ஞாயிறு, 15 மார்ச், 2020

இளமதியை கடத்தியதாக கொளத்தூர் மணி மீது எடப்பாடியின் காவல்துறையினர் வழக்கு.. BBC : என்னை யாரும் கடத்தவில்லை" - இளமதி


  தினகரன் : ஈரோடு: சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்தியதாக தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இளமதியை திருமணம் செய்த செல்வன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஈரோடு பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன
BBC : சேலம் மாவட்டம் மேட்டூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி இன்று காவல்நிலையத்தில் ஆஜரானதை தொடர்ந்து தன் தாயுடன் அவரது வீட்டிற்கு சென்றார்.
சேலம் மாவட்டம் கொளத்தூரில், கடந்த 9ஆம் தேதி, செல்வன், இளமதி என்ற காதல் ஜோடியினர் சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். அந்த காதல் ஜோடிகளையும், திருமணத்தை நடத்திவைத்த திராவிடர் விடுதலைக் கழகத்தினரையும் கும்பல் ஒன்று கடுமையாகத் தாக்கியதோடு, பெண்ணையும் கடத்திச்சென்றது.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கும் நிலையில், 4 நாட்கள் கடந்தும் இன்னும் அந்தப் பெண் மீட்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில்தான் இன்று இளமதி காவல் நிலையத்தில் அவரை கடத்தி சென்ற கும்பலாலேயே ஆஜர்படுத்தப்பட்டார்.
இளமதியுடன் காவல் நிலையத்தில் அவரது தாய் மற்றும் சில உறவினர்கள் இருந்தனர். செல்வனும் காவல் நிலையத்தில் இருந்ததாகவும், ஆனால் அவர் இளமதியை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்வன் தரப்பில் இருந்து பேசிய பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர கூறுகையில், இளமதி தன்னை யாரும் கடத்தவில்லை என்று போலீஸாரிடம் கூறியதாக தெரிவித்தார்.
மேலும், தன் விருப்பத்துடனே திருமணம் நடந்ததாக குறிப்பிட்ட இளமதி தற்போது யாருடனும் பேச விருப்பமில்லை என்று தெரிவித்ததாக அந்த நபர் கூறினார்.
பின்னர் காவல்நிலையத்தில் இருந்து இளமதி தனது தாயுடன் அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், காதல் திருமணம் செய்ய தனது மகளை கடத்தியதாக பவானி காவல் நிலையத்தில் திவிக தலைவர் கொளத்தூர் மணி, செல்வன் உட்பட 4 பேர் மீது இளமதியின் பெற்றோர் சார்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வருகிறது.
/>ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர், செல்வன். பவானி குருப்பநாயக்கம்பாளையம் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண், இளமதி. இருவரும் ஒரே கம்பெனியில் வேலைபார்க்கும்போது பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து, இருவரும் சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து மணப்பெண் இளமதி கடத்தி செல்லப்பட்டார்.
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசினார். இப்படியான சூழ்நிலையில் இளமதி எங்கே? என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தது
"பணிபுரியும் இடத்தில் தான் இளமதியை சந்தித்தேன். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக இருந்தோம். மற்றவர்கள் என்னிடம் எவ்வளவு நெருங்கி பழகினாலும், சாதிரீதியிலான பாகுபாடும் இருக்கும். இளமதியிடம் கூட பலர் எனது சாதியை குறிப்பிட்டு தள்ளி இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இளமதி என்னிடம் எந்த பாகுபாடும் காட்டியதில்லை. மிகவும் தைரியமானவள், என்னைப் போன்றே சமத்துவ பார்வை கொண்டவள். சாதியை ஒழிக்கவேண்டும் என நினைப்பவள். ஆனால், அவளின் பெற்றோர்கள் தீவிர சாதிப்பற்று உடையவர்கள். அதனால், தான் இளமதியின் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்துவிட்டு, காவல்நிலையத்தில் தஞ்சமடைய முடிவு செய்தோம். ஆனால், திருமணம் முடிந்த ஆறு மணி நேரத்தில் என் கண்முன்னே இளமதியை அடித்து துன்புறுத்தி இழுத்துச் சென்றனர்" என்று பிபிசியிடம் பேசிய செல்வன் கூறினார்.
"மேலும், எங்களுக்கு திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர்களையும், என்னையும் கடுமையாக தாக்கினர். என்னிடமிருந்த செல்போன், பணம் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டனர். தாக்கியவர்களில் சிலர் எனது சாதியை குறிப்பிட்டு என்னை திட்டி அடித்து உதைத்தனர்" என தெரிவிக்கிறார் செல்வன்.
கடத்தப்பட்ட இளமதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். தாக்குதல் நடத்தியவர்களில் 18 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக