ஞாயிறு, 22 மார்ச், 2020

நாடுமுழுவதும் கைதட்டி கொரோனாவுக்கு வரவேற்பு .. மாநில முதல்வர்களும் பாஜகவோடு சேர்ந்து கரவோசை .. வெளங்கிடும் ?


நக்கீரன் :கரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்களுக்கு கைதட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கரோனா பரவுவதை தடுக்கும் முன்னோட்டமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 14 மணி நேர சுய ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுய ஊரடங்கு காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில் இரவு 09.00 மணி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் அனைவரும் இன்று மாலை 05.00 மணிக்கு வீட்டின் நுழைவு வாயிலில் நின்று கைதட்டல் மூலமோ, மணியோசை எழுப்பியோ நன்றியை வெளிப்படுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில்,நாட்டின் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் உட்பட முதலமைச்சர்கள் என அனைவரும்  கைத்தட்டியும், மணியோசை எழுப்பி நன்றியை தெரிவித்து வருகின்றனர்.


சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் கரவொலி எழுப்பி மக்கள் நன்றி செலுத்தினர். அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் குடும்பத்துடன் கரவொலி எழுப்பி நன்றி செலுத்தினார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தமது இல்லத்தில் நின்று கரவொலி எழுப்பி நன்றியை வெளிப்படுத்தினார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் கரவொலி எழுப்பி நன்றி தெரிவித்தார். காவல்துறை, தீயணைப்புத் துறையினரின் சைரன் ஒலியை எழுப்பி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கரவொலி எழுப்பி நன்றி தெரிவித்தனர். ராஜ்நாத் சிங் உட்பட பல மத்திய அமைச்சர்களும் மணி ஓசை எழுப்பி நன்றி தெரிவித்தனர். அதேபோல் பொதுமக்களும் கரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஓசை எழுப்பி நன்றி வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக