திங்கள், 2 மார்ச், 2020

BBC : விடுதலைப் புலிகள் சகோதரப் படுகொலைகள் மூலமே ஒற்றை இயக்கமாயினர்: தமிழ் எம்.பி. சுமந்திரன்


இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் - பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன என்றும், பின்னர் சகோதரப்படுகொலைகள் மூலமாகவே ஒரே இயக்கம் தலையெடுத்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிராக - இறுதியாகவும் தனித்தும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையே இவ்வாறு 'சகோதரப் படுகொலைகளில் ஈடுபட்டதாக' சுமந்திரன் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, சுமந்திரன் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சி தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு யுத்த காலத்தைக் கடந்து வந்த கட்சியாகும். யுத்த காலத்தில் அடங்கிப் போயிருந்த கட்சி, செயலிழந்திருந்த கட்சி. திடீரென்று ஜனநாயகப் பண்புகள் வந்து விடாது; அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். ஏனென்றால் 30 வருடங்கள் வேறு விடயத்துக்குப் பழகிப் போய்விட்டோம். அது, சொல்வதைச் செய்வதாகும்".

சுமந்திரன் என்ன சொன்னார்?
 "யுத்த காலத்தில் பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன. ஒன்று மட்டும் இருக்கவில்லை. அது ஒன்றாக வந்தது எப்படியென்று எல்லோருக்கும் தெரியும். சகோதரப் படுகொலை மூலமாகவே, அது ஒன்றாக வந்தது. ஆனால், ஜனநாயக வழியில் அப்படியெல்லாம் நாம் செய்ய முடியாது" என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதன்போது மேலும் தெரிவித்தார்.
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பேசிய மக்கள் முன்னேற்றக் கட்சி செயலாளர் அருண் தம்பிமுத்து, "சகோதரப் படுகொலை மூலமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்ந்தனர் என்று கருத்துத் தெரிவிக்கும் சுமந்திரன், வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடைய உதவிகளைப் பெற்றே, அரசியல் செய்து வருகிறார்" என்று கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்போது அருண் தம்பிமுத்து இந்தக் கருத்தைத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக