வியாழன், 26 மார்ச், 2020

அரசு மருத்துவர்களை ஏமாற்றும் எடப்பாடி - விஜயபாஸ்கர் காம்போ

சாவித்திரி கண்ணன் : ’’இதுல சந்தோசப்படறதுக்கு ஒன்னுமே இல்ல…! இது எங்களைக் கொண்டு
செய்யப்படும்  ஒரு அரசியல் ஸ்டண்ட் அவ்வளவு தான்..’’ என்றனர் அரசு மருத்துவர்கள் சிலர்!
சுகாதாரத்துறையில் பணியாற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் அனைவருக்கும் ஒருமாதச் சம்பளம் கூடுதலாக வழங்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்புக்குத் தான் இந்த ரியாக்ஷன்…!32 ஆண்டுகளாக தமிழக அரசு டாக்டர்கள் பிரச்சினைகள் பற்றி எழுதிவருகிறவன் என்ற வகையில் இந்த வார்த்தைகளுக்கு பின் இருந்த வலி என்னை ரொம்பவே வருத்தியது…!
கொரோனா பிரச்சினையையடுத்து அரசு மருத்துவர்கள் இரவு,பகல்பாராமல் கூடுதல் பங்களிப்பை சமூகப் பொறுப்புடன் செய்து வருகிறார்கள்.
அமைச்சர்விஜயபாஸ்கர்,நாளொருமேனியும்,பொழுதொரு வண்ணமுமாக மீடியாக்களுக்கு முன்னால், ஒரு ஹீரோ போல பேசமுடிகிறது என்றால், அதற்கு பின்ணணியில் தமிழக மருத்துவத்துறையில் உள்ள டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்ட சுகாதாரப்பணியாளர்களின் அபார அர்ப்பணிப்பே காரணம்!
ஆனால், இதை யார் ஒத்துக் கொண்டாலும் அமைச்சர் ஒத்துக்கொள்ளமாட்டார்! அவருக்கு அரசு மருத்துவர்கள் என்றாலே எட்டிக்காய் தான்!
அவர் எப்போதுமே தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளின் செல்லப்பிள்ளை! அவர் சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்றது முதல் அவர்களுக்கான விசுவாசத்தை வெளிப்படுத்துவதையே தன் ஜென்ம சாபல்யமாகக் கருதுகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னால், அரசு மருத்துவர்கள் நான்கு அம்ச கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து ஆறு நாட்கள் போராட்டம் நடத்தினார்கள்! அவை ஏதோ சம்பள உயர்வு கேட்டு நடத்தப்பட்ட போராட்டமா? இல்லை!
அரசுமருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளின் நலன்களை தனியார் கல்லூரிகளின் நலன்களுக்காக தாரைவார்த்துக் கொடுக்க கூடாது என்ற பிரதான கோரிக்கைகள் தான்!
# அரசு மருத்துவர்களுக்கு உயர் மருத்துவ படிப்பில் இதுவரை இருந்த 50 சதவிகித இடஒதுக்கீட்டை தனியார்கல்லூரிக்கு ஏன் தாரை வார்க்கிறாய்?
# அரசு மருத்துவர்கள் உயர்கல்வி படித்து வரும் போது அவர்களுக்கு உரிய பணியிடம் வழங்காமல் தனியார் கல்லூரி மருத்துவர்களுக்கு ஏன் முன்னுரிமை தரவேண்டும்?
# கடந்த சிலவருடங்களாக இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயித்த தரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை தரம் உயர்த்தாமல் அலட்சியம் காட்டியதன் விளைவாய் 800 டாக்டர் பணியிடங்களை தமிழக அரசு பறி கொடுத்துள்ளது. அப்படி தரம் உயர்த்தி இருந்தால் கூடுதல் நோயளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதி,அரசுமருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகள் கிடைத்திருக்கும்,அதையும் திட்டமிட்டே தனியார்மருத்துவமனைகளுக்கு அனுசரணையாக அலட்சியப்படுத்தி வருகிறார் அமைச்சர்!
# இத்துடன் அவர்கள் வைத்த ஒரே கோரிக்கை தான் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை சம்பள உயர்வு என்ற ஒத்துக் கொள்ளப்பட்ட விதியை அமல்படுத்துங்கள்! மத்திய அரசில் இருப்பது போல உரியகாலட்டத்தில் பணி உயர்வை உறுதிபடுத்துங்கள் என்பது தான்!
இந்த கோரிக்கைகள் மிக நியாயமானவை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றமும் கூறிவிட்டது.அரசும்,ஆம்,பரிசீலித்து,ஆறுவாரத்தில் நிறைவேற்றுகிறோம் எனவும் கூறிவிட்டது. அத்துடன் போராட்டம் நடத்திய 150 க்கு மேற்பட்ட டாக்டர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் தூக்கி அடித்து சேவை தரமுடியாத இடத்தில் தள்ளியதை தவிர்க்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் அறிவுரைக்கு தலையாட்டியதோடு சரி!
ஆனால்,இதுவரை எதுவும் நடக்கவில்லை! இதுதொடர்பாக அமைச்சரையோ,முதல்வரையோ டாக்டர்கள்யாரும்சந்திக்கவோ,முடியாது.ஏனென்றால்,அவர்கள் சாதரணமானவர்களா…? கடவுளுக்கு நிகரானவர்களாயிற்றே! தமிழகத்தின் கோடானுகோடிமக்களின் தலைவர்களாயிற்றே! வெறும் 18,000 டாக்டர்கள் பிரச்சினையெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல!
இதோ கொரானாவிற்கு எதிராக பெரியயுத்தம் நடத்துகிறது அரசு..!.மருத்துவபணியாளர்களுக்கு ஒரு மாதசம்பளம் கூடுதல் போனஸ் அறிவித்து மற்றதுறை பணியாளர்கள் குறிப்பாக காவல்துறையினரின் வயிற்றெரிச்சலை டாக்டர்கள் மீது திருப்பிவிட்டதோடு,மக்களிடமும் டாகடர்களுக்கே அள்ளி வழங்கியவள்ளல் என்ற பெயரும் பெற்றாயிற்று!
இனி எவனும் அமைச்சரின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டுகள், அதில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள், ஒவ்வொரு டாக்டர் பணியிட மாற்றத்திற்கும் நிர்ணயித்துள்ள கையூட்டு பற்றிய தகவல்கள்,இவை பற்றி வருமானவரித்துறை அரசுக்கு எழுதிய கடிதம் எல்லாவற்றையும்.... குட்கா ஊழல், குவாரி முறைகேடுகள் உள்ளிட்ட எதை பற்றியும் வாய் திறக்க கூடாது! மூச்! அனைத்தையும் மறப்போம்!
கொரானாவை எதிர்த்து யுத்தம் நடத்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்க! சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ஒருமாத கூடுதல் சிறப்பு உதியம் தந்த எடப்பாடி வாழ்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக