வியாழன், 5 மார்ச், 2020

கொரோனாவும், இந்தியாவும்... தமிழ் நாட்டை "தனிமைப்படுத்துவோம்". மக்களை பாதுகாப்போம்

சிவசங்கர் எஸ்எஸ் : கொரோனாவும், இந்தியாவும்...
கொரோனா குறித்த அலறல், இன்று தான் இந்தியாவில் வெளியில் கேட்கிறது. நேற்று வரை மூன்று பேர் தான் பாதித்திருக்கிறார்கள் என்று சொல்லி, இந்தியாவிற்கு பிரச்சினை இல்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நிதானமாக பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் இன்று நிலைமை வேறாகி விட்டது. ராஜஸ்தானுக்கு வந்த இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் 'படார்' என கணக்கை உயர்த்தி விட்டார்கள். கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 28 ஆனது. இப்போது 29 ஆம். இந்த எண்ணிக்கைக்கு ஏன் அலறனும்னு கேள்வி வரும்.
இந்தியாவின் முதல் குடிமகன் தான் சிக்னல் கொடுத்திருக்கிறார். ஆமாம், குடியரசு தலைவர், இன்று மாலை ஓர் அறிவிப்பைக் கொடுத்தார். இந்த ஆண்டு, 'குடியரசுத் தலைவர் மாளிகையில் ஹோலி கொண்டாட்டங்கள் ரத்து' என்பது தான் அது. அடுத்து பிரதமர் மோடி இந்த ஆண்டு எந்த ஹோலி கொண்டாட்டங்களிலும் பங்கேற்கப் போவதில்லை என சொல்லி விட்டார். இந்த இரண்டு அறிவிப்புகளுக்கான காரணம் ஒன்று தான். கொரோனா. அவர்களே வாய் திறந்த பிறகு தான் ஊடகங்கள் பேச ஆரம்பித்திருக்கின்றன.
சீனாவில் ஆயிரக்கணக்கில் கொரோனா பலி விழுந்த போதே தயாராகி இருக்க வேண்டும். இப்போது உலக அளவில் இறப்பு மூவாயிரத்தை தாண்டி விட்டது. ஆறு கண்டத்திற்கும் பரவி விட்டது கொரோனா. அங்கே வராது, இங்கே வராது என்று சொல்லியதை எல்லாம் பொய்யாக்கி விட்டது. 65 நாடுகளில் நுழைந்திருக்கிறது.
மோடியின் அண்ணன் டிரம்ப் கொரோனாவை பார்த்து கர்ஜித்தார். அமெரிக்காவில் அதற்கு வேலை இல்லை என்றார். எதிர்கட்சிகள் தேர்தலுக்காக கிளப்பிய புரளி என்றார். அங்கு சாவு 9 ஆகி விட்டது. இப்போது துணை அதிபர் தான் பேட்டி கொடுக்கிறார்.

இங்கே மோடி வகையறாவும் அப்படி தான் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருப்பது போல் அவர்களது பதற்றமே காட்டுகிறது. எப்படியோ பாதுகாப்பை உறுதி செய்தால் சரி.
கொரோனாவை விட ஒரு கொடூரம் நம் முதுகில் தொங்கிக் கொண்டிருப்பதை உணர வேண்டும். ஆமாம், பா.ஜ.கவினர் கொரோனாவிற்கு வைத்தியம் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
அசாம் மாநில பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சுமன் ஹரிப்பிரியா. மாட்டுசாணியில் கொரோனாவிற்கு தீர்வு இருப்பதை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார், மாட்டு கோமியத்தில் கேன்சர் எதிர்ப்பு சக்தி இருப்பது போல.
உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் எளிதான தீர்வை சொல்லியுள்ளார். யோகா ஒழுங்காக செய்தால், கொரோனாவை தடுக்கலாம் என்கிறார். இவர் போதி தர்மர் போல் சீனா சென்றிருந்தால் கொரோனாவை விரட்டி இருப்பார், நாட்டுக்கும் நல்லது நடந்திருக்கும். அட, அயோத்தி ராமா என்று தான் சொல்லிக் கொள்ள வேண்டும்.
சீனாவை போல் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி தான் முக்கியம்.
ஒரு கோடி பேருக்கு மேலான மக்கள் தொகை கொண்டது சீனாவில் இருக்கும் வூகான் நகரம். அங்கு தான் இந்த நோய் முதலில் தாக்கியது. 94,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 3,000 பேர் இறந்துள்ளனர். இது மேலும் பரவிடாமல் தடுத்திட, அந்த நகரையே "தனிமைப்படுத்தினர்". அதாவது அந்த நகரை விட்டு யாரும் வெளியே செல்லவும் முடியாது, யாரும் உள்ளே வரவும் முடியாது. சீனா, ஒரு சர்வாதிகார அரசை கொண்ட நாடு. அங்கேயே இந்தக் கட்டுப்பாட்டை கொண்டு வர சிரமப்பட்டனர்.
நம் ஜனநாயக நாட்டில் இது சாத்தியமா என்பது ஒரு புறம். சட்டத்தின் ஆட்சி என்பது இல்லாமல், அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு பா.ஜ.கவினர் செயல்படும் உத்தரப்பிரதேசத்தில் வாரணவாசியில் இந்த கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா. வாய்ப்பே இல்லை.
இன்னொரு பக்கம் வட இந்திய மாநிலங்களில் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் குறைவு, மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறைவு. அங்கு கரோனா பரவினால், சிகிச்சை அளிப்பதே பெரும் பாடாகி விடும்.
சீனாவில் ஒரே வாரத்தில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டதை கண்டோம். இந்தியாவில் இது சாத்தியமே இல்லை.
இருக்கிற மருத்துவ கட்டமைப்பை கொண்டு தமிழ்நாடும், கேரளாவும் மட்டுமே குறைந்தபட்சம் கொரோனாவை எதிர் கொள்ள முடியும் என்று மூத்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இன்னொரு பக்கம் கொரோனாவையும் தமிழக சுகாதார அமைச்சர் விசயபாஸ்கர் தனது வழக்கப்படி " மர்மக்காய்ச்சல்" என வகைப்படுத்தி விடுவாரோ என்று 'கெதக்' என்றும் இருக்கிறது.
இதை எழுதுவது பதற்றத்தை ஏற்படுத்துவதற்காகவோ, மத்திய அரசை குற்றம் சாட்டுவதற்காகவோ அல்ல. குறைந்த பட்சம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அரசுகளை எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும் தான்.
இது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களாக வந்து சோதித்துக் கொண்டதால் தான் வெளி வந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். சோதிக்கப்படாமல் இருப்பவர்கள் எத்தனை பேரோ ?
மருத்துவர் செந்தில்பாலன் ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். "நீண்ட தூர ரயில்களை ரத்து செய்ய வேண்டும்". கவனிக்க வேண்டிய செய்தி. வெளிநாட்டிலிருந்து கொரோனா இறக்குமதியாகி விடாமல் தடுக்க விமானநிலையங்களில் ஆய்வு செய்யப்படுவதாக சுகாதார துறை செயலாளர் பீலா தெரிவித்துள்ளார். அதன் விரிவாக்கம் தான் இந்த ரயில்கள் ரத்து.
வட இந்தியாவிலிருந்து இறக்குமதியான குண்டர்கள், சென்னை குடியுரிமைத் திருத்த சட்ட ஆதரவு போராட்டத்தின் போது கையில் பிடித்திருந்த போஸ்டரை நினைவில் கொள்ள வேண்டும். " டெல்லிக்கு அடுத்து எரியப் போவது சென்னையா?".
நாம் சுகாதாரத்தோடு பாதுகாப்பாக இருப்போம். அவர்கள் மாட்டு சாணியோடும், கோமியத்தோடும், யோகாவோடும் இருந்து கொள்ளட்டும்.
# தமிழ் நாட்டை "தனிமைப்படுத்துவோம்". மக்களை பாதுகாப்போம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக