சனி, 21 மார்ச், 2020

பட்டாசு ஆலை வெடி விபத்து: பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு - 9 பேர் படுகாயம் சாத்தூர் அருகே

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: பெண்கள் உள்பட 8 பேர் பலி - 9 பேர் படுகாயம்தினத்தந்தி : சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- தாயில்பட்டி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிப்பிப்பாறையில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நேற்று காலை வழக்கம் போல் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அந்த ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்தநிலையில் பட்டாக மருந்துகளில் திடீரென உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதற தொடங்கின. இதையடுத்து பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். ஆனால் சற்று நேரத்தில் தீ பரவி ஆலையின் அறைகள் இந்த வெடிவிபத்தில் தரைமட்டமாகின.
இந்த சம்பவத்தின் போது கட்டிட சிதறல்கள் சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் வரை பறந்துசென்று விழுந்துள்ளன. தகவல் அறிந்து கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்றனர். பட்டாசு ஆலைக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாததால் அங்கு மீட்பு வாகனங்கள் செல்ல சிரமப்பட்டன.

இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். பின்னர் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது.

இந்த சம்பவத்தில் அந்த ஆலையில் பணியாற்றிய தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா மைப்பாறையை சேர்ந்த பெண்களான ராணி (வயது 42), ஜெயபாரதி (40), பத்திரகாளி (33), தாமரைச்செல்வி (35), தங்கம்மாள் (39), வேலுத்தாய்(43), கொலகட்டா குறிச்சியை சேர்ந்த காளியம்மாள் (63) ஆகிய 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுமார் 10 பேரை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்குபட்டியைச் சேர்ந்த முருகையா (57) பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த முக்கூட்டுமலையைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி பொன்னுத்தாய் (48), சிங்கராஜ் மனைவி முருகலட்சுமி (37), காளிராஜ் மனைவி சுப்பம்மாள் (60), ராமு மனைவி பேச்சியம்மாள் (49), மாரிமுத்து மகன் மாடசாமி (25), ஜெயராம் (57), சித்திரம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (60), லட்சுமிபுரத்தைச் சேர்ந்த அய்யம்மாள் (60), கழுகுமலையைச் சேர்ந்த சிவராமன் மனைவி சங்கரேசுவரி (63) ஆகிய 9 பேருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த பொன்னுத்தாய், மாடசாமி ஆகிய 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், முருகலட்சுமி, பாலசுப்பிரமணியன், பேச்சியம்மாள் ஆகிய 3 பேரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பட்டாசு ஆலை தீ விபத்தில் இறந்த மைப்பாறையைச் சேர்ந்த 6 பெண்களும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது.

தீ விபத்தில் பலியான முருகையாவுக்கு செல்லத்தாய் என்ற மனைவியும், சிவசுப்பிரமணியன் (28) என்ற மகனும், சசிரேகா (22), காளசுவரி (20) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விருதுநகர் கலெக்டர் கண்ணன், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், சாத்தூர் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது.

சம்பவம் தொடர்பாக குத்தகைதாரர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யவும், பட்டாசு ஆலை உரிமையாளரை கைது செய்யவும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்த வெடி விபத்து தொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக