ஞாயிறு, 1 மார்ச், 2020

50 நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் தகவல்

50 நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் தகவல் தினத்தந்தி : சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,900 ஆக உயர்ந்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. பீஜிங், சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தோன்றி நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிர்ப்பலி வாங்கி வருகிறது. இந்த வைரசின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்குவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால், அதில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் அரசு திணறுகிறது. ஒட்டுமொத்த சீனா முழுவதும் மேலும் 47 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,900 ஆக உயர்ந்து விட்டது. இதைப்போல வைரசின் பிடியில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கையும் 79,251 ஆக உயர்ந்துள்ளது.


சீனாவில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் இவ்வாறு இருக்க, தற்போது வெளிநாடுகளிலும் அதன் வீரியம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்றுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் சீனாவுக்கு வெளியே 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,027 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. பலி எண்ணிக்கையும் 67 ஆக அதிகரித்து இருக்கிறது.

இதுவரை கண்டறியப்படாத நாடுகளாக அறியப்பட்ட நியூசிலாந்து, ஐஸ்லாந்து, நைஜீரியா, மெக்சிகோ, பெலாரஸ், ஆலந்து போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தென்பட தொடங்கி இருக்கிறது. உலக அளவில் இந்த வைரஸ் பரவலை ‘தீவிரம்’ என பட்டியலிட்டிருந்த உலக சுகாதார நிறுவனம், தற்போது அதை ‘மிக தீவிரம்’ என்ற நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.

சீனாவுக்கு வெளியே மிக அதிகமாக ஈரானில் 43 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அங்கு 593 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,931 பேருக்கு வைரஸ் தொற்றியிருக்கும் தென்கொரியாவில், கொரோனா பலி 16 ஆக உயர்ந்து விட்டது. மேலும் இத்தாலியில் 600-க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதைப்போல ஹாங்காங்கில் 94 பேர் (2 பேர் சாவு), தைவானில் 34 பேர் (ஒருவர் சாவு), மக்காவுவில் 10 பேர் என பல நாடுகளில் வைரஸ் தொற்று தீவிரமடைந்து உள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் சாண்டா கிளாரா கவுண்டியை சேர்ந்த 65 வயது நபர் ஒருவர் புதிதாக வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். அங்குள்ள சொலானோ கவுண்டியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 26-ந்தேதி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தொடர்ந்து இந்த மாதம் 2-வது வாரம் லாஸ்வேகாசில் நடத்த திட்டமிட்டிருந்த ஆசியான் உச்சிமாநாட்டை அமெரிக்கா ஒத்திவைத்திருக்கிறது. இத்தாலி போன்ற நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு குடிமக்களுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதைப்போல பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் இத்தாலிக்கு விமான இயக்கத்தை ரத்து செய்து உள்ளன.

சீனாவின் உகானில் வசித்து வந்த இந்தியர்கள் உள்பட 112 பேர் சமீபத்தில் விமானப்படை விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டு இந்தோ-திபெத் படையினரின் முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், எனினும் 2 வாரங்களுக்கு அவர்கள் அந்த முகாமிலேயே வைக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே தாய்லாந்தில் பயிற்சியை முடித்து கப்பலில் அந்தமான் திரும்பிய பாதுகாப்பு படைவீரர்கள் 160 பேர் தொடர்ந்து நடுக்கடலிலேயே கப்பலில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். எனினும் அங்கு இதுவரை யாருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை.

இவ்வாறு வைரசின் தீவிரம் அதிகமாக இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் நூற்றாண்டுக்கு ஒருமுறை தோன்றும் மிக தீவிரமான வைரசாக இருப்பதாகவும், இதற்கு எதிராக உலக நாடுகள் வலிமையாக போராட வேண்டும் எனவும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக