புதன், 4 மார்ச், 2020

கொரோனா வைரஸ் இந்தியாவில் 28 பேருக்கு தொற்றியது: 78 நாடுகளில் பரவியது நோய்

BBC :சீனாவை மட்டும் ஆட்டிப் படைத்து வந்த கொரோனா வைரஸ் தற்போது உலகில் 78 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா, தென் கொரியா, இரான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், ஒப்பீட்டளவில் இந்தியா பெரிய பிரச்சனை இல்லாமல் இதுவரை தப்பித்துவந்தது.
முதலில் கேரளாவில் மட்டுமே மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினர். சில நாள்களுக்கு முன்புவரை இந்தியாவில் யாருக்குமே கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், திங்கள் கிழமை டெல்லியில் ஒருவருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும் என இந்தியாவில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதில் டெல்லிக்காரர் இத்தாலிக்கும், தெலங்கானா நபர் துபாய்க்கும் பயணம் செய்து வந்திருந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இத்தாலி பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்றுவரை இந்த மூவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.

டெல்லியில் கொரோனா பாதித்த நோயாளி மாணவர்களுக்கு விருந்து அளித்தது தெரிய வந்த நிலையில், நொய்டாவில் இரண்டு பள்ளிகள் சில நாள்களுக்கு மூடப்பட்டன.

14 இத்தாலி பயணிகளுக்கு

தெற்கு டெல்லியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த 21 இத்தாலி பயணிகளுக்கும், மூன்று இந்தியர்களுக்கும் கொரோனா இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு இவர்கள் அனைவரும் இந்தோ- திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாமுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டனர்.
>அங்கு அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் 14 இத்தாலியர்களுக்கும், ஒரு இந்தியர்களுக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பு (பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ) புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை ஜெய்ப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றிய இத்தாலி பயணியின் மனைவிக்கும் இந்த நோய் இருப்பது தெரியவந்தது என்றும் அந்த அறிக்கை கூறியது.
முதலில் டெல்லியில் கொரோனா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட பயணியின் ஆக்ரா உறவினர்கள் 6 பேருக்கும் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்கிறது பிஐபி அறிக்கை. ஆக திங்கள்கிழமை மட்டும் இந்தியாவில் புதிதாக 22 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே நோய் உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கையையும் சேர்த்தால் இந்தியாவில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 25.
இது தவிர தெலங்கானா மாகாணத்தில் உயர் வைரல் சுமையோடு இரு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.


ஹோலி கொண்டாட்டம் இல்லை: மோதி அறிவிப்பு

"கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, மக்கள் கும்பலாக கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று உலகம் முழுவதும் வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டம் எதிலும் பங்கேற்பதில்லை என்று நான் முடிவு செய்துள்ளேன்" என்று பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.


ஒரே நாளில் இந்தியாவில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்த நோயை சமாளிப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கு ஓர் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சத்யேந்திர ஜெயின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஹர்ஷவர்தன், "கோவிட்-19 (கொரோனா வைரஸ்) நோயால் நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட, நாம் ஒருங்கிணைந்து ஒரு அலகாக செயல்படவேண்டும்" என்று தெரிவித்தார்.
நாட்டிலும், உலகிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து செயலாளர் பிரீத்தி சுதன் விவரித்தார். உலகில் 78 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக அவர் அப்போது சுட்டிக்காட்டினார்.
நேற்று செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்ட திருத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், சுய அறிக்கை, சீனா, இரான், தென் கொரியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிற கோவிட்-19 பாதித்த நாடுகளுக்கு மேற்கொள்ளும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது ஆகியவை குறித்தும் அவர் விவரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக