை எனது நேற்றைய பதிவில் பயன்படுத்தியிருந்தேன். அதைப்பற்றிய பலவித கருத்துக்களை பின்னூட்டத்தில் பார்த்தேன்.
இலட்சுமணக் கோடு என்பது இராமாயணக் கதையில் மாயமானைப் பிடிப்பதற்காகப் போன இராமன் ஆபத்தில் சிக்கியது போல இலட்சுமனா காப்பாற்று என்ற குரல் கேட்க (அதுவும் மாயமானாக வந்த மாரீசனின் வேலைதான்) அய்யோ இலட்சுமனா அவருக்கு ஆபத்து .. ஓடிப்போய் காப்பாற்று என்று சீதை பதற, இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்றுணர்ந்த இலட்சுமணன் சற்று தயங்க அவரை சீதை சந்தேகப்பட்டுத் தவறாகப்பேச, வருத்தப்பட்ட இலட்சுமணன் சீதை இருந்த குடிலை சுற்றி தன் அம்பால் தரையில் கீறி ஒரு கோடு போட்டார். என்ன நடந்தாலும் இந்த கோட்டைத்தாண்டி வெளியே வராதீர்கள் என்று கண்டிப்பாக அறிவுறுத்துகிறார் . “ நான் போகிறேன் , கோட்டைத் தாண்டி விடாதீர்கள் “ என்று எச்சரித்து விட்டுப் போகிறார். அதன்பிறகுதான் இராவணன் சந்நியாசி வேடத்தில் வந்து பிச்சை கேட்க வீட்டுக்கு உள்ளிருந்து பிச்சை போடக்கூடாது என்ற சாஸ்திரத்தின் படி வெளியே போய் சாப்பாடு போடுகிறார்.
இலட்சுமணன் சொன்னது நினைவுக்குவந்து தடுமாறிய போதும் “ என்ன நடந்துவிடும் , சந்தியாசிக்கு பிச்சையிடத்தானே போகிறேன் ..” என்று நினைத்து .. இலட்சுமணன் போட்ட கோட்டைத் தாண்டினார் சீதை. அதன்பிறகுதான் இராவணன் சீதையை தூக்கிக் கொண்டு இலங்கைக்குப் போய்விட்டார்.
இலட்சுமணன் போட்ட கோட்டை சீதை தாண்டியதால் ஏற்பட்ட விளைவுகளே இராமாயணக் கதையாம். ரேக்கா என்றால் ரேகை அதாவது கோடு.அப்படி “இலஷ்மன் ரேக்கா” என்று பெயர் வைத்த சாக்பீசால் கோடுபோட்டால் கரப்பான்பூச்சி கூட அதைத்தாண்டி வராதாம்.
அது சரி பிரதமர் மோடி ஏன் லஷ்மன் ரேகாவைப் பற்றி இரண்டு அல்லது மூன்று முறை பேசினார். வீட்டுக்குள் இருங்கள் என்பதைத்தான் நமது மருத்துவர்களும் தலைவர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே!
அன்றாடங் காய்ச்சிகள் என்று சொல்லப்படும் தினக்கூலிப் பணியாளர்கள் , சிறு வியாபாரிகள், சுய வேலைக்காரர்கள் , ஆதரவற்ற முதியவர்கள், உணவுக்கு என்ன செய்வார்கள்?
பிரதமரின் அறிவுறுத்தலால் கருப்புப்பணத்தை ஒழிக்கவும் அரசாங்கம் கொடுக்கும் உதவித்தொகைகளை நேரடியாகப் பெறுவதற்காகவும் கோடிக்கணக்கான ஏழைமக்களால் தொடங்கப்பட்ட “ஜன்தன் “ வங்கிக்கணக்குகளில் சில ஆயிரங்களேனும் பணம் செலுத்தி அவர்களது உயிரைக் காக்கலாமே !
அது பற்றித்தானே ஒரு பிரதமர் பேசவேண்டும். அவர்மட்டும்தானே அதைப்பற்றிப் பேச முடியும் !
“கையெடுத்து கும்பிட்டுக் கேட்கிறேன் “ “இதை இலட்சுமணக் கோடாகக் கருதுங்கள். வீட்டுக்குள் இருங்கள் “ என்று கேட்பதற்குத்தான்
ஒரு ஆட்சியா ? என்று கேட்டால் நீங்களும் எம் தோழரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக