திங்கள், 16 மார்ச், 2020

செல்வன்-இளமதி காதலும், முற்போக்கு நயவஞ்சக நாடக அரசியலும்:

முக்கிய தலித் தலைவர்கள் இது பற்றி ஊடகங்களில் பெரிதாக  வாய் திறக்கவில்லை, பல முற்போக்கு தலைவர்கள் களத்திற்கு நேரடியாகவும் செல்லவில்லை, காரணம் காதலன் செல்வன் சக்கிலியர் சமூகம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருந்துவிடப் போகிறது?
உடுமலை இரவி. : செல்வன்-இளமதி காதலும்,
முற்போக்கு நயவஞ்சக நாடக அரசியலும்:
பவானி-கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சமூக இளைஞன் செல்வனும் வன்னியர் சமூக இளம் பெண் இளமதியும் ஒரே தொழில் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால் நட்பு பழக்கமாகி பழக்கம் காதலாகி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் கொளத்தூர் பகுதியில் திராவிடர் விடுதலை கழக தோழர்கள் முன்னிலையில் பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். அன்று இரவே காதலனையும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தபெதிக தோழர்களையும் பெண்ணின் தரப்பு சமூக சாதி வெறியர்கள் சுற்றி வளைத்து சுமார் நாற்பது பேர் கொண்ட கும்பல் தாக்கி காதலியை மட்டும் கடத்திச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த நான்கு நாட்களாக இளமதி எங்கே, எப்படி இருக்கிறார் என்ற ஐயம் சமூக ஆர்வலர்கள் அனைவர் மனதிலும் எழுந்து வந்ததால் சமூக வலைத்தளங்களில் இளமதி எங்கே? என்ற வினாவை பெரிதாக முன் வைப்பு செய்தனர். மேலும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பாராளுமன்றத்தில் இந்த கேள்வியை முன் வைத்ததால் மாநில அரசுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக உடனடியாக நேற்று கொளத்தூர் காவல் நிலையத்தில் இளம்பெண் இளமதியை அவரது சமூக வக்கீல் சரவணன் துணையுடன் முன் நிறுத்தினர். இளமதி கொளத்தூர் காவல் துறையினரிடம் தன்னை யாரும் கடத்தவில்லை‌ என்றும் தன் விருப்பத்தின்‌ பேரிலேயே திருமணம் நடந்ததாகவும் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது.
அதன் பிறகு இளமதியின் பெற்றோர் முன்பே கொடுத்த இளம் பெண் கடத்தல் குற்றச் சாட்டின்‌ பேரில் காதலன் செல்வன் தபெதிக தலைவர் கொளத்தூர் மணி உட்பட அமைப்பு நிர்வாகிகளுடன் சேர்த்து மொத்தம் நான்கு பேர் மீது இளம் பெண் கடத்தல், கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தல் உட்பட சில பிரிவுகளின் கீழ் கொளத்தூர் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சாதி மறுப்பு திருமணத்தின் முன்னும் பின்னும் எங்கோ திட்டமிட்ட பெரிய பிழை நடந்துள்ளது.
முற்போக்காளர்கள் கவனத்திற்கு!!!
* காதலர்களுக்கு பதிவுத் திருமணம் பற்றி யாரும் வழி காட்டாமல் இருந்தது ஏன்?
* சாதி மறுப்பு திருமணம் செய்வதற்கு முன்பாக சட்ட ஆலோசனை கொடுக்காதது ஏன்?
* சாதி மறுப்பு திருமணம் செய்தால் அடுத்து என்னென்ன நாடகங்கள் அரங்கேற்றம் செய்யப்படும் என்று அந்த பெண்ணுக்கு உளவியலாக புரிய வைக்காதது ஏன்?
* திருமணம் நடந்த உடன் காதல் தம்பதிகளுக்கு பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்வாகத்தின் கவனத்திற்கு முற்போக்காளர்கள் கொண்டு செல்லாதது ஏன்?
* திருமணம் நடந்த அன்றே இளம் தம்பதிகளை தக்க பாதுகாப்பு இல்லாத இடத்தில் உங்களால் தங்க வைக்கப்பட்டது ஏன்?
* இளம் பெண்ணை கடத்தும் போது நடந்த தாக்குதலில் முக்கிய நிர்வாகிகள் யாரும் பாதிக்கப்படவில்லையே எப்படி?
* இளம் பெண்ணை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்த தலைவர்கள் அந்த பெண்ணை காவல் நிலையத்திலோ அல்லது நீதி மன்றத்திலோ முன் நிறுத்துவதற்கு முன்பே பின் வாங்க காரணம் என்ன?
* கடத்தப்பட்ட பெண் பற்றிய தகவல் எதுவும் முழுமையாக கிடைக்காத போதும் காவல்துறையிடமோ, நீதித் துறையிடமோ நீங்கள் சட்ட வழியாக முறையிடாததது ஏன்?
* காதலன் செல்வன் வழியாக நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்?
* இந்த திருமணத்திற்கு பிறகு நடந்த வன்கொடுமை சம்பவங்களை நீங்கள் ஏன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை?
மேற்கண்ட ஏதாவது ஒன்றை நீங்கள் சிந்தித்திருந்தால், சரியாக கடைபிடித்திருந்தால் கூட அவர்களின் காதல் நின்று வாழ்ந்திருக்கும்!!!!

செல்வன்-இளமதி சாதி மறுப்பு காதல் திருமணம், காதலர்கள் மீதான தாக்குதல் மற்றும் காதலி இளமதி கடத்தல் செய்திகள் ஊடகங்களில் முக்கிய பேசு பொருளாக மாறிய பிறகும் கூட முக்கிய தலித் தலைவர்கள் இது பற்றி ஊடகங்களில் பெரிதாக முக்கியத்துவம் கொடுத்து வாய் திறக்கவில்லை, பல முற்போக்கு தலைவர்கள் களத்திற்கு நேரடியாகவும் செல்லவில்லை, காரணம் காதலன் செல்வன் சக்கிலியர் சமூகம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருந்துவிடப் போகிறது?
உயர் சாதி முற்போக்காளர்கள், அருந்ததியர் சமூக இளைஞன் உயர் சாதிப் பெண்ணுடன் காதல் திருமணம் செய்து வாழக்‌ கூடாது என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது!!
சில அருந்ததியர் சமூக அரசியல் தலைவர்கள் கூட களத்திற்கு சடங்காகத் தான் சென்றார்களே தவிர காத்திரமான்‌ அரசியல் முன்னெடுப்புகளை எதுவும் செய்யவில்லை. பல அருந்ததியர் சமூக அரசியல் தலைவர்களுக்கு போராட்ட களம் எங்கு என்று கூட தெரியாமல் இருந்தனர்.
இந்த பிரச்சினையில் அனைத்து தலித் அரசியல் தலைவர்களின் வாய்களும் நன்றாக மூடியிருந்த காரணம் எதிர் வரும் 2021 சட்ட மன்ற தேர்தலில் வாக்குகளும், சட்ட மன்ற உறுப்பினர் கனவுகளும் தவிர வேறில்லை. உங்களின் வாக்குப் பிச்சை அரசியல் தலித் சமூகத்தை மீண்டும் எவ்வளவு கீழ்நிலைக்கு கொண்டு செல்கிறது பார்த்தீர்களா? நாளை, நீங்களோ! நானோ!! கூட சாதி வெறியர்களால் கொல்லப்படலாம், அப்போதும் தேர்தல் காலமாக இருந்தால் நமக்கு நினைவேந்தல் கூட்டம் கூட நடக்காது, ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு நம்மை சமூக போராளியாக்கி, தியாகியாக்கி வருடம் ஒரு முறை சாதி வெறியர்களால் மாண்டு போன சாதி ஒழிப்பு மாவீரன் என்ற அடைமொழியுடன் மாவீரன் நினைவு நாளாக்கி அதையும் அரசியலாக்கி ஆதாயம் தேடி ஓட்டுப் பிச்சை எடுக்கும் கூட்டம் தான் இந்த தலித் தேர்தல் அரசியல் கூட்டம்!!!

ஏற்கனவே தருமபுரி இளவரசன், உடுமலை சங்கர் சம்பவங்கள் நமக்கு முன் பாடமாக இருந்தும் நீங்கள் கோட்டை விட்டது ஏன்?
உங்களை நீங்களே ஆறுதல் படுத்த செல்வன் உயிர் நமக்கு முக்கியம் என்று சப்பைக்கட்டு கட்டு கட்டாதீர்கள்‌. சாதி இந்துக்களுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போகிறது. செல்வன்கள் உயிர் தான் நமக்கு முக்கியமென்றால் சாதி வெறியர்களுக்கும் நம் செல்வன்கள் உயிர்கள் தேவையில்லை!!!
அப்பாவி செல்வன்-இளமதி காதலர்கள் வாணலிக்கு பயந்து அடுப்பிற்குள் குதித்து விட்டார்களோ என்ற ஐயம் எனக்கு சில நாட்களாகவே எழுகிறது, அது எனக்கு மட்டும் தானா?
உடுமலை இரவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக